புதுதில்லி, பிப்.24-

வரும் 2018 மார்ச் 15 அன்று அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரித்திட மத்தியத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தலைநகர் புதுதில்லியில், ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரங்கள்மீது கடும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ள, நாட்டின் நலன்களைக் காவுகொடுக்கும் விதத்தில் நடந்துவரும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியமைத்து, அனைத்துத் தொழிலாளர்களையுமே காசுவல் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் மாற்றியமைத்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.  மேலும், மத்திய அரசு நாட்டிலுள்ள அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையுமே ஒழித்துக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக ரயில்வேத்துறையைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களிடம் ஒப்படைத்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்,  ராணுவம் சம்பந்தமான உற்பத்திகளையும்கூட தனியாரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருத்தல் முதலானவை குறித்து கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.  இவை அனைத்தும் மக்கள்விரோத, தேச விரோத நடவடிக்கைகளாகும். மேலும் பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெற்ற கார்ப்பரேட்டுகள் அவற்றைத் திருப்பித்தராததன் காரணமாக பொதுத்தறை வங்கிகள் பலவற்றில் மிகப்பெரிய அளவில் செயல்படா சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அது நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டுச்சதி செய்து வங்கிகளை மோசடி செய்வது என்பது அரசாங்கத்தின் தேச விரோத நடவடிக்கைகளாகும்.

மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள், 2018-19 பட்ஜெட்டுக்கு எதிராகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அடிப்படையில் இந்த பட்ஜெட் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பட்ஜெட் என்றும், பட்ஜெட்டில் உருப்படியாக ஒதுக்கீடு எதுவுமே செய்திடாது மக்களை ஏமாற்றும் விதத்தில் வாய்ச்சவடால் அளித்துள்ள பட்ஜெட் என்றும் கூறியுள்ளது.

மேலும் மத்திய அரசு, 47ஆவது இந்தியத்  தொழிலாளர் மாநாட்டின் அமர்வை கள்ளத்தனமாக ஒத்திவைத்திருப்பதன்மூலம் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பதையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.

மத்திய ஆட்சியாளர்களின் இத்தகைய தேச விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக நாட்டின் பல பாகங்களில் ஸ்தாபனரீதியாகத் திரண்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல முறைசாராத் தொழிலாளர்களும்கூட பெரும்திரளாகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதை கூட்டம் திருப்தியுடன் பாராட்டியது.

நிலக்கரி மற்றும் போக்குவரத்துத்துறைகளில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும் சம்மேளனங்களும் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட போராட்டங்களை விரைவில் முன்னெடுத்துச்செல்ல இருக்கின்றன. இராணுவ உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல்வேறு தொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனங்களும் 2018 மார்ச் 15 அன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூட்டாகத் தீர்மானித்துள்ளன. இதேபோன்று பல்வேறு துறைசார்ந்த தொழிலாளர்களும் போராட்டப் பாதையில் முன்னேற முடிவுசெய்துள்ளனர்.

மத்தியத் தொழிற்சங்கங்கள் வரவிருக்கும் காலங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான தயாரிப்புப்பணிகளை உக்கிரப்படுத்தும் அதே சமயத்தில், வரும் 2018 மார்ச் 15 தினத்தை அகில இந்திய எதிர்ப்பு தினமாக அனுசரித்திடவும் முடிவு செய்துள்ளது. அன்றையதினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்துறை உற்பத்தித் தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்தும், மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிச, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, தொமுச ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: