வரும் மார்ச் 15 அன்று அகில இந்திய எதிர்ப்பு நாள் கடைப்பிடித்திட மத்தியத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தலைநகர் புதுதில்லியில், ஐஎன்டியுசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ள, நாட்டின் நலன்களைக் காவு கொடுக்கும்விதத்தில் நடந்துவரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வங்கிகளில் மோசடி-கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டுச்சதி
தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியமைத்து, அனைத்துத் தொழிலாளர்களையுமே காசுவல் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் மாற்றியமைத்திருப்பதற்கு கூட்டத்தில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், மத்திய அரசு நாட்டிலுள்ள அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையுமே ஒழித்துக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக ரயில்வே துறையைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களிடம் ஒப்படைத்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ராணுவம் சம்பந்தமான உற்பத்திகளையும்கூட தனியாரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருத்தல் முதலானவை குறித்து கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன. இவை அனைத்தும் மக்கள் விரோத,தேச விரோத நடவடிக்கைகளாகும். மேலும் பொதுத் துறை வங்கிகளில் கடன்களைப் பெற்ற கார்ப்பரேட்டுகள் அவற்றைத் திருப்பித் தராததன் காரணமாக பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் மிகப்பெரிய அளவில் செயல்படா சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அது நாட்டிலுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டுச்சதி செய்து வங்கிகளை மோசடி செய்வது என்பது அரசாங்கத்தின் தேச விரோத நடவடிக்கைகளாகும்.
வாய்ச்சவடால் பட்ஜெட்
மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள், 2018-19 பட்ஜெட்டுக்கு எதிராகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அடிப்படையில் இந்த பட்ஜெட் தொழிலாளர் விரோத, மக்கள்விரோத பட்ஜெட் என்றும் பட்ஜெட்டில் உருப்படியாக ஒதுக்கீடு எதுவுமே செய்திடாதுமக்களை ஏமாற்றும் விதத்தில் வாய்ச்சவடால் அளித்துள்ள பட்ஜெட் என்றும் கூறியுள்ளது.மேலும் மத்திய அரசு, 47 ஆவது இந்தியத்தொழிலாளர் மாநாட்டின் அமர்வை கள்ளத்தனமாக ஒத்திவைத்திருப்பதன் மூலம் முத்தரப்புபேச்சுவார்த்தை என்பதையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.மத்திய ஆட்சியாளர்களின் இத்தகைய தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக நாட்டின் பல பாகங்களில் ஸ்தாபனரீதியாகத் திரண்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல முறைசாராத் தொழிலாளர்களும் கூட பெரும் திரளாகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதை கூட்டம் திருப்தியுடன் பாராட்டியது.
போராட்டப் பாதையில்
நிலக்கரி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும் சம்மேளனங்களும் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட போராட்டங்களை விரைவில் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன. இராணுவ உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல்வேறு தொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனங்களும் 2018 மார்ச் 15 அன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூட்டாகத் தீர்மானித்துள்ளன. இதேபோன்று பல்வேறு துறைசார்ந்த தொழிலாளர்களும் போராட்டப் பாதையில் முன்னேற முடிவு செய்துள்ளனர்.மத்தியத் தொழிற்சங்கங்கள் வரவிருக்கும் காலங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை உக்கிரப்படுத்தும் அதே சமயத்தில், வரும் 2018 மார்ச் 15தினத்தை அகில இந்திய எதிர்ப்பு தினமாக அனுசரித்திடவும் முடிவு செய்துள்ளது. அன்றையதினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத் துறை உற்பத்தித் தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்தும் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராகவும் முழக்கங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, தொமுசஆகிய அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.