சொல்லி அடி ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்ப்பதை விட ஹலோ எம்எம் 106. 4 கேட்பதற்குத்தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள். இதற்குக் காரணம் சொல்லி அடி நிகழ்ச்சி. சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் இது ஒலிபரப்பாகும். இதில் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் எடுக்கப்படும் ரன்களை சரியாகக் கணித்து முன் கூட்டியே சொல்லும் நேயர்களுக்குப் பரிசு வழங்கப்படும். பரிசைத் தவிர்த்து இது இவ்வளவு பிரபலமாக மிக முக்கிய காரணம் இதன் தொகுப்பாளர்கள் ஆர்.ஜெ. சுரேஷ் மற்றும் அலோசிஸ்தான். இவர்களின் துள்ளளான பேச்சிற்கு நேயர்கள் மட்டுமல்ல நானும் ரசிகன்தான்.

கிராமங்களில் காலை 6 மணிக்கு ஒரு தெருவின் முனையில் கிளம்பும் கும்பல் ஒன்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று, அங்க இருக்கும் டீக்கடையில் ஒரு டீயையும், இரண்டு வடையையும் சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு வீடு திரும்பும். இது கிராமங்களில் நடக்கும் வழக்கமான நிகழ்வுகளில் உண்டு. இந்த நிகழ்வை முழுமைப்படுத்துவதில் இரண்டு ஊடகங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஒன்று நாளிதழ். மற்றொரு வானொலி.
காலை டீக்கடைக்காரர் அடுப்பைப் பற்ற வைக்கும் போது ஒலிக்கத் தொடங்கும் வானொலி இரவில் அடுப்பு அணையும் போதுதான் தனது ஒலியை நிறுத்தும். அதுவரை அந்தக் டீக்கடைக்கு வரும அனைவருக்கும் பொழுதுபோக்கு வானொலிதான். இதைத் தவிர்த்து கிராமங்களில் சலூன் கடைகள், பெட்டிக் கடைகள், சிறு மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வானொலிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தன.
இப்படிப் பல சிறப்புகளை வானொலியைக் கொண்டாட ஒரு நாள் வேண்டும் என்று முதன் முதலாகக் கோரிக்கை விடுத்தது ஸ்பானிஸ் வானொலி அகாடமி. இந்தக் கோரிக்கையை ஏற்று யூனஸ்கோ இது தொடர்பாக ஒரு அறிக்கை ஐநா பொதுச் சபையில் வைத்தது. இதன் அறிக்கையின்படி ஐநா சபையின் வானொலி உருவாக்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்படும் என்று 2011 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. வானொலியைக் கொண்டாடவும், அனைத்து நிலையங்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவை ஏற்ப்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது வானொலி தினம் 2012 ஆம் கொண்டாடப்பட்டது. வானொலி மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் கொண்டு சொல்ல வேண்டும் என்ற கருப் பொருளை கொண்டு இந்தத் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்று பொருளிலும், 2015 ஆம் ஆண்டு இளைஞர்களும் வானொலியும் என்ற பொருளிலும், 2016 ஆம் ஆண்டு பேரிடர் மற்றும் அவசர காலங்களில் வானொலி என்றப் பொருளிலும், 2017 ஆம் ஆண்டு வானொலி நானும் என்ற பொருளிலும் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக வானொலி தினம் வானொலியும் விளையாட்டும் என்றப் கருப்பொருளை முன் நிறுத்தி ஆண்டு முழுவதும் கொண்டாப்படவுள்ளது. இதன்படி பாரம்பரிய விளையாட்டுகளை மக்களுக்கு அறியச் செய்தல், விளையாட்டு போட்டியை ஒளிபரப்புவதில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருதல், போட்டிகளின் மூலம் அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் இந்த வானொலி தினம் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர்த்து இந்தத் தினத்தில் பெண்களுக்கான விளையாட்டுகளை ஒலிபரப்ப அதிக முன் முயற்சிகள் எடுக்கப்படும் என்று யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரலான ஆட்ரி ஆசூலே வெளியிட்டுள்ள வானொலி தினம் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, “விளையாட்டுத் துறையில் பாலின சமத்துவத்தை கொண்டு வருவதில் ஒருங்கிணைந்த முயற்சியாக இது இருக்கும். உலக ஊடக கண்காணிப்பு திட்ட அறிக்கையின்படி விளையாட்டுக் கட்டுரைகளில் 4 விழுக்காடும், விளையாட்டுச் செய்திகளில் 12 விழுக்காடு மட்டுமே பெண்களுக்கு இடம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுபாட்டை எதிர்த்து விளையாட்டு துறையில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் வேலை மிகப் பெரியது. எனவே இந்த முயற்சியில் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.” -இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஊடகங்களின் வடிவம் மாறிக்கொண்டே வருகின்றன. அச்சு ஊடகத்தில் தொடங்கிய ஊடகப்ப பயணம் இன்று செயலியில் வந்து நிற்கிறது. ஆனால் அன்று முதல் இன்றுவரை மாறாமல் உள்ள ஒரே ஊடகம் என்றால் வானொலி மட்டும்தான். இரவு 9 மணிக்கு மேல் வானொலியில் போடப்படும் பாடலுக்குத் தாசர்களாயிருப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிபட்ட காலக் கட்டத்தில் விளையாட்டை ஊக்குவிக்க வானொலி பயன்படுத்துவது என்பது வரவேற்கத்தக்க ஒன்று.
இந்த ஓராண்டு முடியும் போது விளையாட்டு நிழ்ச்சிகளை ஒலிபரப்புதற்கொன்று தனி வானொலியும், அதைத் தொகுத்து வழங்க விளையாட்டு ஆர்.ஜே.க்களையும் நாம் உருவாக்கியிருந்தால் அதுதான் இந்தக் கருப்பொருளின் உண்மையான வெற்றியாகும்.

முன்னோடி
சில ஆண்டுகளாகதான் தனியார் வானொலிகள் நிறைய வரத் தொடங்கியுள்ளன. ஆனால் 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்த ஒரே ஒரு வானொலி கோடை பண்பலைதான். காலை 4 மணிக்கு தொடங்கும் இதன் ஒலிபரப்பு இரவு 10 மணிக்கு முடிவடையும். இந்த வானொலி கேட்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரே நிகழ்ச்சி தொகுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்தான். காலை முதல் மாலை வரையில் பெரும்பாலான நேரங்கள் இவரின் குரலுடன் நேயர்கள் பயணிப்பார்கள். எனவே கோடை பண்பலை 100. 5 தமிழகத்தில உள்ள வானொலிக்கு எல்லாம் முன்னோடி என்று கூறுவார்கள்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.