விடுதலைப் போராட்டத்தின் விளை நிலமாக விளங்கிய தூத்துக்குடி மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளது. சுதந்திரப் போராட்ட போராளிகளான வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரை தந்த மண் தூத்துக்குடி. சுப்பிரமணிய சிவா, வஉசியோடு இணைந்து களம் கண்ட பூமி அது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் சுதேசி போராட்டம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தூத்துக்குடிதான். இன்றைக்கு விடுதலைப்போராட்டத்தின் வீர வாரிசுகளின் பாசறையாக விளங்குகிற, அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு எதிராக சுதேசி உணர்வை ஊட்டுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது சாலப்பொருத்தமாகும்.

பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்த திடலுக்கு வஉசி, பாரதியார் பெயரும் மாநாட்டு அரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள், நூற்றாண்டு நாயகர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன், கே.முத்தையா ஆகியோரது பெயரும் சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டுக் கொடியை கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மாநாட்டை கனகச்சிதமாக நடத்தி முடித்த மாநாட்டு வரவேற்புக்குழுவையும் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநாட்டின் அரங்க ஏற்பாடு முதல், செந்தொண்டர் பேரணி, மாபெரும் பொதுக்கூட்டம் என அனைத்தையும் மிகச் சிறப்பாக தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்புக்குழுவின் தலைவர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், வரவேற்புக்குழுவின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்குழு செயலாளருமான கே.எஸ். அர்ச்சுனன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு தோழரும் மிகுந்த அர்ப்பணிப்போடு மாநாட்டு பணிகளை நிறைவேற்றினர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மாநாட்டை துவக்கி வைக்க அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் வாழ்த்துரை வழங்க மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார்.
இன்றைய இந்திய அரசியல், சமூக, பொருளாதார சூழலை அலசி ஆராய்ந்து, பயணிக்க வேண்டிய இலக்கை தெளிவாக எடுத்துரைப்பதாக இந்த தலைவர்களின் உரை அமைந்தது. மாநாட்டு அரங்கிலும் பொதுக்கூட்டத்திலும் விடுதலை போராட்ட வீரர், கட்சியின் மூத்த தலைவர் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை முனையாக விளங்குகிற தோழர் என்.சங்கரய்யா சிம்ம கர்ஜனை புரிந்தார். இதுவரை நடந்த 22 மாநாடுகளிலும் தாம் பங்கேற்றிருப்பதாக தோழர் சங்கரய்யா கூறிய போது மாநாட்டு அரங்கம் ஆர்ப்பரித்தது. ஆரவாரம் செய்தது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கிய 32 தலைவர்களில் இன்னமும் நம்மோடு இருந்து வழிகாட்டக்கூடியவர்கள் தோழர் என்.சங்கரய்யாவும், தோழர் வி.அச்சுதானந்தனும் மட்டுமே. அனுபவச் செறிவோடும், எதிர்கால தொலை நோக்கோடும் என்.சங்கரய்யா வழங்கிய உரைகள் கட்சியின் வரலாற்று ஆவணங்கள். கேரளத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு கொடியை தோழர் வி.அச்சுதானந்தன் ஏற்றி வைத்தார். தமிழகத்தில் இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேச அழைக்கப்பட்டிருந்தனர். இந்த மூன்று தலைவர்களின் பேச்சும் இடதுசாரிகளிடையே ஒற்றுமை வலுப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, இடதுசாரி கட்சிகள் மென்மேலும் ஒற்றுமையோடு சேர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் கே.பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முந்தைய செயலாளர் முன்மொழிய மாநிலக்குழு ஏகமனதாக செயலாளர் தேர்வை மேற்கொண்டது பொதுவாக வேறு எந்தக்கட்சியிலும் காண முடியாத ஒன்றாகும். கட்சியின் மாநிலக்குழு மற்றும் மாநில செயற்குழு உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகம் சந்திக்கிற அனைத்து பிரச்சனைகளும் இந்த தீர்மானங்களில் அலசி ஆராயப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி முன்வைக்கும் மாற்றுத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வும் முன்வைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில், தொழிலாளர், இளைஞர், மாணவர், பெண்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் சந்திக்கும் வாழ்க்கை நெருக்கடியும், அதற்கான தீர்வும் தீர்மானங்களில் உள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தீர்மானங்கள் விவாதிக்கின்றன. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கிய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டும் தீர்மானம் தமிழகத்திலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.
மாநாட்டில் முதல் தீர்மானம் தமிழக வளர்ச்சிக்கு செய்ய வேண்டியது என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. தமிழகத்தின் விவசாயத்துறை, தொழில் துறை, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகிய துறைகள் குறித்து ஆராயும் இந்த தீர்மானம் தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் வேலையிழப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதை கவலையோடு சுட்டிக்காட்டுகிறது. விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகளை முன்னுரிமைத்துறையாக கொண்டு திட்டங்கள் தீட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை தீர்மானம் வலியுறுத்துகிறது. மாநாட்டின் முத்தாய்ப்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மக்கள் விரோத மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து பிரச்சார பேரியக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடத்தப்படும் யுத்த பேரிகையாக இந்த இயக்கம் நடைபெறவுள்ளது. மத்தியில் உள்ள வகுப்புவாத பாஜக அரசு கார்ப்பரேட்டுகளின் கருவூலத்தை நிரப்புவதையே கர்ம சிரத்தையாக மேற்கொள்வதையும் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்றவை மக்களின் வாழ்வை நாசம் செய்துள்ளதையும்,சிறுபான்மையினர், தலித்துகள் வேட்டையாடப்படுவது, கருத்துரிமை அதிகாரத்தின் வாளால் கழுத்தறுக்கப்படுவது போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்வதாக இந்த இயக்கம் இருக்கும்.
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மோடி அரசின் எடுபிடி அரசாகவே மாறி அனைத்துத் துறைகளையும் நாசம் செய்து வருகிறது. துணைவேந்தர் நியமனம் முதல் சத்துணவு பணியாளர் நியமனம் வரை லஞ்சம் நீக்கமற நிறைந்துள்ளது. சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுகிறது. மாநில உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறிக்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அரசு வாய்மூடி மௌனியாக இருக்கிறது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களை தட்டி எழுப்புவதாக இந்த பிரச்சார இயக்கம் நடைபெறும். தூத்துக்குடி நகரில் கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்கும் பேரணியை நடத்த இயலாத சூழலில் செந்தொண்டர் அணி வகுப்பை நடத்துவது என கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. மாநிலம் முழுவதுமிருந்து ராணுவ மிடுக்கோடு செந்தொண்டர்கள் அணிவகுத்த வந்த காட்சி காவியச் சிறப்புமிக்கது. இந்த அணி வகுப்பை துவக்கி வைத்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தற்போது தாம் கேரளத்தில் இருப்பது போலவே உணர்வதாக கூறியது தமிழகத்தில் கட்சி வளர்ச்சியை பறைசாற்றுவதாக அமைந்தது. பொது மக்களுக்கு எவ்விதச் சிரமமும் தராமல் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் செந்தொண்டர்கள் அணிவகுத்து வந்ததை தூத்துக்குடி நகர மக்கள் நெஞ்சார பாராட்டினார்கள். சாலையின் இருமருங்கும் குழுமி நின்று வாழ்த்துக் கூறினர். ஆனால் தூத்துக்குடி மாநகர காவல்துறையால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை போலிருக்கிறது. அமைதியாக அணிவகுத்து வந்த தோழர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட காவலர்கள் ரீப்பர் கட்டைகளை எடுத்து கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் திருப்பூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் அகிலேஷ் மண்டை உடைக்கப்பட்டது. மேலும் பல தோழர்கள் படுகாயமடைந்தனர். ஆனாலும் தோழர்கள் காட்டிய நெஞ்சுரமும், கட்டுப்பாடும் பாராட்டத்தக்கது. அணிவகுப்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு காவல்துறை நடந்துகொண்டபோதும் திட்டமிட்டபடி இலக்கை நோக்கி முன்னேறியபடி தோழர்கள் உறுதியாக இருந்து அணிவகுப்பை வெற்றிகரமாக்கினர். தூத்துக்குடி காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாநிலக்குழு அறைகூவலுக்கேற்ப நடந்து வருகின்றன. திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுவன் அகிலேசும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பியுள்ளான். இதிலிருந்தே தெரியும் எத்தகைய தலைமுறையை செங்கொடி இயக்கம் உருவாக்கி வருகிறது என்பதை. செங்கொடி அணிவகுப்பை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டம் கடல் இடம்மாறி திடலுக்குள் வந்துவிட்டதோ என வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது. தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான செங்கொடி இயக்கத்தின் புதல்வர்களும் புதல்விகளும் பொதுக்கூட்டத் திடலை நிறைத்தனர். புதிய உத்வேகத்தோடு களப்போராட்டத்தை தொடர புறப்பட்டுள்ளனர். அடுத்து வரும் மூன்றாண்டுகளில் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது, இடது ஜனநாயக அணியை சக்தியாக உருவாக்குவதை அன்றாடப்பணிகளில் ஒன்றாக இணைப்பது, வர்க்க வெகுஜன அமைப்புகளை விரிவாக்கி வலுப்படுத்துவது என மூன்று முத்தான கடமைகளை மாநாடு உருவாக்கி தந்துள்ளது. இந்த கடமைகளை நிறைவேற்றி தமிழகத்தில் வலிமைமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, இடது ஜனநாயக அணியை உருவாக்குவோம். மாநாடு தீர்மானித்துள்ள பிரச்சார பேரியக்கத்தை எழுச்சியோடு நடத்துவோம். உப்புக்கும், முத்துக்கும் பெயர் பெற்ற தூத்துக்குடி ஒரு புதிய எழுச்சியை உருவாக்கி தந்துள்ளது. முன்னேறுவோம்.

செங்கொடி உயரட்டும் தமிழகம் நிமிரட்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.