தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதிகளில் உள்ள நான்கு பெரிய தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் (NPPA), ஆய்வு செய்தது. மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான முகமூடிகள், கையுறைகள், போன்ற  நுகர்பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் நோயறிதல் முறைகள் ஆகியவற்றின் மூலம் இந்த மருத்துவமனைகள் 1,737 விழுக்காடு லாபம் ஈட்டியுள்ளதாக அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது, இவ்வாறாக அதிகரிக்கப்பட்டிருக்கும் கட்டண/விலை உயர்வுகள் நோயாளிகள் செலுத்தும் சிகிச்சைக்கான கட்டணத்தில் 46% ஆக இருக்கின்றன.  
ஆணையத்தின் இந்த ஆய்வறிக்கை பிப்ரவரி 20 அன்று வெளியானது, கடந்த சில மாதங்களாகவே தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் பற்றிய புகார்கள் குறிப்பாக செப்டம்பர் மாதம் குர்கானில் உள்ள ஃபோர்ட்டிஸ் நினைவு ஆய்வு நிறுவனத்தில் 7 வயது ஆதியா சிங் டெங்கு நோயினால் இறந்த பிறகு கூறப்பட்டு வந்தன. அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்த 15 நாட்களுக்கான கட்டணமாக, ரூ.16 லட்சத்தை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை கட்டச் சொன்னது.  அந்தக் கட்டணத்தில் 2,700 கையுறைகள், 660 ஊசிகளுக்கான கட்டணம் சேர்க்கப்பட்டு இருந்தது.  
ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நான்கு மருத்துவமனைகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் ஒன்றாகவே இருந்தது.

2013ஆம் ஆண்டு மருந்து விலைக் கட்டுப்பாடு உத்தரவின்படி (DPCOவிலைக்கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலின் (NLEM) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளுக்கு மாறாக, தனியார் மருத்துவமனைகள் அதிக லாபத்தைப் பெறுவதற்காக, அந்தப் பட்டியலில் இல்லாத பிராண்டட் மருந்துகளை பரிந்துரைத்தும், கொடுத்தும் வருவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்டறிந்தது.இந்த தேசிய பட்டியலில் அனைத்து அத்தியாவசமான மருந்துகளும் பட்டியலிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தில் இந்த பட்டியலில் உள்ள மருந்துகள் 4.10% என்றும், பட்டியலில் இல்லாத மருந்துகள் 25.67% என்றும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் பட்டியலிடப்பட்ட மருந்துகளை விட பட்டியலில் இல்லாத மருந்துகள் 2017ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வின் முடிவுகள் பற்றி பிப்ரவரி 22 அன்று அனைத்திந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பு (AIDAN) ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில், அதன் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மீரா சிவா பின்வருமாறு கூறினார்: “கிட்டத்தட்ட 90% மருந்து சந்தை விலைக்கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கின்ற நிலையில், சிகிச்சைக்கான கட்டணத்தில் பட்டியலிடப்படாத மருந்துகளின் அளவு 25% என்றிருப்பது ஒன்றும் ஆச்சரியம் தருவதாக இல்லை. அதிக விலையுயர்ந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதன் மூலம்,மருத்துவமனைகள் இதனை மிக எளிதாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. விலைக்கான உச்ச வரம்பை நிர்ணயிப்பதற்கு சந்தை அடிப்படையிலான விதியைப் பயன்படுத்துவது பெரிய அளவில் வணிக லாபத்திற்கு வழிவிடுவதாக இருக்கிறது என்று ஆணையத்தின் அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது”.
“விலை உயர்வையும், அதிக லாபத்தையும் உருவாக்குகின்ற சந்தை அடிப்படையிலான விலை நிர்ணயம் என்பதே 2013 தேசிய மருந்து விலைநிர்ணய ஆணைய உத்தரவில் உள்ள முக்கிய குறைபாடாக உள்ளது.  அது லாபகரமான, மிக அதிகமான விலையை சட்டபூர்வமாக்குகிறது. அனைத்து அத்தியாவசியமான, உயிர்காக்கும் மருந்துகளையும் உள்ளடக்கிய பட்டியலை வெளியிட்டு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செலவு அடிப்படையில் நியாயமான லாபங்களை அவர்களுக்கு வழங்குகின்ற விலை முறையைக் கொண்டு வர வேண்டும் என்று அனைத்திந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பு தொடர்ச்சியாக கூறி வருகிறது” என்று சிவா மேலும் கூறினார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெருமளவிலான மருந்துகளுக்கான உத்தரவுகளை பெறுவதற்காக, ’சந்தைத் தேவை’களின்படி, மிக அதிகமான குறைந்தபட்ச விலையை அச்சிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஆணையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும் அந்த ஆய்வில் சொந்த மருந்தகத்தை வைத்திருக்கும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளுக்கு அவற்றின் மொத்தக் கொள்முதல் மூலம் கிடைக்கும் லாபமே போதுமானதாக இருக்கிறது. இந்த மருத்துவமனைகள் மிக அதிக லாபத்தைப் பெறுவதற்காக மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் குறைந்தபட்ச விலையை மீற வேண்டிய தேவையே இருக்கவில்லை என்று கணடறியப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலையின் மூலமாக தங்களுக்கென்று எவ்விதப் பயனையும் அடையாத உற்பத்தியாளர்கள், தவறான வணிக முறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய லாபத்திற்கு மிஞ்சிய மிக அதிகமான விலையை குறைந்தபட்ச விலையாக அச்சடித்து விற்பது சந்தையை உருக்குலைவிக்கும் செயலுக்கு சிறந்த உதாரணமாக இருப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது, இவ்வாறு உயர்த்தப்படுகின்ற குறைந்தபட்ச விலையின் மூலமாக, மருந்துகள், மருத்துவ சாதனங்களை உற்பத்தியாளர்களைவிட மருத்துவமனைகளே உண்மையில் அதிகம் பயன் பெறுபவையாக இருக்கின்றன.

பட்டியலில் இல்லாத மருந்துகள் தவிர, நுகர்வுப் பொருட்கள் மீதான கட்டணம் மொத்த கட்டணத்தில் பத்தில் ஒரு பங்காக இருப்பதோடு, பட்டியலில் இருக்கும் அத்தியாவச மருந்துகளுக்கான செலவைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த நுகர்வுப் பொருட்கள் மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மருந்துகள் என்பதாகப் பட்டியலிடப்படவில்லை என்பதால், அவை எந்தவிதமான விலைக் கட்டுப்பாடுக்குள்ளோ அல்லது குறைந்தபட்ச விலை குறித்த கண்காணிப்பிற்குள்ளோ வரவில்லை. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் இந்தப் பொருட்களின் குறைந்தபட்ச விலையைக் கண்காணிப்பதோ அல்லது விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவோ முடியாது.
நோய் கண்டறியும் சேவைகளைப் பொறுத்தவரை, மொத்தச் செலவில் 15%க்கும் அதிகமாக அவை இருக்கின்றன. நோய் கண்டறியும் வசதிகளுக்காக பிற தனியார் மையங்களில் பெறப்படும் கட்டணங்களைக் காட்டிலும் மிக அதிகமாக இந்த மருத்துவமனைகளில் வாங்கப்படுவதாக ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மற்ற கட்டணங்களோடு சேர்த்து நோய் கண்டறியும் சேவைகளுக்காக மருத்துவமனைகள் பெறுகின்ற கட்டணங்களை  ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றால் முறைப்படுத்த இயலாது. மத்தியில் உள்ளது போன்ற மருத்துவத் தொழிலகச் சட்டம் மற்றும் அதனோடு தொடர்புள்ள விதிகளை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவோ அல்லது மாநில அரசுகள் ஏற்கனவே உள்ள தங்களுடைய சட்டங்களில் சிறப்புப் பிரிவுகளை புதிதாக ஏற்படுத்துவதன் மூலமாகவோ மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊசிகள், திரவங்களை ஏற்ற இறக்கப் பயன்படுகின்ற குழாய்கள், புனல் வகை கருவிகள் என்று இந்தப் பட்டியலில் இல்லாத சாதனங்களிலும் அதிக அளவிற்கான லாபம் பெறப்படுவது தோல்வியடைந்த சந்தை அமைப்பில் முறைகேடான லாபம் பெறப்படுவதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

நோயாளிகளுக்கான மொத்த செலவுகளில் செயல்முறைகள் (11.42%), தங்கும் அறைகளுக்கான வாடகை  (11.61%) ஆகியவற்றிற்கான செலவுகளை ஒப்பிடும்போது, மருந்துகள், சாதனங்கள், நோய் கண்டறியும் செலவுகள் ஆகியவற்றிற்கான செலவுகள் மிக அதிகமாக (46%) இருப்பதோடு, அவை மருத்துவமனைகளால் மிகத் தெளிவாக காட்டப்படாதவையாக இருக்கின்றன. செலவினங்களுக்கான ஆரம்ப மதிப்பீடு என்று மருத்துவமனைகளால் தரப்படும் தொகை இறுதியில் 3-4 மடங்கு அதிகரித்து விடுவதாக நோயாளிகள் புகார் கூறியுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

தங்களுடைய மருந்தகங்களிடம் உள்ள மருந்துகள், சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையே மருத்துவமனைகள் பயன்படுத்தியோ அல்லது விற்பனை செய்தோ வருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விலைகள் குறைவாக இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு வெளியில் உள்ள மருந்தகங்களில் இருந்து இந்தப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு நோயாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
நன்றி: https://www.newsclick.in/private-hospitals-making-profits-1737-finds-study
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.