செம்படையினரை தாக்கிய காவல்துறை அதிகாரி செல்வநாகரத்தினத்தை பணியில் இருந்து நீக்காவிட்டால் எங்களது அடுத்த போராட்டம் டிஜிபி அலுவலகத்தை நோக்கியதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியில் கட்சியின் 22வது மாநில மாநாட்டை முன்னிட்டு பிப்.20 அன்று செம்படை பேரணி நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்குக் கண்டனம் தெரிவித்து கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் புரசைவாக்கம் வெள் ளார் தெருவில் வெள்ளியன்று (பிப். 23) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:தூத்துக்குடியில் காவல் துறை உயரதிகாரிகளின் அனுமதியோடும் அமைதியான முறையில் சென்ற செம் படைப் பேரணியில் ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் ஏற்கெனவே சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.சாலையோரம் சிறுகடை வியாபாரிகளிடமும் முரட்டுத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார். 5 வயது குழந்தை அகிலேஷ் மீது தாக்குதல் நடத்தி மண்டையைப் பிளந் துள்ள அந்த அதிகாரி காவல்துறை சீருடையில் இருப்பதால் மரியாதைக் கொடுத்து பொறுத்துக்கொண்டோம்.
ஒருவேளை அவர் சீருடையில் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். விளையாடும் பருவத்தில் தேசநலனை நெஞ்சில் நிறுத்தி பேரணிக்கு வந்த அந்த குழந்தையை தாக்க அந்த அதிகாரிக்கு எப்படி மனது வந்தது. சென்டரிங் கட்டையால் தலையில் அடிக்கும் அளவிற்குக் குழந்தை அகிலேஷ் என்ன தீவிரவாதியா, கொலை, கொள்ளை, செயின் பறிக்கும் குற்றவாளியா? அதுபோன்ற குற்றவாளிகளை காவல்துறை கண்டுகொள்வதேயில்லையே? எடப்பாடி பழனிசாமி கூட பாதுகாப்பு இல்லாமல் தெருவில் நடந்து சென்றால் செயின் பறிப்புக்கு ஆளாவார்.
தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. குற்றவாளிகளுக்கு கேக் ஊட்டிவிட்டு அப்பாவிகளையும் போராளிகளையும் தாக்கும் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை இனியும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையாக நடந்துகொள் ளும் இந்த அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்களுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உரிய அனுமதியோடு பேரணி நடத்திய மார்க்சிஸ்ட் தொண்டர்களை முரட்டுத் தனமாகத் தாக்கிய காவல் துறை அதிகாரி மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறிழைத்தது யார்? என்று காவல்துறைக்கு ஆதாரம் வேண்டுமானால் ஊடகம் அல்லது எங்கள் கேமராவை பார்க்க வேண் டிய அவசியமில்லை. உளவுத்துறை எடுத்த வீடியோவே அதற்குச் சான்றாக உள்ளது.
இதே போல் சிவகங்கையில் பொதுஇடத்தில் நியாயம் கேட்டதற்காக சிபிஎம் மாவட்டச் செயலாளர் கந்தசாமியின் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப் பட்டது. பாஜக எச்.ராஜாவெல்லாம் இந்த அராஜகத்தைப் பாராட்டி பேசும் அளவிற்கு நாடு மோசமான நிலையில் உள்ளது. பிரதமர் மோடியுடன் சுற்றுப்பயணம் மேற் கொண்ட நீரவ் மோடி, லலித்மோடிக்கு எதிராகத் தமிழக காவல்துறையின் தடி நீளுமானால் உங்களைப் பாராட்டுவோம். காவல் துறையினர் தங்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எங்களது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும்.
காவல்துறையினர் ரவுடிகளைப்போல் நடந்துகொண்டால் நாங்கள் சட்டரீதியாக செல்வோம். பொதுமக்களிடமும் கம்யூனிஸ்டுகளிடமும் அத்துமீறும் எண்ணற்ற காவல்துறை அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்பிய அனுபவம் எங்களுக்கு உண்டு. குற்றமிழைத்த செல்வநாகரத்தினத்தை பணிநீக்கம் செய்யாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் டிஜிபி அலுவகத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை மாவட்டச்செயற் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற் குழு உறுப்பினர் ப.செல்வசிங், வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராசன், எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி, கே.முருகன் ஆகியோர் பேசினர். பி.கே.மூர்த்தி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.