இதுவரை நடைபெற்ற 23 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டிலும் பங்கேற்ற பெருமை கொண்ட நார்வே 8-ஆவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நடைபெற்ற 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 13 தங்கம்,14 வெள்ளி, 10 வெண்கலத்துடன் 37 பதக்கம் வென்ற நார்வே முதலிடம் பிடித்து அசத்தியது.
ஒட்டுமொத்தமாக குளிர்கால ஒலிம்பிக் தொடரில் 131 தங்கம், 125 வெள்ளி,110 வெண்கலத்துடன் 366 பதக்கங்களை குவித்து நார்வே பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் முதல் நாளிலேயே தங்கம் வென்று உற்சாகப்படுத்திய தென்கொரியா 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றது.
ஆரம்பத்தில் முதலிடத்தைப் பிடித்த ஜெர்மனி வீரர்கள் புதிய உலக சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை குவித்தனர். கடைசி மூன்று தினங்களில் ஜெர்மனி வீரர்கள் கோட்டை விட்டதால் 13 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்லகம் என பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
23 முறையும் பங்கேற்ற அமெரிக்கா 1932 ஆம் ஆண்டு ஒரு முறை மட்டுமே அதுவும் சொந்த மண்ணில் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடிந்தது.
ஒட்டுமொத்தத்தில் 104 தங்கம், 109 வெள்ளி, 90 வெண்கலம் என 303 பதக்கங்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை கிராஸ் கன்ட்ரி விளையாட்டில் ஸ்விடன் வீராங்கனை சார்லட் வென்று சாதனை படைத்தார்.
கிராஸ் கன்ட்ரி விளையாட்டில் கடந்த இரண்டு முறை பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனைக்காக களம் இறங்கிய நார்வே வீராங்கனை மரிட் ஜோர்சனின் சாதனைக்கு தடுப்பு வேலி அமைத்தார். ஜெர்மனி, கனடா, ஆஸ்திரியா,ஸ்விடன் நாடுகள் 50-க்கும் அதிகமான தங்கப் பதக்கம் குவித்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஏமாற்றம் தந்த இந்தியா
இந்தியாவிலிருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே இப்போட்டியில் இம்முறை பங்கேற்றனர். 6-ஆவது முறையாக கலந்துகொண்ட ஷிவகேசவன் பனிச்சறுக்கு விளையாட்டில் தகுதிச் சுற்றில், 23-ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்து, தனது ஒலிம்பிக் விளையாட்டுக்கும் விடைகொடுத்தார். மற்றொரு இந்திய வீரரான ஜெகதீஷ்சிங் கிராஸுடன் பனிச்சறுக்கு விளையாட்டில், 118 வீரர்கள் களம் இறங்கினர்.இந்த பிரிவில் ஜெகதீஷ்சிங் கிராஸ் 103-ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீரர்கள் இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை என்ற மிக மோசமான சாதனைக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சோசலிச நாடுகளும் பதக்க வேட்டையும்
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1924-ஆம் ஆண்டு துவங்கினாலும் 1956-ஆம் ஆண்டில் முதன் முறையாக களம் இறங்கிய சோவியத் ஒன்றியம் 7 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதனைத் தொடர்ந்து 1960, 1964, 1972, 1976, 1980 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக முதலிடம் பிடித்து இருமுறை ஹாட்ரிக் சாதனை படைத்தது.1968, 1984, 1988 ஆகிய ஆண்டுகளில் இரண்டாவது இடம் பிடித்தது. 1952 முதல் 1988 வரை 9 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சோவியத் ஒன்றியம் 78 தங்கம், 57 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 194 பதக்கங்களை குவித்துள்ளது.சோவியத் ஒன்றியம் பிரிவுக்கு பிறகு இரண்டு முறை முதலிடம் பிடித்த ரஷ்யா 45 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்றுள்ளது. 41 தங்கம் கைப்பற்றிய கிழக்கு ஜெர்மனி 36 வெள்ளி, 35 வெண்கலத்துடன் 110 பதக்கம் பெற்றது. வடகொரியா ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.