”நா யார்னு தெரியுமா? யாருக்கு மரியாதை கொடுக்கணும் கொடுக்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாது?” நாற்பது வயதையொட்டிய அந்தப் பெண்மணி எங்கள் வங்கிக் கேஷியரை நோக்கி விரலை உயர்த்தியபடி கவுண்ட ருக்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தாள். நான் அப்போதுதான் கிளைக்குள் நுழைந்தேன். வாடிக்கையாளர்கள் அங்கங்கு நின்றிருந்தார்கள். சக ஊழியர்களும், அலுவலர்களும் கூட பேசாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். உள்ளே கேபினில் மேனேஜர் உட்கார்ந்திருந்தார்
எனக்கு என்னவென்று தெரியவில்லை. மெஸஞ்சரிடம் போய் விசாரித்தேன். “சார் அவுங்க இந்த ஊருல முக்கிய டாக்டர். நம்ம பேங்க்ல கணக்கு வச்சிருக்காங்க. எப்பமாவதுதான் வருவாங்க. இன்னிக்கு ஒரு ஐம்பதாயிரம் பணம் கட்டினாங்க. கட்டிய செல்லானையும், பாஸ்புக்கையும் அவங்கக் கிட்ட கொடுக்கும்படி கேட்டாங்க. இல்ல, மேனேஜர் கையெழுத்துப் போடணும்னு கேஷியர் சொன்னார். அதான் எங்கிட்டத் தாங்க, நான் மேனேஜர்கிட்ட வாங்கிக்கிறேன்னு அவங்க சொன்னாங்க. அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுன்னு பக்கத்துல இருக்குற டிரேயில் வைத்தார் கேஷியர். அங்கிருந்து நா எடுத்துக் கொண்டு போய் மேனேஜர்கிட்ட கொடுக்கப் போனேன். அதுக்குத்தான் கோபம்” என்றார்.
அந்த டாக்டர்க்காரிக்கு கோபம் அடங்கிய மாதிரித் தெரியவில்லை. “என்ன பேங்க் நடத்துறீங்க?” என்று எங்கள் எல்லோரையும் பொதுவாய்ப் பார்த்துக் கேட்டாள்.
“என்ன இப்போ. நல்லாத்தான நடத்துறோம்” என்றேன்.
“என்ன நல்லா நடத்துறீங்க. மனுஷங்கள்ள தராதரம் இல்ல..? இதுக்குத்தான் நா லட்சம் லட்சமா உங்க பேங்க்ல பணம் போடுறனா?” என்றாள்.
“என்ன தராதரம் வேண்டியிருக்கு. எல்லோருக்கும் எது முறையோ அதுதான் உங்களுக்கும். என்ன ஸ்பெஷல் மரியாத உங்களுக்கு?” என்று நானும் வெடித்தேன்.
“நீ யாரு மேன். ஓங்கிட்டக் கேட்டனா? ஏங்கிட்ட ரூல்ஸ் பேசுறியா? நா யார் தெரிமா, நா யார் தெரிமா” என்று என் எதிரே வந்து கத்தினாள்.
”ஸ்… சத்தம் போடக் கூடாது. நீங்க யாராவும் இருந்துட்டுப் போங்க, எனக்குக் கவலயில்ல. எங்களுக்கு நீங்க ஒரு கஸ்டமர். அவங்களுக்கு என்ன முறையோ, மரியாதையோ அதுதான் உங்களுக்கும். போய் அந்த நாற்காலில எல்லோரையும் போல உக்காருங்க. கூப்பிடுவோம்.” என்று அமைதியாகச் சொன்னேன்.
டாகடர்க்காரிக்கு தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வர, எப்படியாவது எங்களை அடிக்க வேண்டும், வலி தர வேண்டும் என அவளின் மூச்சு மேலும் கீழுமாய் பொங்கியது. வேகமாய் மேனேஜரைப் பார்க்க அவரது கேபினுக்குள் நுழைந்தாள்.
நாங்கள் அமைதியாக இருந்தோம். கொஞ்ச நேரத்தில் மேனேஜர் அடித்துப் புரண்டு கொண்டு என்னருகே வந்தார். “என்ன மாதவராஜ், இப்படி பண்ணிட்டீங்க? அவங்க எவ்ளோ பெரிய கஸ்டமர்.. அது தெரியாம விரட்டி இருக்கீங்களே, 38 லட்சம் டெபாசிட் போட்டு இருக்காங்க. அவ்வளவையும் உடனே எடுக்கப் போறேன்னு சொல்றாங்க….” என்று அதற்கு மேல் பேச வார்த்தை வராமல் “நீங்க … நீங்க..” என்று தத்தளித்தார்.
“என்ன சொல்ல வர்றிங்க….” என்றேன்.
“இல்ல…. .இது முழுக்க என்னோட தப்புத்தான். அவங்கள கேபினுக்குள்ள கூப்பிட்டு வச்சு நானே பணம் கட்டி, செல்லானில் கையெழுத்துப் போட்டுத்தான் எப்பவும் கொடுப்பேன். இன்னிக்கு அவங்க வந்தத பாக்கல… நான் மன்னிப்புக் கேட்டுட்டேன். அவங்க நீங்க எதுக்கு சார் மன்னிப்புக் கேக்குறீங்கன்னு சொல்றாங்க…. அதுனால…”
“அதனால நான் கேக்கணும்னு சொல்றீங்களா?” என்று கேபினை எட்டிப் பார்த்தேன். உள்ளுக்குள் உட்கார்ந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் டாக்டர்க்காரி.
“சார், பெரிய டெபாசிட் பார்ட்டி….. அதுனாலத்தான்……”
“வாயில நல்லா வந்துரப்போது… போங்க சார். உங்களப் பாக்கவே கேவலமாயிருக்கு..” கத்தினேன்.
அமைதியாய் என்னைப் பார்த்தார் மேனேஜர். “என்ன சார் பணம், டெபாசிட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. மரியாதை வேண்டாம்? மனுஷனுக்கு சுடு சுரணை வேண்டாம்?” என எழுந்து நின்று கத்தவும் மேனேஜர் அங்கிருந்து அகன்றார். 38 லட்சம் டெபாசிட் அன்றே முடிக்கப்பட்டது.
இது நடந்து 20 வருடங்களுக்கு மேலிருக்கும். ’அந்த பழங்குடி மனிதர் மதுவை அடித்தேக் கொன்ற சமூகத்தில்தான் 14000 கோடி வங்கியில் கொள்ளையடித்த நீரவ் மோடி போன்றவர்கள் மரியாதையோடு நடத்தப்படுகிறார்கள்’ என ஒருவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை யோசித்துக் கொண்டிருக்கும்போது இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
கொஞ்சம் காசு பணம் வந்ததும், சமூகத்தில் ஒரு அந்தஸ்தும் அங்கீகாரமும் வந்ததும் “நா யார்னு தெரியுமா, மனுஷங்கள்ள தராதரம் இல்லையா?” என்று கொழுப்பு நம் மூளைக்குள் நுழைந்து விடுகிறது. காரில் செல்கிறவர்களுக்கு ரோட்டில் நடந்து செல்கிறவர்களை எகத்தாளமாகப் பார்க்கத் தோன்றுகிறது. ஏற்றத் தாழ்வுகள் உள்ள சமூகத்தில் எளியவர்களை, விளைம்பு நிலை மனிதர்களை ’ஒரு காசுக்கும் பெறாதவர்களாய்’ பார்க்க வைக்கிறது. அவர்களை இழிவாகவும், தங்களை உயர்ந்தவர்களாகவும் பாகுபாடு கொள்ளத் துணிய வைக்கிறது. தங்களுக்கென்று ஸ்பெஷல் மரியாதையை கோருகிறது.
இதில் தனிப்பட்ட பிரக்ஞைகளால், புரிதல்களால் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக சமூகத்தின் இயல்பாகி விடுகிறது. இந்த இயல்பு நம் எல்லோருக்குள்ளும் எதோ ஒரு வகையில் நுழைந்து இருக்கிறது. எதோ ஒரு நிகழ்வில் வெளிப்படுகிறது.
அன்று அந்த டாக்டர்க்காரிக்கு நான் கொடுக்க மறுத்த ஸ்பெஷல் மரியாதையை வேறொரு இடத்தில், வேறொரு சந்தர்ப்பத்தில், வேறொருவரிடம் நானே கூட கோரித்தான் இருப்பேன். தன்னை ஒரு வி.ஐ.பி எனக் கருதும் எல்லோருக்குள்ளும் ஒரு கொலைவெறி ஒளிந்தே இருக்கிறது.
இதையெல்லாம் உக்கிரமான தன் மொழியால், நம் அனைவரின் உயிரை அறுக்கும் தொனியில் தோழர் Aadhavan Dheetchanya தன் கவிதையாக பகிர்ந்திருக்கிறார்.
“நிராதரவின் உருவெனத் துவண்டு
மரணத்தை நேருக்குநேர் பார்த்த
உன் இறுதிப்பார்வையை
எதிர்கொள்ள அஞ்சும் எனக்கு
உன் புகைப்படத்தைப் பகிரும் தைரியமில்லை
அஞ்சலிக்குறிப்போ கண்டன அறிக்கையோ வெளியிடவும் அருகதையற்றவன்
கொலையின் கூட்டாளிதான் நானும் ஒருவகையில்
வெளியெங்கும் நிறைந்திருக்கும் உன்னை
காணாமல் தப்பிக்க
கண்தாழ்த்திக் கடக்கும் என் கோழைத்தனத்தை
ஒரு செல்ஃபி எடுத்துப் போடு
அல்லது
எனது ஒவ்வொரு பருக்கையினையும் ஆணியாக்கி
வயிறைக்கிழி
கணக்கு நேராகட்டும்.”
குற்றவுணர்ச்சி வதைக்கிறது……

Leave a Reply

You must be logged in to post a comment.