புதுதில்லி, பிப். 23-

குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடுக, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக, பொது விநியோக முறையை அமல்படுத்துக, உணவுப்பாதுகாப்பை உறுதி செய்திடுக போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன் அன்று தில்லி தலைமைச் செயலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் ஐடிஓ முன்பு நடைபெற்ற இந்த பேரணி/ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி தலைமை வகித்தார். பேரணி தில்லித் தலைமைச் செயலகத் அருகே வந்தபோது, பேரணியில் வந்தவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தில்லியில் அனைவருக்குமான பொது விநியோக முறையின் கீழ் அதிக அளவிலான பொருள்களை வழங்கக்கூடிய விதத்தில் பிரச்சாரத்தையும், இயக்கங்களையும் அதிகரித்திட வேண்டும். தில்லி மாநில அரசு தொழிலாளர்களுக்கு நலன்பயக்கும் விதத்தில் பொது விநியோக முறையை அமல்படுத்தவில்லை.  பொது விநியோக முறையை அமல்படுத்துவதில் பாஜக அரசுகளுக்கம் கேஜரிவால் அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல் கேஜரிவால் அரசு உறுதியளித்ததுபோன்று குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு பிருந்தாகாரத் பேசினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: