முதன் முதலாக கவிதை எழுத வேண்டுமென தோன்றிய தருணம் எது? என்ன காரணம்?
கருத்துத் தெரிய ஆரம்பித்தது என்று சொல்வார்களே அப்படியான ஒரு பருவத்தில் என் பாட்டியை (அம்மாயி) நான் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. “பாட்டி பாட்டி,… பெரிய பெரிய புலவருங்கல்லாம் சின்ன வயசுல என்ன மேரிதான் பாடிக்கிட்டு இருந்திருப்பாங்களா?” அப்பல்லாம் நான் பாடுவதாக நினைத்துக்கொண்டது வேறொன்றும் இல்லை. சாதாரணமா பேசுவதைப் பாட்டு போல உளறிக்கிட்டே இருப்பேன்.… ஆயாவிடம் நான் கேட்ட அந்தக் கேள்வி எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. இன்றளவும் அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியவில்லை. முதன் முதலாக நான் எழுதிய கவிதை முருகனைப் பற்றியது. அப்போதெல்லாம் (எனது பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதில்) நான் தீவிர முருக பக்தன். எங்கள் வீட்டு மோட்டார் பம்பு செட்டில் பக்கத்தில் வாழைமரம் அசைய ஊருக்குள்ளிருந்து சீர்காழி கோவிந்தராஜன் குரல் ஒலிக்கிறது… “திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…”… அப்பொழுதுதான் முதன் முதலாக என் மனம் முணுமுணுக்கிறது… “திருத்தணி மலை வாழும் திருமுருகா……” 1972 ஆம் ஆண்டு எனது பன்னிரெண்டாம் வயதில் இது நிகழ்ந்தது. தொடர்ந்து அந்த (கவிதை) வெறித்தனம் தொடர்கிறது.

கவிஞர் நா.வே.அருள்


அந்தரங்கத்தைக் கருப்பொளாக கவிதை எழுதியதற்கு நீங்கள் வெட்கமோ வேதனையோ அடைந்திருக்கிறீர்களா?
அந்தரங்கம் முழுவதும் இன்னும் கவிதையாகவில்லை. எப்படியான அந்தரங்கம் என்பது அவரவர் மட்டுமே அறிந்தவொன்று. அந்தரங்கத்தின் வெட்கத்தையும் வேதனையையும் கடந்தால்தான் கவிஞனாக இருக்கும் தகுதி இருப்பதாக இப்போது கருதுகிறேன்.
இன்றைய கவிதைச்சூழலில் கவிஞர்கள் பாலியல் விடுதலையை முன்வைப்பது அறத்தேவையா? அறமீறலா?
கவிதை என்பதே விடுதலையின் கீதம்தான். பாலியல் விடுதலை மட்டுமல்ல. எல்லா விடுதலையும் அடங்கும். மானுட மேன்மை என்பது மட்டுமே இங்கு அறமாகும். இதிலிருந்து வெற்று ஆபாசங்களைத் தனித்துப் பிரித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.
இன்றைய கவிதைச்சூழலில் சமுகத்திற்குத் தேவையானது அரசியல் கவிதைகளா அல்லது தனிமனித சுதந்திரக்கவிதைகளா?
தனிமனித சுதந்திரம் அந்தரத்தில் தொங்குகிறதா? இந்தச் சமூகத்திற்கு ஒத்திசைவில்லாத அல்லது இந்தச் சமூகத்திற்கு நன்மை பயக்காத தனிமனித சுதந்திரத்திற்கு சுதந்திரம் என்கிற வசதியான பெயர் பொருந்துமா?தனிமனிதச் சுதந்திரத்தைச் சமூகத்தின் அரசியல் கவிதைக்கு எதிர் நிலையில் வைப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? அவன் வேறு சமூகம் வேறா? சமூகத்திற்குத் தேவையான அரசியல் கவிதை அந்தத் தனிமனிதனையும் உள்ளடக்கியதில்லையா? இது போன்ற கேள்விகளை முன்வைத்தாலே இந்தக் கேள்விக்கு விடைகிடைத்துவிடும். உதாரணமாக தனிமனித சுதந்திரமாக எனக்குள் `ஹிட்லர் கனவு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது முக்கியமா? அல்லது இந்தச் சமூகத்தின் தேவை முக்கியமா? இந்த இடத்தில் எப்போதோ கவிஞரும் கலை விமர்சகருமான இந்திரன் எனக்குப் பரிந்தளித்த நவீன கவிதையுலகின் முக்கிய ஆளுமை டி.எஸ்.எலியட்டின் கவிதையின் சமூகச் செயல்பாடு (தமிழில் முரளி அரூபன்) என்கிற புத்தகத்தைத்தான் விரிவான பதிலாக முன்மொழிவேன்.
உங்களது கவிதையின் மூலம் இந்த தேசத்தில் புதிய புரட்சி, மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடும் என நம்புகிறீர்களா?
எனக்கு அப்படியான மூடநம்பிக்கையோ பிரம்மையோ கிடையாது என்றும் “உங்களது” என்கிற வார்த்தையை அகற்றிவிட்டு பொதுவாக கவிதையின் மூலம் இந்த தேசத்தில் புதிய புரட்சி மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடுமா எனக் கேட்டால் ஆம் என்றும் சொல்லத் தோன்றுகிறது. // என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல, பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல // என்று சொன்ன எனது பாட்டன் புதுமைப்பித்தன்தான் பொதுவாக இலக்கியம் பற்றிக் கீழ்க்கண்டவாறும் சொல்கிறான்…இலக்கியம் மனிதனது மோகனமான கனவு. ஆனால் பயனற்ற கனவு என்று கொண்டுவிடுவது பொருந்தாதக் கூற்று. இலக்கியம் பிறக்கிறது. புதிய வழியும் பிறக்கிறது. புரஞ்சுப் புரட்சியே இதற்கு ஆதாரம்….நெப்போலியன் ஒரு தடவை ‘ஹோமர் கவிதையை வைத்துக் கொண்டு பாரிஸ் நகரையே எழுப்பிவிடுவேன்’ என்று கூறினானாம். அதில் ஓர் உண்மை இருக்கிறது. இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையைக் கீழே இழுக்கும் பாறாங்கல்லுகள். இந்த உண்ர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம். உண்மையே இலக்கியத்தின் ரகஸியம். ( சொ. விருத்தாசலம் )
எந்த கவிதையைப் படித்துவிட்டு கவிதை எழுதியவரை தண்டிக்க வேண்டுமென நினைத்திருக்கிறீர்கள்?
அப்படியான கவிதையை இதுவரைப் படிக்க நேர்ந்ததில்லை. தண்டிப்பது என்பது பெரிய வார்த்தையாக இருக்குமெனக் கருதுகிறேன். ஞானக்கூத்தனின் ஒரு கவிதையைப் படித்துவிட்டு வருத்தமடைந்திருக்கிறேன்.
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்
-அந்த வருத்தத்தை கீழ்க்கண்ட கவிதையை எழுதித் தணித்துக்கொண்டேன்
தமிழ் என் மூச்சு
மூக்கின்முன் ஏன்
முதுகைக் காட்டுகிறாய்?
நீங்கள் கவிஞனாக இருப்பதால் இந்த சமூகம் உங்களை மதிக்கிறதா?
நான் கடன்பட்டிருக்கும் இந்தச் சமூகத்திற்குக் கவிதையின் மூலம் கடனைடைக்க முடியுமா என்று முயல்கிறேன். இங்கும் கந்துவட்டியின் கதைதான். வட்டி வளர்ந்துகொண்டே போகிறது. முழுதாய்க் கடனடைக்க முடியுமா என்று தெரியவில்லை. பொதுவாகவே கவிஞர்களை இந்தத் தமிழ்ச் சமூகம் மிகவும் கூடுதலாகவே மதிப்பதாகக் கருதுகிறேன். தனிப்பட்ட முறையில் எனது கவிதைச் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாய் காரி உமிழ்வது முதல் கைத்தட்டுதல்கள் வரை கள அனுபவங்கள் நிறைய உண்டு.
கவிதை எழுதுபவர்களுக்கு மரியாதை கூடுதல் குறைச்சலாகக் கிடைப்பதில் ஆச்சரியமில்லை. கவிதையாய் வாழ்பவர்களுக்கு கால கால மரியாதை கிடைத்துவிடுகிறது. உதாரணமாக…மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன், கவிஞர் தமிழ்ஒளி, கவிஞர் இன்குலாப், கவிஞர் தணிகைச் செல்வன், இன்ன பிறர்.
உலகில் கவிஞர்கள் அனைவரும் தேசத்துரோகிகளென குற்றம் சாட்டப்பட்டால் உங்களது எதிர்வினை என்னவாகயிருக்கும்?
குற்றவாளிகள் நீதிபதிகளானால் அந்தக் குற்றத்தைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். குற்றத்திற்கான வரையறையை மக்கள் முடிவு செய்வார்கள் என நம்புவோமாக.
எந்தத் தருணத்திலாவது நீங்கள் எழுதிய கவிதை உங்களை வருத்தமடையச் செய்திருக்கிறதா?
சமூக வருத்தத்தைப் போக்குவதற்காக எழுதும் கவிதைகளால் ஏற்படும் தனிமனித வருத்தப்பாடுகள் பொருட்படுத்தத் தக்கதல்ல. ஆனால் சமகாலத்தில் எனது சக கவிஞன் ஹெச். ஜி. ரசூல் தான் எழுதிய எழுத்துகளுக்காக எத்தனையெத்தனை வருத்தங்களை, துயரங்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை நினைக்கையில் நெஞ்சு விம்முகிறது.
உங்கள் கவிதைக்கான வாசகர்கள் இவர்களாகத்தான் இருக்கவேண்டுமென விரும்புகிறீர்களா?
அப்படியான கருதுகோளில் எனக்கு நம்பிக்கையில்லை. அதுவும் முகநூல் காலத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகத்துக்கே நீங்கள் வாசகன், உலகமே உங்கள் வாசகன்.

  • நன்றி: பேசும் புதிய சக்தி (பிப்ரவரி 2018)

Leave a Reply

You must be logged in to post a comment.