சமீபத்தில் மத்திய அரசின் ஆய்வுக்குழு மேற்கொண்ட ஒரு ஆய்வில் திருவண்ணாமலையில் ஒரு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் ஐநூறு கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. அந்த மருத்துவமனைக்கும், ஸ்கேன் மையத்திற்கும் சீல் வைக்கப்பட்டதாகவும், அத்துடன் தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சமீப காலமாய் பெண் கருக்கொலை அதிகரித்துள்ளது எனவும் அந்த செய்தித் தொகுப்பில் கூறப்பட்டது .

பொதுவாக அறிவியல் வளர்ச்சியின் பல பரிசுகளில் ஒன்றுதான் உடலை ஊடுருவி அறிந்துகொள்ள உதவும் ஸ்கேன் கருவி. இது இன்று நுட்பமான முறையில் பல்வேறு உள்ளுறுப்பு குறைபாடுகளை துல்லியமாய் காட்டி சரியான சிகிச்சை பெற்று ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் அதை அனைவரும் வரவேற்கிறோம் . ஆனால் இன்று அது ஒரு கருவின் வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் கருவியாகவும் மாறியுள்ளது !

எனவே அதன் செயல்பாடு பற்றி சிந்திக்க வேண்டிய வேதனையான சூழலும் உருவாகியுள்ளது! கருவிக்கு என நோக்கம் இருககாது என்பதால். கருவியைக் கையாள்கிற நிறுவனங்களின் செயல்பாடு பற்றி மக்கள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.கருவின் பாலினம் அறிவதற்கான சோதனைகள் நடத்தக்கூடாது என்று, மாதர் இயக்கங்களின் நெடும் போராட்டங்களின் பலனாக, தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இடையில் அந்தச் சட்டத்தின் பலனாக, கருப் பாலின சோதனைகள் மட்டுப்பட்டிருந்தன. இந்நிலையில் மறுபடியும் இத்தகைய ஸ்கேன் மையங்களை ஸ்கேன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு அரசின் கவனக்குறைவு ,பெண்களைப் பற்றிய சமூகத்தின் பிற்போக்கு பார்வை , குழந்தை பிறப்பு பற்றிய அறிவியல் கண்ணோட்டம் இல்லாதது போன்ற பல அம்சங்கள் காரணமாய் இருப்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது!பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் இன்றைய காலத்தில் கூட பெண் குழந்தைகள் பிறப்பை அவ்வளவு எளிதில் ஜீரணிக்க இயல்வதில்லை! அதை இனிப்பு தரும் விதத்திலேயே வெளிப்படுத்தும் கலையை கற்று வைத்திருக்கிறோம்!

அதிலும் இரு குழந்தைகள் பெண்களாய் பிறந்தால் மூன்றாவது ஆணாய் பிறக்கலாம் எனும் நம்பிக்கையில் இன்னொரு குழந்தை பெற அந்தப் பெண்ணை குடும்பங்களில் வற்புறுத்தும் நிலையும், அதுவும் பெண்ணாவே பிறந்து விட்டால் அந்தத் தாயின் வாழ்வு கேள்விக்குறியாகும் அபாயமும் இன்னமும் நீடிக்கிறது .நெல், எருக்கம்பால் போன்றவை தந்து அல்லது பக்கெட் நிறைய நீரில் முக்கி பெண் குழந்தை பிறந்த பிறகு விதவிதமாய் வழிகளைக் கண்டு கொல்வதற்கு மனிதநேயம் இடம் தரவில்லை போலும்! அதற்கு பதில் கருவிலேயே கண்டறிந்து கருவையே கலைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதில் படித்தவர் படிக்காதவர் பேதம் ஏதும் இல்லை ! இதன் காரணமாக ஆண் பெண் விகிதங்கள் குறைவது ஒருபுறம் என்றால் மறுபுறம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுவதும் அதிகரிக்கிறது. ஆணை குழந்தை தருபவனாகவும் பெண் அதை சுமப்பவளாகவும் பார்க்கும் தவறான பார்வை ஆண் பெண் என இருதரப்பிலும் பரவலாக உள்ளது . இது ஆணை உயர்த்தவும் பெண்ணை இரண்டாம் இடத்தில் வைத்து சிந்திக்கவும் காரணமாகிறது.அதுவே பெண் குழந்தை பிறப்பு என்று வரும்போது நேர்முரணாக அதற்கு பெண்ணே காரணம் என்பதாக கருதும் போக்கு பரவலாக உள்ளது.

அதன் பலனாக அவள் ஆண் குழந்தை பெற்றுத் தர வேண்டும் எனும் எதிர்பார்ப்பிற்கு ஆளாகிறாள்.அது நடக்காவிடில் அந்தப் பெண் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் நிர்ப்பந்தம் மற்றும் அந்தப் பெண்ணிற்கு எந்த நேரமும் கணவன் தன்னைக் கைவிடலாம் எனும் அச்சத்திற்கு ஆட்பட வேண்டிய சூழலையும் இணைத்தே உருவாக்குகிறது.இந்த நிலைமையில் ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்தால்தான் குழந்தை உருவாகும் என்பதையும், பெண் கூடுதலாக அதை சுமக்கும் பணியையும் உயிரை பணயம் வைத்து பெற்றெடுக்கும் பணியையும் செய்கிறாள் என்பதையும் மிக அழுத்தமாக அனைவர் மனதிலும் பதிய வைக்க வேண்டியது அவசியமாகும் !அதே போல் பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது ஆணின் விந்தணுவில் உள்ள ஒல குரோமசோம்கள் பெண்ணின் கருமுட்டையில் உள்ள ஒஒ குரோமசோம்களுடன் இணையும் போது ஒ சேர்ந்தால் பெண் குழந்தை லு சேர்ந்தால் ஆண்குழந்தை என்பதையும் பரவலாக கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கும் சக்தி ஆணிடம்தான் உள்ளது என்பது தெளிவாகும். தேவையற்ற கருக்கலைப்புகள், மறு திருமண ஏற்பாடுகள் ,பெண்கள் மீதான வன்முறைகள் குறையும் .பெண் குழந்தையினால் பயனில்லை , ஆண் குழந்தைதான் தன்னை இறுதி வரை காக்கும் எனும் சமூகத்தின் சிந்தனைப் போக்கும் , அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளால் பெண் குழந்தையின் பாதுகாப்பு பற்றிய கவலையும் , இன்னமும் தொடரும் வரதட்சணை போன்ற பிரச்னைகளின் தீவிரமும் இணைந்து பெண் குழந்தைகளை குடும்பங்கள் மனதார வரவேற்பதை தடுக்கிறது.

இது ஆண் பெண் விகிதாச்சாரத்தை குறைத்து பிரச்னைகள் மேலும் தீவிரமாக காரணமாகிறது!இந்த நிலையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது எனும் மாயப் பார்வையிலிருந்து அரசு விடுபட்டு ,ஸ்கேன் மையங்களில உள்ள கருவிகள் கருவின் அடையாளம் காட்டாமல் மறைக்கும் மென்பொருள் பயன்பாட்டை வேகமாக ஏற்பாடு செய்வதும் , ஸ்கேன் மையங்கள் பற்றி 104 க்கு வரும் புகார்களின் மீது தீவிரமான கவனம் செலுத்துவதும் அவசியம் ! மட்டுமல்ல ! ஸ்கேன் மையங்களை கண்காணிக்க ஏற்கனவே இருந்தது போல் மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்களை மீண்டும் உருவாக்கி மையங்களை தீவிரமாக கண்காணிப்பதும் , கருவை வளர விட்டால் ஆபத்து என்றிருக்கும் பல்வேறு குறைபாடுகளை பொய்க் காரணமாக காட்டி பெண் கரு அழித்து தவறிழைக்கும் மையங்களின் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு உறுதிப்படுத்துவதும் உடனடி தேவை !

அதோடு விஞ்ஞான ரீதியான பிரச்சாரங்களை முன்னெடுத்து ஆண்பெண் சமத்துவ பார்வையை உறுதிப்படுத்துவதும், அதன் மூலம் பெண்கரு மற்றும் சிசுக்கொலைகளை தடுத்து நிறுத்துவதுடன் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க எண்ணங்களை நிரந்தரமாகக் களைந்தெறியும் வகையில் உறுதியான தீர்வை நோக்கி பயணிப்பதும் அவசிய தேவைகளாகும் !ஆண் பெண் விகிதங்களை சரியான முறையில் இருக்கச் செய்வது சமூக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு மிக அவசியம் எனும் அடிப்படையில் இவைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதும் மிக அவசியம் !சமூக மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் இவைகளை கவனத்தில் கொண்டு அரசுக்கு உணர்த்தவும், மக்கள் மத்தியில் இவைகளை பரவலாக கொண்டு செல்லவும் ஒருங்கிணைவோம் ! பெண் கருக்கொலை சிசுக்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

Leave a Reply

You must be logged in to post a comment.