போபால்,
மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை(இன்று) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்காக 281 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 270 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பிஜேப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர், ஒடிஸா மாநில காவல் துறை அதிரடி படையினர், காவலர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்காக வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அந்த மாநில தேர்தல் அதிகாரி எஸ்.குமார் தெரிவித்தார்.
வாக்குப் பதிவு இன்று காலை  8 மணிக்கு தொடங்கி உள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்எல்ஏ சுபல் சாஹு காலமானதை அடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி ரீட்டா சாஹு அந்த மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலமானதை அடுத்து இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.