கேரளமாநிலத்தில் பாலக்காடு அருகே கடுகுமன்னா பகுதியில் உணவை திருடிவிட்டான் என்று குற்றம்சாட்டி 27 வயது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அப்பகுதியில் சிலர் அடித்தே கொன்ற சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட வாலிபர் பெயர் ஏ.மது, கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த வியாழன் மாலை 6.30 மணியளவில் மது என்ற அந்த இளைஞனை கண்முடித்தனமாக கம்புகளால் அடித்து உடலில் பல காயங்களுடன் அகாலி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இவரை கொட்டாதராவில் உள்ள பழங்குடி சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஜீப்பில் ஏற்றியுள்ளனர், ஆனால் ஜீப்பிலேயே மயங்கி விழுந்த அவர் இறந்தே போனார் என தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் மக்கள் இவரை அருகில் உள்ள காட்டில் மாலை 4 மணிக்குப் பிடித்தனர். 3 நாட்களுக்கு முன்பாக கிராமத்தில் ஒருவர் வீட்டிலிருந்து பொருட்களைத் திருடிச் சென்றதாக இவரைக் குற்றம்சாட்டி கண்முடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் மது என்ற வாலிபர் மரணமடைந்ததையடுத்து இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மது மனநிலை சரியில்லாதவர் என்றும் எப்போதாவது காட்டில் அவர் வசிப்பதுண்டு என்று அகாலி உதவி எஸ்.பி. என்.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுவுக்கு அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜாய் மேத்யூ, பழங்குடி நல சமூக ஆர்வலர் சி.கே.ஜானு ஆகியோர் இந்த கொலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் கேரளா அகாலி போலீஸார் 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பத்தை அறிந்த கேரளா இடதுமுன்னணியின் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டு சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து அவர் தன் முகநூல் பக்கத்தில், “நாகரீக சமூகத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை அனுமதிக்க முடியாது. கேரள மாநிலத்துக்கு இழுக்கு சேர்த்துள்ளது இந்தச் சம்பவம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.