புதுதில்லி, பிப். 23-

ராஜஸ்தான் மாநில அரசு, ராஜஸ்தான் விவசாயிகள் சங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி, வியாழன் அன்று மாநிலத் தலைநகர் ஜெய்பூருக்கு அணிதிரண்டு வந்த விவசாயிகளை, காவல்துறையினர் நகருக்குள் நுழையவிடாது கைது செய்தனர். எனினும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று ஜெய்பூர் வந்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவலே கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2017 செப்டம்பர் 1 முதல் 13 தேதிகள் வரை விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலைகள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மகாமுற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ராஜஸ்தான் மாநிலப் பிரிவு அறைகூவல் விடுத்திருந்தது. அப்போது போராட்டத்தின் வீச்சு கண்டு, இக்கோரிக்கைகளில் சிலவற்றை ராஜஸ்தான் மாநில அரசு ஏற்றுக்கொண்டு, விவசாயிகள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதனைத்தொடர்ந்து மகாமுற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆறு மாதங்கள் கடந்தபின்னும் மாநில அரசு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராமல் விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது. இதனைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரியும் மாநிலம் முழுதுமிருந்து விவசாயிகள் மகாமுற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்திட வியாழன் அன்று மாநிலத் தலைநகர் ஜெய்பூர் நோக்கி அணிதிரண்டு வந்தார்கள். அவர்களை ஜெய்பூருக்குள் நுழைய விடாது காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் அம்ராராம் மற்றும் மாநிலத் தலைவர்கள் பலரும் புதனன்றே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்டங்களிலிருந்து மாநிலத் தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில அரசின் போலீஸ் அடக்குமுறையைக் கேள்விப்பட்டதும், தலைநகர் புதுதில்லியிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவலே மற்றும் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் ஜெய்பூர் விரைந்தனர்.  போலீசாரின் அடக்குமுறையையும் மீறி நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜெய்பூரில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் முன் திரண்டனர். அவர்கள் மத்தியில் அசோக் தாவலே உரையாற்றினார். அப்போது,  மாநில அரசின் அடக்குமுறையைக் கடுமையாக விமர்சித்த அவர், மாநில அரசு விவசாயிகள் சங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

பின்னர் மாநிலத்தில் ஜெய்பூர், சிகார் மற்றும்  பல்வேறு பகுதிகளிலும்  தடுத்துநிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்திட அவர்கள் விரைந்தனர். பின்னர், ஜெய்பூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அம்ரா ராமைச் சந்திப்பதற்கும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: