மசூதிகள், கல்லறை மாடங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை கோவில்களாக மாற்றுவதற்கான கோரிக்கையை வினய் கட்டியார் அடுத்த முறை வைப்பதற்கு முன்பாக, குறைந்தபட்சம் சியாமா பிரசாத் முகர்ஜி கொண்டிருந்த பாரபட்சமற்ற பார்வையையாவது மேற்கோள் காட்ட முயற்சிக்கலாம்.
பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் சியாமா பிரசாத் முகர்ஜியின் கல்வித் தகுதி குறித்து கல்கத்தா பல்கலைக்கழகம், லிங்கன் இன், நாட்டின் இளைய துணைவேந்தர் இன்னும் வேறு என்னென்ன உங்களுக்கு வேண்டுமோ அனைத்தையும் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறது. கட்சியின் மிகப் பெரிய கதாநாயகனாக, ஏன் தேசிய அளவிலான கதாநாயகனாக அவரை முன்னிறுத்துவதற்காக ஜனசங்கத்தைத் தோற்றுவித்த தலைவரான முகர்ஜி பற்றி ஆய்வை மேற்கொள்வதற்காக தனித்த ஆய்வு மன்றத்தையும் பாஜக நிறுவி இருக்கிறது.
ஆனாலும் பாஜகவைப் பொறுத்த வரையில், மற்ற எல்லாவற்றையும் போலவே வெறுமனே திரும்பத் திரும்பக் கூறப்படும் வெற்று முழக்கமாகவே முகர்ஜி என்ற பெயரும் இருக்கிறது. அது குறித்து இவ்வாறு கூறலாம். மந்தமான இந்த வலதுசாரிக் குழுவினரை கல்விப் புலமை மீது வெறுப்பைக் கொண்டவர்கள் என்று ஒதுக்கித் தள்ளினாலும், குறைந்தபட்சம் தங்களுடைய தலைவர்களை மெக்காலேபுத்திரர்கள் அல்லது மார்க்சிஸ்டுகளைப் போல அவர்கள் நடத்த மாட்டார்கள் என்றே நாம் கருதலாம்.
கடந்த காலத்தின் ஒரு கட்டத்தில் தாஜ்மகால் கோவிலாக இருந்தது என்று சமூக ஊடகங்கள் மூலமாக கூறி, அதனைக் கோவிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஹிந்துத்துவ வெறியர்கள் கடந்த ஆறு மாதங்களாக முன்வைத்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பிரான் நாத் ஓக் எழுதிய தாஜ்மகால் ஒரு கோவில் அரண்மனை என்ற புத்தகத்தை நம்பியிருக்கிறார்கள். ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி வரலாற்றாசிரியராக மாறிய ஓக், சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து பணியாற்றியவர். ஆனால் அதற்காக அல்லாமல், தன்னுடைய கற்பனைக்கு எல்லை எதையும் கொண்டிராத வரலாற்றாசிரியர் என்ற முறையிலே வலதுசாரிப் புலமையாளர்கள் வரிசையில் அவர்களால் பொறாமைப்படக் கூடிய தனியிடத்தை ஓக் பிடித்திருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் பயிற்றுவிக்கப்பட்ட பிரபல வரலாற்றாசிரியர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களாக இருக்கும் பத்திரிகையாளர்களால்கூட ஓக்கை அவரது பீடத்திலிருந்து அகற்ற முடியவில்லை. தாஜ்மகால், கிறிஸ்டியானிட்டி (‘கிருஷ்ணா நிதி என்று கூட நீங்கள் கூறலாம்’) உள்ளிட்ட பிற சிக்கலான விவகாரங்கள், வரலாற்றுத் தளங்கள் பற்றி அவரால் திரித்துக் கூறப்பட்டுள்ள கோட்பாடுகள் அவருடைய மரபுவழிப்பண்பை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகின்றன.
ஓக்கின் புத்தகங்கள் விற்பனை ஆவதோடு, அவருடைய கருத்துகள் வினய் கட்டியார் மற்றும் வேறு வேலையற்ற உத்தரப்பிரதேச பாஜக அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவருடைய இத்தகைய மோசமான வரலாற்று கூற்றுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் மௌனமும், செய்தி சேனல்களின் அளவு கடந்த உற்சாகமும் வலு சேர்த்து வருகின்றன.
சியாமா பிரசாத் முகர்ஜியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்கிற வகையிலே, அவரைப் பற்றி வாசிப்பதை ’முழுமையான அரசியல் அறிவியலில்” முதுகலைப்பட்டம் பெற்றிருக்கும் மோடி உட்பட முகர்ஜியைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் ஏன் பரிந்துரைக்க கூடாது? அடுத்த கட்டமாக, அவருடைய கட்சியில் இப்போது முக்கியமானவராக இருக்கும் ஒருவர் மசூதிகள், கல்லறை மாடங்கள், நினைவுச்சின்னங்களை எல்லாம் கோயில்களாக மாற்ற வேண்டும் என்று கூறுவதற்கு முன்பாக குறைந்த பட்சம் முகர்ஜியின் படைப்புகளை நன்றாகப் படித்து அவரை மேற்கோள் காட்டட்டும். அவ்வாறு அவர் செய்ய விரும்பினால் செய்யட்டும்.
பெரிய புத்தகங்கள் அவர்களுக்குப் பிடிக்காதவை என்பதைப் புரிந்து கொண்டாலும், 1940 நவம்பர் 23 அன்று ஆக்ரா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முகர்ஜி ஆற்றிய உரையை மட்டுமாவது அவர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். அனைத்து பட்டமளிப்பு விழாப் பேருரைகளைப் போல நீண்ட நெடிய நுண்ணறிவு மிக்க பேச்சாக இருந்தாலும், தான் சார்ந்த கட்சி அரசியலைத் தவிர்த்ததாக, முகர்ஜியின் புலமையை முழுமையாக வெளிக்காட்டுவதாக அந்த உரை இருந்தது.
”இந்தப் பல்கலைக்கழகம் பதின்மூன்றே வயதானதாக இருந்தாலும் கூட, அதன் உறைவிடமாக இருக்கும் வரலாற்று நகரமான ஆக்ராவின் தொன்மையான, இடைக்காலத் தொடர்புகள் உண்மையில் எவராலும் மறக்க இயலாதவையாக இருந்து, தனக்கென்று மதிப்பு கொண்ட மேன்மையையும், முக்கியத்துவத்தையும் உங்களுக்கு வழங்குவதாக இருக்கின்றது” என்று அவர் பட்டமளிப்பு விழாவில் கூறினார்.
ஆக்ராவை அறிமுகப்படுத்தும் சுற்றுலா வழிகாட்டியைப் போல, அதன் பண்டைய தோற்றம், கடந்த காலத்தில் அங்கிருந்த முகலாயர்கள், அந்நகரின் நவீன எதிர்காலம் என்று அந்த நகர் குறித்து எவ்விதமான பாகுபாடுகளுமற்ற தெளிவான விளக்கத்தை அவர் முன்வைத்தார்.
அது ஐக்கிய மாகாணங்களிலும், நாட்டின் பிற இடங்களிலும் தீவிர வகுப்புவாதம் தலைதூக்கி இருந்த காலம். மேலும் அப்போது வலதுசாரிகளின் கனவுநாயகனாக முகர்ஜி இருந்தார். இருந்த போதிலும்  அவையனைத்தையும் அந்த பட்டமளிப்பு விழா அரங்கிற்கு வெளியிலேயே விட்டுவிட்டுத்தான் அவர் உள்ளே சென்றார்.
“உங்களுடைய நகரத்தில் உள்ள கொத்தளங்களைக் கடந்து அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் புனிதமான நதி நமது  நினைவுகளை இந்தியாவின் வீர யுகத்திற்கு, மகாபாரதக் காலத்திற்கு, அதற்கும் மேலாக ரிக் வேத காலத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கின்றது. இங்குள்ள பண்டைய அரண்மனை காஜ்னவித் காலத்தைச் சார்ந்த காஜிதாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரண்மனையைச் சுற்றி சிவப்புக் கல் கொண்டு புகழ்வாய்ந்த கோட்டையை நிறுவிய முகலாயர்களின் மிக உயர்ந்த பராமரிப்பின் மூலமாக வளர்ந்த இந்த நகரத்தைப் போன்று பெருமை வாய்ந்த நகரை பிற்காலத்தில் உலகம் முழுவதையும் சுற்றி வந்தவர்களாலும் சுட்டிக் காட்ட இயலவில்லை.”
பின்னர் முகர்ஜி தாஜ்மகாலைப் பற்றிப் பேசினார். அவர் ஒன்றும் தன்னுடைய ’இருமுறை உலகைச் சுற்றி அலைந்தவனின் கானம் (தி ரீம் ஆஃப் ரேம்ப்லெர் ட்வைஸ் அரௌண்ட் தி வேர்ல்ட்) என்ற புத்தகத்தின் பெரும் பகுதியில் அந்த பிரம்மாண்டமான வெள்ளை நினைவுச்சின்னத்தைப் புகழ்ந்து பாராட்டியதோடு, தாஜ்மகால் ஒரு கவிதை (தி தாஜ்மகால் எ போயம்) என்று அந்தப் புத்தகத்தில் இருந்து தனியே எடுத்து எழுதிய பிராங்க் கோவான் அல்ல. இந்தியாவின் கலப்புக் கலாச்சாரம், முகலாய பங்களிப்பு ஆகியவை குறித்து பெருமிதம் கொண்டவராக இருந்த முகர்ஜி, அவற்றிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

ஏற்கனவே அக்பரின் ஆக்ரா கோட்டையைப் புகழ்ந்திருந்த அவர், பின்னர் அக்பரின் பேரன் ஷாஜகான் தன்னுடைய மனைவியின் நினைவாக கட்டிய கட்டிடம் பற்றி இவ்வாறு பேசினார்.  ”உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, இந்திய மகளிருக்கான தலைசிறந்த பளிங்கு அஞ்சலியாக இருக்கும் இந்த நகரை அலங்கரிக்கும் வகையில் பளீரென்ற ஆபரணத்தை உருவாக்குகின்ற பொறுப்பு அக்பரின் பேரனிடம் விடப்பட்டது. தாஜ்மகாலைச் சுற்றியுள்ள நிலம் ஃபைஸி மற்றும் அபுல் பஸல் ஆகியோரின் பிறப்பிடமாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு தான்சேன் தங்கிய மாளிகையாகவும், முகலாய காலத்தில் புகழ்பெற்றிருந்த பல நபர்களின் ஓய்வு இடமாகவும் அது இருந்தது” என்று அவர் மாணவர்களிடம் தெரிவித்தார், இவ்வாறு மெச்சத் தகுந்த தொடர்புகளைக் கொண்டிருக்கும் அமைப்புகளுடன் உள்ள நகரத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய பொறுப்புகளைக் கொண்டதாக இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதையும் அவர்களிடம் முகர்ஜி நினைவுபடுத்தினார்.

தன்னுடைய கருத்தியல் வாரிசுதாரர்களுக்குப் புரியாததொன்றை முகர்ஜி கூறினார். “பல தலைமுறைகள் அறிந்தவாறு, சிறந்த சுதந்தரமான கல்வி என்பது விரிவுபடுத்தப்பட்ட, மதவெறி மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட கருத்துகள் அல்லது கோட்பாடுகளில் இருந்து விடுபட்டதாக, பரந்த அறிவொளியூட்டப்பட்ட மனப்பான்மைக்குத் தகுந்ததாக கத்தோலிக்க நிறுவனங்களில் வழங்கப்படுவதைப் போன்று கல்லூரிகளில் வழங்கப்பட வேண்டும்” என்பதை அவர் வலியுறுத்தினார்,
கட்டியார் போன்றவர்களிடம் முகர்ஜியை மேற்கோளிட்டுக் காட்டும் போது, இன்னொரு உண்மையையும் நாம் கவனிப்பது அவசியம். அவுரங்கசீப்பின் கீழ் தாஜ்மகாலின் பாதுகாப்பாளராக இருந்த சந்தர்பன் பிரமான் என்பவர் ஷாஜகானுக்கு மிகவும் பிடித்தமான, அவருடைய பேரரசில் புத்திசாலி அமைச்சராக இருந்தவர். தந்தை மற்றும் மகன் என்று இருவரிடமும் பணியாற்றிய சந்தர்பன் ஓய்வு பெற்றபோது, அவரை ஆக்ராவைக் கவனித்துக் கொள்ளுமாறு அவுரங்கசீப் அனுப்பி வைத்தார். முகலாயர்களின் ஆட்சியில் பிராமணர் ஒருவர் எவ்வாறு உயர்மட்டப் பதவிக்கு உயர்த்தப்பட்டார் என்று அறிந்து கொள்ள விரும்பும்  வலதுசாரிகளுக்கு நான் முகலாயப் பேரரசின் வாழ்வு, அரசியல், நிர்வாகம், தந்திரம் பற்றி சந்தர்பன் பாரசீக மொழியில் எழுதிய மிகப்பெரிய நூலான சேஹார் சாமனைப் பரிந்துரைக்கப் போவதில்லை. மாறாக 400 பக்கங்களுக்கு குறையாமல் சந்தர்பன் பிரமான் பற்றி ராஜீவ் கின்ரா என்பவர் எழுதியுள்ள, ’தன்னைப் பற்றி, பேரரசைப் பற்றி எழுதுதல்: சந்தர்பன் பிரமான் மற்றும் இந்தோ-பாரசீக அரசு செயலாளரின் கலாச்சார உலகம்’. என்ற புத்தகத்தைப் பரிந்துரைப்பேன். உங்கள் தலைவர்களையும், பிறரையும் வாசியுங்கள். அதோடு மும்தாஜ் மகால் என்றழைக்கப்படும் அர்ஜுமண்ட் பானு பேகம் தன்னுடைய புனிதக் கல்லறையில் அமைதியாக ஓய்வெடுப்பதையும் அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொள்வேன்.
நன்றி : https://thewire.in/221612/taj-temple-bjp-guru-mookerjee/
-தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.