கோவை, பிப். 21-
மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், இந்தாண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் இட ஒதுக்கீடு இல்லை என்றால், அவர்களுக்கு பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியிருக்கும் அவசர சட்டத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.மேலும், இதுபோன்ற மருத்துவர்களால் தான் தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம், கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இது அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களையும் நேரடியாக பாதிக்கும் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் ரவிசங்கர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: