புதுதில்லி, பிப்.22-

போராடும் விவசாயிகளுக்கு எதிராக, ராஜஸ்தான மாநில வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

போராடும் விவசாயிகளுக்கு எதிராக, ராஜஸ்தான மாநில வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தலைவர்களும், ஊழியர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  அம்ரா ராம் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேமா ராம் மற்றும் பவன் தக்கல் ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் மாநிலத் தலைநகர் ஜெய்பூரை நோக்கி பேரணியாக வந்துகொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  விவசாய சங்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே 2017 செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஆட்சியாளர்களால் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் மீறி, துரோகம் செய்ததற்கு எதிராகவே இப்போராட்டம் நடைபெறுகிறது.

கிளர்ச்சி செய்வதற்கான குறைந்தபட்ச ஜனநாயக உரிமையைக் கூட காலில் போட்டு மிதிப்பதன்மூலமும், விவசாய சங்கத்திற்கு எதிராகக் காவல்துறையினரை ஏவி, சங்கத் தலைவர்களைக் கைது செய்திருப்பதன் மூலமும்,  வசந்தரா ராஜே அரசாங்கம், மீண்டும் ஒருமுறை தன்னுடைய எதேச்சாதிகார குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.  இந்த செயலாளது, இந்த அரசாங்கம் மக்களிடமிருந்து மிக வேகமாகத் தனிமைப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், விவசாய சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.