பொள்ளாச்சி, பிப்.21
ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான தனியார் வணிக வளாகத்திற்கு பிரதான குழாயிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் பொள்ளாச்சி ஆய்வு மாளிகை முன்பு உள்ள பிரதான குடிநீர் குழாயிலிருந்து, ஆளுங்கட்சியை சேர்ந்தவருக்கு சொந்தமான தனியார் வணிக வளாகத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து அரசியல் மற்றும் சமூக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முறைகேடான நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலை துறை அனுமதியின்றி சாலைகளில் குழி தோண்ட அனுமதித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிபிஐ சார்பில் சுப்ரமணியம், விசிக மாவட்ட செயலாளர் ச.பிரபு, சிபிஎம் பொள்ளாச்சி கிளை செயலாளர்கள் முருகேசன், வெள்ளியங்கிரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன், நகரச்செயலாளர் பழ.அசோக், பிரகாஷ், மஜக மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, தமுமுக முத்துபாய், மமக ஷேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.