பிப். 17 முதல் 20 வரை தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஏற்பாடுகள் பல காரணங்களுக்காக கட்சித் தோழர்களாலும் ஆதரவாளர்களாலும் பாராட்டப்படுகிறது. இப்படி பாராட்டும் பலர், அந்தப் பாராட்டுக்களை வரவேற்புக்குழுவின் தலைவர் என்கிற முறையில் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

K.Kanagaraj

க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்,


அந்த சிறப்புகளுக்கான பிரதான காரணம் நான் என்பதாக பல தோழர்கள் தெரிவிக்கின்றனர். அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்கிற முறையிலும் அந்த மாவட்டத்திற்கு பொருப்பாளன் என்கிற முறையிலும் நானும் பங்காற்றியிருக்கிறேன். அந்தப் பாராட்டுக்களில் எனக்குரிய பங்கும் உண்டு என்பதை நான் உணர்கிறேன்.
ஆனால், உண்மையில் இந்தப் பாராட்டுகளுக்கான முழுமையான உரிமையும் தகுதியும் அந்த மாவட்டத்தின் கட்சித் தோழர்களுக்கும், மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு மற்றும் பல்வேறு அரங்க தோழர்களுக்கு மட்டுமே முழுமையாக உண்டு.
மிகக் குறிப்பாக சொல்வதானால் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றிருந்த தோழர்கள் இதர குழுக்களை விட தாங்கள் சிறப்பாக பங்களிப்புச் செய்ய வேண்டும் என்கிற உந்துதலோடு செயல்பட்டனர். இடைக்கமிட்டி அளவிலும் மாவட்டம் முழுவதற்கும் இந்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியோடு செய்து முடித்தவர்களும் சிறப்பாக்கியவர்களும் அவர்களே.
வெளிப்படையாக உழைப்புச் செலுத்தியவர்கள் தவிர, தாங்கள் வகிக்கும் பொறுப்புகளால் தங்களை வெளிக்காட்ட முடியாமல், ஆனால் பொதுக்கூட்டத் திடல், தங்குமிடம், போக்குவரத்து என ஒவ்வொன்றிற்காகவும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பலரும் மேற்கண்ட பாராட்டுகளோடு தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுக்களுக்கும் நன்றிகளுக்கும் உரித்தானவர்கள்.
பொதுவாக எந்தவொரு நிகழ்விலும் தலைமை தாங்குகிறவர், அல்லது பொறுப்பாளர்களே பாராட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன் நீட்சியே இந்தப் பாராட்டுக்கள். எப்போதும் போல பெயர்கள் குறிப்பிடப்படாமல் அது குறிப்பிடப்படுகிறதா? என்கிற கவலையுமின்றி “என்கடன் கட்சிக்கு பணி செய்து கிடப்பதே” என அர்ப்பணித்துக் கொண்ட தோழர்களை என்னிடம் பாராட்டுக்களை தெரிவித்தவர்கள் சார்பாக மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் வாயார மனதார பாராட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
 

Leave a Reply

You must be logged in to post a comment.