புதுதில்லி, பிப்.22-
மத்திய அசு நாட்டிலுள்ள இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ஒன்பது அச்சகங்களையும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பன்னிரண்டு அச்சகங்களையும் இழுத்துமூட முடிவு செய்திருப்பதற்கு இந்தியத் தொழிற்சங்க மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய ரயில்வே அமைச்சகத்தின்கீழ் உள்ள எக்சிகியூடிவ் டைரக்டர் ரயில்வேஸ் (ஸ்டோர்ஸ்), 2018 பிப்ரவரி 7 அன்று அனுப்பியுள்ள தகவலின்படி அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கிடும் டிக்கெட்டுகள் அச்சடிக்கும் மூன்று அச்சகங்களும், பொதுவான மூன்று அச்சகங்களும் இழுத்துமூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அச்சகங்கள் அனைத்தும் கொல்கத்தா, குர்சியாங், கரக்பூர், கார்டன் ரீச், லக்னோ, கோரக்பூர், ஆஜ்மீர், மகாலெக்ஷ்மி(மேற்கத்திய ரயில்வே) மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் நாள்தோறும் பயன்படுத்தும்  பல்வேறுவிதமான அத்தியாவசிய அச்சு வேலைகளைச் செய்து தந்துகொண்டிருக்கின்றன. இதன்பொருள் இதற்கான தேவை ரயில்வேயில் தொடர்ந்து இருந்து வருகிறது என்பதேயாகும். எனினும் இப்பணிகளைத் தனியாரிடம் தாரைவார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இவற்றை மூடிவிட மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது.
இதேபோன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கிவந்த பன்னிரண்டு அச்சகங்களையும் இழுத்துமூடிடவும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கான மத்திய அமைச்சர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
மத்திய அரசு தன்னுடைய “இந்தியாவில் உற்பத்தி செய்க” என்ற முழக்கத்தின்கீழ் உண்மையில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பல்வேறுவழிகளிலும் உதவிவந்த நாட்டிலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளையும் இழுத்துமூடிவிடவும், அதன்காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிட்டு, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, அவர்களை வீதியில் நிறுத்திவிடவும் முடிவு செய்திருப்பது, தெளிவாகி இருக்கிறது. அத்துடன் நாட்டின் கஜானாவிற்கு வரவேண்டிய இலாபத்தை ஒழித்துக்கட்டி அவற்றை பெரு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்துவருகிறது.
இவ்வாறு வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டும் மத்திய அரசின் முடிவுகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுத்திட, தொழிற்சங்க  இயக்கமும் குறிப்பாக ரயில்வே மற்றும் மத்திய அரசின்கீழ் உள்ள சங்கங்களும் முன்வர வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு தபன்சென் கோரியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.