தூத்துக்குடி:                                                                                                                                                                                    இன்றைய இந்தியாவைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் சிறந்த இந்தியாவைப் படைப்பதற்கு மோடி அரசை வீழ்த்த புதிய துவக்கத்தை உருவாக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாட்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் செவ்வாயன்று பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:                                                                                                                                                                                                       எனது மாணவப் பருவத்தில் சுதந்திரப் போராட்ட வீர்ர் தோழர் என்.சங்கரய்யா உணர்வைத் தூண்டும் விதத்தில் உரையாற்றி உற்சாகமளித்தவர், அவர் இன்றும் நம்மோடு இருந்து, இளைய தலைமுறைக்கு உணர்வெழுச்சி ஏற்படுத்தி வருவது நம் அதிர்ஷ்டம். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகள் நிறைய இருப்பதால் மட்டும் வரலாற்றுச் சிறப்புள்ள நகரமல்ல, எண்ணற்ற புரட்சிகர எழுச்சிகளைக் கண்டிருப்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடியதால், வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த வட்டாரத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் 1906ஆம் ஆண்டு இங்கு உருவானது. தொழிற்சங்க இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது இம்மண்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கேட்டுப் போராடி, தொழிலாளி வர்க்க விடுதலைக்காக, புதிய நாகரிக வாழ்வு காண இயக்கத்தைத் தொடங்கியது இந்த நகரம். இன்று 21ஆம் நூற்றாண்டில் செஞ்சட்டை அணிந்த தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் இங்கே அணிவகுத்துள்ளனர். இது தமிழகத்துக்கு, இந்தியாவுக்கு புதிய வாழ்வு காண, புதிய எழுச்சியும், ஆர்வமும் ஏற்படுத்தும் துவக்கமாக, தமிழகத்தில் அடிப்படையான அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அளிக்கிறது.

நமக்கு ஏன் புதிய துவக்கம் தேவைப்படுகிறது? ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இப்போது என்னால் வேலைதர முடியாது, பக்கோடா தயாரித்து விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று இளைஞர்களிடம் சொல்கிறார். அதேபோல் விவசாய நெருக்கடி அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்கிறது. நமக்கெல்லாம் உணவு தரக்கூடிய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? கடன் நெருக்கடியில் சிக்கி அதைச் செலுத்த முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மோடி அரசின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 36 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு பயிர் சாகுபடி செலவை விட ஒன்றரை மடங்கு விலை தருவோம் என்று சொல்லி பதவி ஏற்ற மோடி அதை நிறைவேற்றவில்லை. எனவே விவசாய நெருக்கடி தொடர்கிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் அரை நிர்வாணக் கோலத்தில், டில்லியில் நிவாரணம் கோரிப் போராடினர். அவர்கள் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி தேவை. அந்தப் பணம் எங்களிடம் இல்லை என்று அமைச்சர் அருண் ஜேட்லி கைவிரித்து விட்டார். அதேசமயம் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருமுதலாளிகள், தொழிலதிபர்கள் அரசுடமை வங்கிகளில் கடனாக வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாத ரூ. 2 லட்சம் கோடியை வராகடன் என்று தள்ளுபடி செய்துவிட்டது மோடி அரசு. பெருமுதலாளிகள் கடனை வசூலிக்காமல் தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் தரப் பணமில்லை என்கிறது. இதுதான் இந்த அரசின் கிரிமினல் தனமான இயல்பு. எனவேதான் விவசாயிகள், மக்கள், இளைஞர்கள் விரோத இந்த அரசை தூக்கியெறிய நாம் புதிய துவக்கத்தை உருவாக்க வேண்டும்.

இந்த அரசைத் தூக்கியெறிய மற்றொரு காரணமும் இருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் புதிதாக உருவான செல்வத்தில் 73 சதவிகிதம், மேல்தட்டில் இருக்கும் ஒரேயொரு சதவிகிதத்தினரிடம் குவிக்கப்பட்டுள்ளது. செல்லா பணம், ஜிஎஸ்டி, பொருளாதார கொள்கைகள் மூலம், இதுவரை இந்தியா கண்டிராத அளவுக்கு மக்களிடம் மிகப்பெரும் கொள்ளையடித்து ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தியுள்ளனர். நம் எல்லோரின் பணமும் மோடி அரசின் கொள்கைகளால் பறிக்கப்பட்டு வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் காலத்தில் நான்கு காந்திகள் இருந்தனர். ஆனால் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியிரல் மூன்று மோடிகள் உருவாகி இருக்கிறார்கள். லலித் மோடி, நீரவ் மோடி என மோசடி மோடிகளை உருவாக்குபவராக நரேந்திர மோடி இருக்கிறார். ஏழைகள் மேலும் ஏழையாக, பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறும் இந்த கொள்கைகளை அமலாக்குவதாலும் நாம் மோடி அரசுக்கு எதிராக புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான ஊழல் அரசாக மோடி அரசு இருக்கிறது. “எங்கள் ஆட்சியில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை” என்று மோடி முழங்கினார். ஆம், அவர் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். பிரதமரே பெருநிறுவனங்களின் இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெருந்தொழில் அதிபர்களை உடன் அழைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அவருடன் யார் பயணம் செய்கிறார்கள், எவ்வளவு செலவானது, என்ன ஒப்பந்தம் போடப்பட்டது போன்ற விபரங்கள் எல்லாம் பரமரகசியம் என்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்திற்கே தகவல் தர முடியாது என்கிறார். ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டதுடன், அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கவும் தனக்கு வேண்டப்பட்ட நண்பரின் புதிய நிறுவனத்துக்கு அனுமதி அளித்து பல ஆயிரம் கோடி சூறையாடப்பட்டுள்ளது. இதுதான் புதுவகையான கொள்ளை. ஒவ்வொரு மூன்றாவது வாரமும் மோடி உலக நாடுகளுக்கு சென்றதன் ரகசியம் இப்போது புரிகிறதா?

அடிக்கடி உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் மோடி ஒரு நாள் நாடாளுமன்றத்தில் தனது இருக்கையில் அமர்ந்தபோது வித்தியாசமாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அங்கிருந்தவர்களைக் கேட்டபோது, விமான இருக்கையில் அமர்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டு ஷீட் பெல்ட்டை அவர் தேடிக் கொண்டிருப்பதாக பாஜக எம்.பி. ஒருவர் கூறினார். பிரதமர் ஒவ்வொரு முறையும் ஒரு வெளிநாட்டுக்குப் போய் ஒப்பந்தம் போட்டு வந்த பிறகும் இங்கு ஒவ்வொரு ஊழல் வெளி வருகிறது. இவ்வாறு பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மோடி, இளைஞர்கள் வேலை கேட்டால் அது முடியாது என்கிறார்.

நம் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமின்றி, நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், தேச இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி, தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்.

பசுக் காவலர்கள் என்ற பெயரில் சமூகவிரோத குண்டர்கள் கும்பலாகச் சேர்ந்து தலித் மற்றும் சிறுபான்மை மக்களை கொலை செய்கின்றனர். அத்தோடு பண்பாட்டுக் காவலர்கள் என்ற பெயரில் தனியார் ராணுவ குண்டர்கள், நாம் என்னவிதமான உணவு உட்கொள்ள வேண்டும், என்ன விதமான உடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு இளைஞர்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்றமோ, அரசு நிர்வாகமோ அதைக் கண்டு கொள்வதில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தனியார் ராணுவ குண்டர்கள் மதரீதியான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக இந்த தேசத்தின் சொந்த சகோதரர்களை கொலை செய்து, ஆபத்தான முறையில் நாட்டையும், சமூகத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்போவதாக, நீதிமன்றத் தடையை மீறி ரத யாத்திரையைத் தொடங்குகின்றனர். நாடு முழுவதும் சிறுபான்மை, தலித் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் அந்த யாத்திரையை தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் முடிக்கப் போகிறார்களாம்.

அத்துடன் நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், நீதித்துறை என எல்லா அமைப்புகளையும் இந்த ஆட்சியாளர்கள் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றனர். நீதித்துறையில் பாஜ அரசின் தலையீடு பற்றி உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் பகிரங்கமாகச் சொன்னதை இந்த நாடு பார்த்தது. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு உரிமையை உறுதியளித்த அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை தகர்க்க வேண்டும் என அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது இத்தகைய வெறித்தனமான செயல்பாட்டுக்கு எதிராக செங்கொடி இயக்கம் தான் உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கிறது என்பதற்காக செங்கொடியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு செங்கொடியின் வரலாறு தெரியாது. உலகின் மிக மோசமான பாசிச ஹிட்லர் இந்த செங்கொடியை ஒழித்துக் கட்ட முயன்றான். ஆனால் அவனது ஜெர்மனியிலேயே நாடாளுமன்றத்தில் ஹிட்லரின் கொடியை வீழ்த்தி செங்கொடி உயரப் பறந்தது. மேலும் இந்திரா காந்தி அவசர நிலையைத் திணித்து செங்கொடி இயக்கத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறையை ஏவியபோது, முன்னிலும் பலமாக செங்கொடி இயக்கம் எழுந்தது. கேரளம், மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் அதிகாரத்திற்கு வந்தது. அதேபோல் இப்போது செங்கொடி இயக்கத்தை பாஜக வீழ்த்த நினைத்து அடக்குமுறையை ஏவினால், முன்னிலும் புதிய சக்தியோடு வீறு கொண்டு எழுந்து, மதவெறி சக்திகளை வீழ்த்தி புதிய இந்தியாவை இந்த செங்கொடி உருவாக்கும்.

திரிபுரா மாநிலத் தேர்தலில் இந்த செங்கொடி இயக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என மிகப்பெருமளவு பணத்தை வாரி இறைத்திருப்பதுடன், ஏராளமான வெளியாட்களை உள்ளே புகுத்தி, தேச விரோத தீவிரவாத சக்திகளுடன் கரைபடிந்த முறையில் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது பாஜக. அவர்களுக்கு ராமாயணக் கதை தெரியும். அதில் ராமரின் வெண்நிற அசுவமேத குதிரை செல்லும் திசையில் இருக்கும் மன்னர்களின் நிலப்பரப்பு முழுவதும் ராமரின் ஆட்சிக்குச் சொந்தமாகும். யாராவது அந்த வெண்குதிரையைத் தடுத்து நிறுத்தினால் அவர்கள் மன்னரை போருக்கு அழைத்த்தாக அர்த்தம். அந்த புராணத்தில் லவ, குசா என்ற இரு சிறுவர்கள் அந்த அசுவமேத குதிரையைத் தடுத்து நிறுத்துவார்கள்.

அதுபோல 19 மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பாஜகவை சுத்தியலை ஏந்திய தொழிலாளி வர்க்கம், அரிவாளை ஏந்திய விவசாயி வர்க்கம் என்ற இரட்டையர்கள் ஒன்றாகச் சேர்ந்து சுத்தியல், அரிவாள் பொறித்த செங்கொடியை ஏந்தி தடுத்து நிறுத்துவார்கள். மார்ச் மாத தொடக்கத்தில் திரிபுரா தேர்தல் முடிவு இதை தெளிவாகப் பிரகடனப்படுத்தும்.

தமிழகத்தில், பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேரும்படியும், அமைச்சரவையில் இடம் பெற்றுத் தருவதாகவும் மோடி சொன்னதால்தான் சேர்ந்தேன் என்று அவர் இப்போது சொல்லிவிட்டார். தமிழகத்தில் அதிமுக பாஜகவின் இளைய பங்காளியாக மாறி இருக்கிறது. தெலுங்கில் புர்ரகதா என்ற ஒரு கதை உள்ளது. அதில் ஒருவர் கதை சொன்னால் பின்னால் இருந்து இருவர் ஜால்ரா தட்டுவார்கள். அதுபோல தமிழகத்தில் மோடிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். பாஜகவை தோற்கடிக்காமல் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது. அதற்காக ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு உரிய முடிவு செய்யும். அதில் பாஜகவை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பவர்களையும் சேர்த்தே தோற்கடிக்க முடிவு செய்வோம். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித புரிந்துணர்வோ, உடன்பாடு செய்ய மாட்டோம், ஆனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் அதிகபட்சமாக ஒன்று திரட்டி அவர்களைத் தோற்கடிப்போம். பாஜகவை எதிர்த்துப் போராடும்போது யாரோடும் சமரசம் கிடையாது.

இரவுக் காவலாளிக்கு முதலாளி கொடுத்த பரிசு!                                                                                                                               தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாட்டு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறிய குட்டிக் கதை:

பிரதமர் மோடி தன்னை மக்களின் சேவகன் (இரவுக் காவலன்) எனச் சொல்கிறார். தெலுங்கில் ஒரு கதை உள்ளது. ஒரு முதலாளியிடம் வேலை செய்யும் இரவுக் காவலாளி ஒரு கனவு கண்டுவிட்டு அதன் அடிப்படையில், தனது முதலாளியிடம் போய், “நீங்கள் இன்று ஒரு நிறுவனத்துடன் புதிய வேலைக்கு ஒப்பந்தம் செய்வதாக இருந்தீர்களே, அது வேண்டாம். அதனால் நீங்கள் சிக்கலில் சிக்குவதாக நான் கனவு கண்டேன்” என்பான். அதைக் கேட்டு, முதலாளியும் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடாமல் தவிர்த்து விடுவார். இரவுக் காவலாளி சொன்னதுபோலவே, ஒப்பந்தம் போட இருந்த நிறுவனத்தில் வருமானவரி, அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை செய்து, பல ஆவணங்களை எடுத்துச் சென்று விடுவார்கள். இரவுக் காவலாளி கனவு பலித்ததால் பெருமிதத்துடன் தனது முதலாளியிடம் சென்று நான் சொன்னதால் நீங்கள் தப்பினீர்கள் என்று கூறுவான். இதைக் கேட்ட முதலாளி, ஆமாம் உண்மைதான் எனச் சொல்லி, ரூ.5000 பரிசுத் தொகை கொடுத்துவிட்டு, இனி மேல் நீ வேலைக்கு வர வேண்டாம்! எனச் சொல்வார். இதனால் அதிர்ச்சி அடைந்த இரவுக் காவலாளி உங்களுக்கு நல்லது செய்த என்னை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள் என்று கேட்பார். அதற்கு அந்த முதலாளி, நீ கனவு கண்டு சொன்னதால் நான் தப்பியது உண்மைதான், அதற்காகத்தான் உனக்கு ரூ.5000 பரிசு வழங்குகிறேன். அதேசமயம் இரவு நேரத்தில் காவலாளியாக வேலை செய்ய வேண்டிய நீ அந்த வேலையைச் செய்யாமல் தூங்கிவிட்டு கனவு கண்டிருக்கிறாய். உன் வேலையை ஒழுங்காகச் செய்யாததால் உன்னை நீக்குகிறேன் என்பார். அதுபோல நம் நாட்டு மக்களின் இரவுக் காவலாளி எனச் சொல்லும் மோடி, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என ஏரளமான கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்யாததால் பிரதமரின் முதலாளியான இந்த நாட்டு மக்கள் அவரை வேலையை (பதவியை) விட்டு நீக்குவார்கள்!” என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சீத்தாராம் யெச்சூரியின் ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.

———————————

Leave A Reply

%d bloggers like this: