புதுதில்லி:
பன்முகத் தன்மையே இந்தியாவின் பெருமை என்றும், இந்த பன்முகத்தன்மையைதான் தனதுகுழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து வருவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு 7 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தாஜ்மஹால், சபர்மதி ஆசிரமம், அமிர்தசரஸ் பொற்கோயில் உட்பட பல இடங்களுக்கு சென்று வருகிறார்.மும்பையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், அமீர் கான், அனுபம் கெர் மற்றும் தமிழ்த்திரைப்பட நடிகர் மாதவன் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார். தொழிலபதிகர்கள் கூட்டத்திலும் பேசினார்.

அப்போது, “இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் என் குழந்தைகளுக்கு நான் காட்ட விரும்பிய விஷயங்களில் ஒன்று, இந்தியாவின் பன்முகத்தன்மை ஆகும். இங்கே மசூதிக்குச் செல்ல முடியும். அதே வேளையில் கோயிலுக்கும் செல்ல முடிகிறது. இது இந்தியாவின் சிறப்புக்குரிய பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நான் ஆசிரியராக இருந்ததால் இதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இங்கே என் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
அவர்களிடம் இந்தியா குறித்துப் பகிர்ந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா – கனடா உறவுகளை மேலும் வளர்ப்பதற்கு இப்பயணம் உதவும். ஒன்றுபட்ட இந்தியா தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வருகிறது” என்று பெருமைப்பட குறிப்பிட்டார்.

புறக்கணிக்கும் மத்திய அரசு?
இதனிடையே கடந்த 17-ஆம் தேதி இந்தியா வந்த கனடா பிரதமரை, இந்திய அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தில்லி வந்த கனடா பிரதமரை, மோடி அரசு ஒரு கேபினட் அமைச்சரைக்கூட அனுப்பி வரவேற்கவில்லை என்றும், ஆக்ரா தாஜ் மகாலுக்கு சென்ற ட்ரூடோவை அந்த மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத் கூட சந்திக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக மோடி அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் விழாவிற்கு கனாடாவில் அரசு விடுமுறை அளித்ததோடு அம்மாதத்தை தமிழ்ப் பாரம்பரிய மாதமாகவும் அங்கீகரித்தவர்தான் ஜஸ்டின் ட்ரூடோ. அதுமட்டுமன்றி, ஆண்டுதோறும் பொங்கலன்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். கனடா நாட்டின் 150-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டவர் ட்ரூடோ ஆவார். கனடா பிரதமரை வரவேற்று, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் டுவீட் செய்துள்ளார். அதில், “இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்கிறேன்; இந்தப் பயணம் அருமையான நினைவுகளுடன் கூடிய பயணம் அமைய வாழ்த்துகள்; இந்தியாவின் விருந்தோம்பலை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் என எண்ணுகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: