தூத்துக்குடி:
வங்கக் கடல் சிவப்பு நிறமாக மாறி அப்படியே தூத்துக்குடி மாநகருக்குள் வந்தது போல் சிவப்பு மயமாய் அணிவகுத்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்… தியாகம் என்றால் சங்கரய்யா, சங்கரய்யா என்றால் தியாகம்” என மாநில மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தனது முதல் உரையைத் துவக்கினார் கே.பாலகிருஷ்ணன்.அப்போது, மாநிலம் முழுவதும் இருந்து திரண்டு வந்திருந்த தோழர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான இளம் செந்தொண்டர்கள் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:                                                                                          தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எத்தனையோ இருக்கலாம். நாளையோ, நாளை மறுநாளோ சிலர் கட்சி தொடங்கலாம். ஆனால், தமிழகத்தின் எதிர்காலம் செங்கொடி இயக்கத்திற்குத் தான். இந்த மகத்தான மாநாட்டை நடத்திட எங்களது தோழர்கள், கள்ள நோட்டு பேர்வழிகளிடமோ, கிரானைட் ஊழல்வாதிகளிடமோ, மணல் கொள்ளையர்களிடமோ நிதி பெறவில்லை. மாறாக உழைப்பாளி மக்களிடம் வீடு, வீடாகச் சென்றும், அரசு ஊழியர், ஆசிரியர், சிறு- குறு தொழில் செய்வோர் என பல்வேறு தரப்பினரிடம் நிதி பெற்றுள்ளனர்.
தமிழக காவல்துறையின் நடவடிக்கை தற்போது மோசமாக உள்ளது. கணவருடன் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து தாலிச் செயினை ஒருவன் பறித்துச் செல்கிறான். அந்தக் காட்சி ஊடகத்தில் வருகிறது. பட்டப் பகலில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிக்கப்படுகிறது. அங்கெல்லாம் காவல்துறை போய், தடுத்து நிறுத்துவது இல்லை.
ஆனால், டாஸ்மாக் மற்றும் போதைப் பழக்க வழக்கத்திற்கு எதிராக இந்த தேசத்தை பாதுகாக்கும் பணியில் எங்களது இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துகிறது. 5 வயது சிறுமியின் மண்டையை காவல்துறை உடைத்துள்ளது. எடப்பாடி அரசு காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டு அரங்கத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் வ.உ.சி, மகாகவி பாரதியின் பெயரைச் சூட்டியுள்ளோம். அவர்களது வழியில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் எங்களது கட்சி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதே தூத்துக்குடியில் பேரணியாக செல்ல முயன்ற வாலிபர் சங்கத் தோழர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியது. உங்களது தாக்குதலுக்கு அஞ்சி ஓடும் கூட்டம் அல்ல எங்களது இளைஞர் படை. ஹிட்லரை விரட்டியடித்ததும், இதே மண்ணில் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் பீரங்கி தாக்குதலை எதிர்த்தும் போராடிய பாராம்பரியத்துக்கு சொந்தமானது இந்த செங்கெடி இயக்கம். சிவகங்கை மாவட்டத்தில் எங்களது கட்சியின் மாவட்ட செயலாளர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் மாநில முதல்வர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல். கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை தலைவிரித்தாடுகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பெற்றோர்களிடமிருந்து பெருமளவில் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றன.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி, மோடிக்கு காவடி தூக்கும் ஆட்சியாக மாறி விட்டது. தமிழகத்தில் மதவெறியைத் தூண்டி மதக் கலவரங்களை ஏற்படுத்தி அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றிட பாஜகவினர் முயற்சிக்கின்றனர். சென்னையில் உள்ள எங்களது கட்சி அலுவலகத்தை தாக்க முயற்சி செய்தனர். கோவையில் கட்சி அலுவலகம் மீது குண்டு வீசினர். அதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
பாஜக-அதிமுக ஆகிய இரு மக்கள் விரோத சக்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வரக்கூடிய ஏப்ரல் மாதம் இக்கட்சிகளின் மோசமான கொள்கைகளை விளக்கும் வகையில் தமிழகத்தின் 4 முனைகளிலிருந்து மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. இப்பிரச்சார இயக்கமானது, மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தியும், அதிமுக-பாஜக ஆகிய கட்சிகளை வீட்டிற்கு அனுப்பும் பிரச்சாரமாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.