====கோடியேரி பாலகிருஷ்ணன்======                                                                                                     =====கேரள மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)====
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள சாதாரண மக்களின் சக்தியும், நம்பிக்கையுமாகும். அப்பட்டமான சுரண்டலின் மூலம் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும் கட்சியின் தத்துவத்தின் மீதான நம்பிக்கையோடும் மகத்தான மக்கள் எழுச்சிக்குத் தலைமையேற்றிடும் இயக்கமாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 22வது கட்சிக் காங்கிரஸின் ஒரு பகுதியாக கேரள மாநில மாநாடு 2018 பிப்ரவரி 22 முதல் 25 வரை திருச்சூரில் நடைபெறும் இவ்வேளையில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற வலுவான இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் மாநில மாநாடு ஆலப்புழாவில் நடைபெற்றது. அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளத்தில் அதிகாரத்தில் இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சி. இந்த இரண்டு அரசுகளுக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் யார் முன்பந்தியில் நிற்பது என்பதில் போட்டி நிலவியது.
பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும், மதவாதத்திற்கும் எதிரான போராட்டத்திற்கும், ஐக்கிய முன்னணி அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் பல்வேறு தியாகம் நிறைந்த போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி மற்றும் அதன் வெகுஜன இயக்கங்களால் முடிந்துள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தளங்களிலும் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் கட்சி நடத்தியுள்ளது. ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டமானது பெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற போராட்டமாக அமைந்தது.தோட்டத் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், கயிறுத் தொழிலாளர்கள் போன்றோர் நடத்திய போராட்டங்கள் மக்களின் கவனத்தைப் பெற்றதாக அமைந்தன. உம்மன்சாண்டி அரசு தனது ஆட்சியின் கடைசிக் காலங்களில் நிலம் மற்றும் அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் மாபெரும் மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக அதிகரித்து வந்தது. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சர்களுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள், சோலார் ஊழல் ஆகியவற்றை மக்களிடம் கொண்டுசென்று எதிர்ப்புப் பிரச்சாரங்களை மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடத்தியது. 
மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக மத்திய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் துணையோடும் கேரள சட்டமன்றத்திற்குள் நுழைந்தும்விடும் வாய்ப்பாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலைக் கண்டது. 70+1 என்பது தங்களது லட்சியம் என்றும் என்டிஏ அரசை அமைப்போம் என்றும் சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக தலைவர் அமித்ஷா அறிக்கைவிட்டார். பாஜக-விற்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று முதலமைச்சர் உம்மன்சாண்டியும் பேசினார். இடது முன்னணி 3வது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் இருசாராரும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். கேரள அரசியலை இரண்டு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்குப் பின்னால் கொண்டுவர காங்கிரசும் பாஜக-வும் லட்சியமிட்டிருந்தன.இவர்களது நோக்கங்களைத் தோல்வியுறச் செய்து இடதுசாரி ஜனநாயக முன்னணியை வெற்றிபெறச் செய்வது எனும் சவாலை தேர்தல் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. 
கேரளத்தின் வலுவான மதச்சார்பின்மையின் அடித்தளத்தைத் தகர்க்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் பல்வேறு சாதிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எஸ்என்டிபி-யின் மேற்பார்வையில் பிடிஜெஎஸ் என்ற அரசியல் கட்சியைத் துவக்கியது. இவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு பெரிய அணியாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ போட்டியிட்டது. மத்திய அரசு அதிகாரம், ஆர்எஸ்எஸ்-ஸின் ஆதரவு, பெருமளவு பணம் இவையனைத்தையும் உபயோகித்தும் என்டிஏ-விற்கு ஒரு இடமும், 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. கிடைத்த ஒரு இடமான நேமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் முழுமையாக என்டிஏ-விற்குக் கிடைத்ததன் பலனாகவே வெற்றிபெற முடிந்தது.காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். பாஜக உயர்த்தும் சவாலை நேமம் தொகுதியில்கூட காங்கிரஸால் எதிர்கொள்ள இயலவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது. இடது ஜனநாயக முன்னணிக்கும், என்டிஏ-விற்கும் எண்ணிக்கைப் போராட்டம் நடக்கும்போது காங்கிரஸ் வாக்காளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான தெளிவான அனுபவம் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொண்டுதான் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்தது.
இடது ஜனநாயக முன்னணி அரசு அதிகாரத்திற்கு வந்து 20 மாதங்களைக் கடந்துள்ள வேளையில் கேரள அரசியலில் பெருமளவிலான மாற்றங்களுக்கு தொடக்கமிடப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த மாணி கேரள காங்கிரஸ் கட்சி அந்த முன்னணியிலிருந்து விலகி தனியாகச் செயல்படுகிறது. மற்றுமொரு முக்கிய அரசியல் கட்சியான ஜனதாதளம் (யு) அந்த முன்னணியிலிருந்து விலகி இடது முன்னணி அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக யுடிஎஃப் அரசியல் மற்றும் இயக்க ரீதியில் தகர்ந்துள்ளது. யுடிஎஃப் தற்போது காங்கிரஸ்-லீக் முன்னணியாகச் சுருங்கியுள்ளது. பாஜக முன்னணியில் சேர்ந்த பிடிஜேஎஸ், ஜானு கட்சி ஆகியவை வெளிப்படையாகவே தங்களது அதிருப்திகளைத் தெரிவித்துள்ளன.
இத்தகைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது என்னவெனில் எல்டிஎஃப் எதிர்ப்பு முன்னணிக்கு கேரளத்தில் ஆதரவு இல்லையென்பதாகும். இச்சூழலில் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், சாதீயத்திற்கு எதிராகவும் போராடும் மதச்சார்பற்ற சக்திகளின் அரசியலை ஒருமுகப்படுத்துவது குறித்து கவுரவத்துடன் விவாதிக்க வேண்டிய விசயமாக மாறியுள்ளது. இன்றைய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொண்டு எல்டிஎஃபுடன் ஒத்துழைத்து செயல்படக்கூடிய கட்சிகள் மற்றும் நபர்கள் ஆகியோருடனான உறவை வளர்த்தெடுப்பதன் மூலம் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பெருமக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.
’சமூக நீதி, முழுமையான வளர்ச்சி’ என்ற கண்ணோட்டத்துடன் எல்டிஎஃப் அரசு செயல்படுகிறது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் என்பதில் உறுதியுடன் நின்று அரசை முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு பினராயி விஜயன் அரசால் இயன்றுள்ளது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர், மீன்பிடி தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அரசு முன்னுரிமை வழங்கியது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 76 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும், 12 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் நியமிக்கப்பட்ட தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகும். 2015 ஆம் ஆண்டு கட்சியின் மாநாடு நடந்தபோது 405591 ஆக இருந்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 463472ஆக உயர்ந்துள்ளது. 57881என்ற அளவில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது. 2093 லோக்கல் கமிட்டிகளும், 209 ஏரியா கமிட்டிகளும் செயல்படுகின்றன. வர்க்க-வெகுஜன இயக்கங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் செயல்படும் உறுப்பினர்களாக மாறுவது, கட்சி கிளைகளை சுயமாகச் செயல்படும் அரங்கங்களாக மாற்றுவது, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ’தோசபிமானி’ சந்தாதாரர்களாவது, ஒவ்வொரு கிளையும் தேசாபிமானி மற்றும் சிந்தா வார இதழ்களின் இரண்டு சந்தாதாரர்களையாவது சேர்ப்பது போன்ற செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டு தற்போது கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மக்களிடம் நெருங்கிப் பழகும் கட்சி என்ற நிலையில் கட்சிக் கிளைகளின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
சாதனைகளையும், பலவீனங்களையும் மதிப்பீடு செய்து எதிர்கால செயல்திட்டத்திற்கு மாநாடு வடிவம் கொடுக்கும். கட்சி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஜீவகாருண்ய செயல்கள், சமூக சேவை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துதல் என்ற கண்ணோட்டத்துடன் கட்சி செயல்படுகிறது. இத்தகைய பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிபிஐ(எம்) மக்களுக்காக செயல்படும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜன புரட்சிக் கட்சி என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள முடிகிறது. இத்தகைய செயல்பாடுகளை மேலும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கும், இயக்கத்தை வலுவுடன் கட்டுவதற்கும் உதவக்கூடிய தீர்மானங்களை திருச்சூரில் கூடும் மாநாடு எடுக்கும்.இந்த மாநில மாநாடு ஒரு சரித்திர நிகழ்வாக மாறும் என்பது உறுதி.
தமிழாக்கம்
மு.சங்கரநயினார்

Leave a Reply

You must be logged in to post a comment.