மதுரை:
நடிகர் கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கினார்.
“நாளை நமதே” என்ற பெயரில் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் அரசியல் பயணத்தை துவங்க உள்ளதாகவும், அன்று இரவு மதுரையில் தனது துவங்கும் அரசியல் கட்சியின் பெயர் வெளியிடப்படும் என்றும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.அதன்படி மதுரை யா. ஒத்தக்கடையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தனது ரசிகர்கள் மத்தியில், புதன்கிழமையன்று இரவு 7.30 மணியளவில், “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய அரசியல் கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். முன்னதாக, ஒன்றோடு ஒன்றாக சிவப்பு வண்ணத்தில் இணைக்கப்பட்ட கைகளுக்கு மத்தியில், கறுப்புக்கு இடையே வெள்ளை நிறத்தில் நட்சத்திரத்துடன் அமைந்த கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தி, அதனை மாநாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்தார்.
தனது கட்சியின் மாவட்ட நிர்வாகிகளையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இம்மாநாட்டில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, காலையில் இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.பின்னர், கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். இராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலுக்கு சென்றார். அங்கு மண்டபம் மீனவர்கள் மத்தியிலும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் உரையாடி வருவதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன்னிடம் பேசுகையில், ‘கொள்கையை பற்றி கவலைப்படுவதைவிட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டும்” ஆலோசனை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.பின்னர் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்ற கமல், பொதுக்கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை தவிர்த்து வாகனத்திலிருந்தே பேசினார். “எவ்வளவு அன்பிருந்தால் உங்கள் ஊர் பையனைப் பார்க்கக் காத்திருப்பீர்கள்?” என்று கேட்டதுடன், “இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: