தனது நாட்டு மக்களுக்கு கல்வியும் வேலையும் வழங்குவது ஒரு நாட்டின் அரசு நல்லரசு என்பதற்கான இலக்கணமாகும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசுகல்வியையும் வேலையையும் வழங்குவதையே ஏறத்தாழ கைவிட்டு விட்டது என்றே கூறலாம். வேலைவாய்ப்பு தொடர்பாக மத்திய அரசும் அமைச்சர்களும் பிரதமர் அலுவலகமும் பிற அமைச்சகங்களும் தரும் தகவல்கள் – புள்ளிவிபரங்கள் அத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளன.நமது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குவருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வழங்குவோம் என்று நாட்டு மக்களின் தலையிலடித்துச் சத்தியம் செய்யாத குறையாக மேடைக்கு மேடை தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கினார். ஆனால் ஆட்சிக்குவந்ததும் அத்தனையும் மறந்து போச்சு என்றாகிவிட்டார்.
ஏறத்தாழ நான்காண்டு ஆகும் நிலையில் எட்டுக் கோடிப்பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அலுவலகமே வெறும் 21 லட்சம் வேலைவாய்ப்பு தான் அரசால்வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது. ஆனால் மற்றொரு அமைச்சகமோ 3.46 லட்சம்கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது. இந்தத் தகவலில் எது உண்மை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தபன்சென் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மத்திய பாஜக அரசு அதற்கு பதிலும் சொல்லவில்லை; அதுபற்றி கவலையும் கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார். எப்படி உருவாக்குவார்கள், வழங்குவார்கள் என்பது பற்றி அவர் கூறுவதைக் கேட்டால் ராஜா எவ்வழி மந்திரி அவ்வழி என்பது உறுதியாகிறது. மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதைக் காட்டிலும் சுய வேலை வாய்ப்புகளையும் தொழில் முனைவோர்களையும் உருவாக்குவதே சிறந்த நடவடிக்கை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையிலே அரசின் செயல் திட்டங்களையும் வகுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.பக்கோடா விற்பது கூட ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்து சரிதான் என்பதற்கும் அமைச்சர் கிரிராஜ்சிங் வக்காலத்து வாங்கியிருக்கிறார். ஏனென்றால் இந்த அரசு இருக்கிற வேலைகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் இப்படி பேசித்தான் சமாளிக்க முடியும் என்ற வகையில் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா இளைய சமூகம் வேலை தேடிக் கொண்டிருப்பதையே ஒரு வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதனால் இனிமேல்வேலை தேடுவதையே வேலை வாய்ப்பு என்று இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால் அவர்களால் அத்தகைய வேலைவாய்ப்பையே வழங்க இயலும். அப்படிப்பட்ட கொள்கையைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.