கோவை உக்கடத்தில் இரண்டு பணிமனைகள் செயல்படுகிறது. இதில் ஒன்றாம் பணிமனையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் ஓய்வு அறை உள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு பேருந்து பணிக்கு செல்லும் முன்பு பகலில் ஓய்வு எடுப்பதற்கும், தங்களது சீருடை, பயணச்சீட்டு மற்றும் சில்லரை காசுகள், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை இரும்பு பெட்டியில் வைத்து பாதுகாப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சுற்றுச்சுவர் இல்லாமல் வெறும் மேற்கூரை மட்டும் உள்ள இந்த அறையில் மழை மற்றும் வெயில் காலத்தில் தங்க முடியாத நிலை இருப்பதால் இதனை சீரமைக்க வேண்டுமென தொழிலாளர் வலியுறுத்தி வந்தனர். மேலும், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேலாளரிடம் இப்பணிமனையின் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதேநேரத்தில், நாகை மாவட்டம் பொறையார் பகுதியில் போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் விடுதி இடிந்து விழுந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போக்குவரத்து கழக நிர்வாகமும் உடனடியாக ஓய்வறையை சரி செய்வதாக உறுதியளித்து மேற்கூரையை பிரித்து அகற்றியது. இதன்பின் ஹலோபிளாக் கற்களை கொண்டு சுற்றுசுவர் எழுப்பும் பணியை மேற்கொண்டனர். சுறுசுறுப்பாக ஆரம்பித்த இப்பணி தீடீரென சுற்றுச்சுவரோடு நின்றுவிட்டது.

இதனால் தற்போது மேற்கூரை இல்லாமல் வெட்ட வெளியில் தங்கும் விடுதியாக ஓய்வறை மாறியுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசுபோக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், காற்று, மழை போன்றவற்றில் இருந்து எங்களையும், எங்களது உடமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கழகத்திடம் கோரிக்கை வைத்தோம். இப்போது சுற்றுச்சுவரை மட்டும் எழுப்பிவிட்டு மேற்கூரை போடுவதற்கு பணமில்லை என்று அறைகுறையாய் பணியை விட்டு, விட்டு சென்றுவிட்டனர். இதனால் எதற்கும் பயனில்லாமல் ஓய்வறை உள்ளது.அதேநேரத்தில் ரூ.20 லட்சம் செலவு செய்து அனைத்து பேருந்துகளுக்கும் டிஜிட்டல் பெயர் பலகை வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது அதற்கான பணியை ஆரம்பித்துள்ளனர். இரவு பகல் பாராமல் பணியாற்றும் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிர்வாகத்திற்கு மனமில்லை. ஆனால், ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் போர்டு மாட்டுவதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு வேளை டிஜிட்டல் பெயர் பலகை வைப்பதற்கு தான் அதிகாரிகளுக்கு கூடுதலாக கமிஷன் கிடைக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தற்போது எங்கள் டிப்போவில் உள்ள 65 சதவீத பேருந்துகள் ஓடுவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் போக்குவரத்து தேவை கருதி அதனை நாங்க இயக்கி வருகிறோம். பணிமனையில் இரண்டு தொழிற்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்குஅதிகபட்சம் இரண்டு பேருந்துகளை மட்டுமே ஆயில் மற்றும் கிரீஸ் அடிப்பது மற்ற சில்லரை வேலைகளை செய்ய முடியும். ஆனால் தனியார் ஒப்பந்தத்திற்கு இந்த பணியை கொடுத்துவிட்டு ஆறு பேர் ஒரு நாளைக்கு முப்பது பேருந்துகளை பார்ப்பதாக கணக்கு காட்டி பணத்தை பெற்று வருகின்றனர். கடமைக்கு செய்கின்ற வேலையால் எந்த பயனும் இல்லை. மொத்தத்தில் ஊழியர்கள் நலனுக்கு முக்கியத்துவம் தராமல் முதுகில் அழுக்கை அப்பிக்கொண்டு முகத்துக்கு வர்ணம் பூசும் வேலையாக டிஜிட்டல் போர்டு மாட்டும் பணி நடைபெறுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.