அம்பத்தூர், பிப். 20-
மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு 5 வசூல் மையம் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் ஏராளமான வட மாநில ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய் அதிகாலை 2.30 மணியளவில் வண்டலூரில் இருந்து மாதவரம் நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரவாயல் சுங்கச்சாவடி வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, வரி வசூலிக்கும் மையத்தின் மீது மோதியது.இதில் அங்கு பணம் வாங்கிக் கொடுக்கும் பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் தாக்கோடா (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பணியில் இருந்த ஊழியர்கள் மணி (53) சந்திர்ஷெட்டி (32) நில்மதுஷா (18) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். லாரி மோதியதில் வரி வசூலிக்கும் மையம் பலத்த சேதம் அடைந்தது.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்தி வேல் கைது செய்யப்பட்டார். தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் லாரியை வேகமாக இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.