தமிழகத்தின் முதன்மை கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவோம் என விடுதலைப்போராட்ட வீரரும் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா அறைகூவல் விடுத்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாட்டில் திங்களன்று (பிப்.19) கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப்போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வாழ்த்துரை வழங்கினார். கம்பீரமான சிம்மக்குரலில் அவர் பேசியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பொருத்தமாக பாரதியையும், வஉசியையும் நினைவுகூர்ந்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர். 1923இல் செங்கொடியை உயர்த்தியவர். கான்பூரில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றினார். 1928-இல்தென் இந்திய ரயில்வே போராட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர்களது வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்க காரணமாக இருந்த அமீர்ஹைதர்கானையும், பி.சுந்தரய்யாவையும், எஸ்.வி.காட்டேவையும் நினைவுகூருவோம். 1936-இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் பணியாற்றினர். தோழர் பி.ராமமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலேயே இடம் பெற்றிருந்தார்.
1942 வரை நமது கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. 1947இல் நாடு விடுதலை அடையும்போது வேலுர் சிறையில் 400 தோழர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 16 அன்று தான் இஎம்எஸ் உள்ளிட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 1935 முதல் தோழர்கள் பி.ராம மூர்த்தியும், ஜீவானந்தமும் கம்யூனிஸ்ட் கட்சிப்பணியை மேற்கொண்டார்கள். கட்சியின் அன்றைய மத்தியக்குழு கேரளத்திலிருந்து தோழர்கள் ஏ.கே.கோபாலன், சுப்ரமணிய சர்மா, வி.பி.சிந்தன் போன்ற தோழர்களை தமிழகத்தில் கட்சியை கட்டுவதற்கு அனுப்பியது. அந்த தோழர்களை நினைவு கூருவோம்.
1942 முதல் 1953 வரை தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு மாநிலச் செயலாளர்களாக தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியன், ஏ.நல்லசிவன், நான், என்.வரதராஜன் இருந்தோம். ஆறாவது செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் உள்ளார். அவரும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு தோழர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். 22 மாநில மாநாடுகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் நடந்துள்ள அரசியல் விவாதம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. 17 பெண்கள் உட்பட 98 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். நாம், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதிகள். நாம் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதி. உலக அளவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டி வந்த கம்யூனிஸ்ட் அகிலம் 1943இல் கலைக்கப்பட்டது. ஆனாலும் நமது கட்சி உலக அளவிலான கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டங்களை நடத்தி வருகிறது. உலக ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோ இருக்கும் வரை அதற்கு எதிரான ஒரு அமைப்பு தேவையாக உள்ளது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டைக் கொண்ட கட்சி யால்தான் புரட்சியை நடத்த முடியும். எனவே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் செயலாற்றும்போது கட்சியின் அர சியல் நிலைப்பாட்டையே முன்னிறுத்த வேண்டும். தனிநபர் விருப்பங்களுக்கு அதில் இடமளிக்கக் கூடாது. ஸ்தூலமான நிலைமைகளை ஸ்தூலமாக ஆராய்ந்து கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதையே கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி வருகிறார்.
தமிழ் தேசிய இனவாதத்திற்கு இடமளிக்காமல் தமிழக மக்களின் மொழி, பண்பாடு. கலாச்சார உரிமைகளை வென்றெடுப்போம். நமது கட்சியின் ஸ்தாபன பலம் வலுவானது. எம்ஜிஆர் கூட இதை குறிப்பிட்டுள்ளார். கவிதை நடையில் தாய் புதினத்தை எழுதிய கலைஞர் கருணாநிதி என்னையும், நல்லகண்ணுவையும் அணிந்துரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். எழுதிக்கொடுத்தோம். மேற்கு வங்கம், கேரளம், திரிபுராவைப்போல் தமிழகத்திலும் நமது கட்சியை பலம் பொருந்தியதாக உருவாக்குவோம். இவ்வாறு சங்கரய்யா பேசினார். 96 வயதான தோழர் சங்கரய்யாவின் உரை மாநாட்டு பிரதிநிதிகளை உற்சாக மூட்டியது. கட்சியின் வரலாறு சங்கரய்யா. சிபிஎம் ஜிந்தாபாத் என்கிற முழக்கம் நீண்ட நேரம் அரங்கம் அதிர ஒலித்துக்கொண்டே இருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.