சென்னை, பிப். 20-
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. அதன் பின்பகுதியில் சென்னை கோட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 7 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த அலுவலகத்தில் சென்னை ரயில்வே கோட்டத்திற்கான அனைத்து அலுவலகங்களும் உள்ளன. ரயில்வே உயர் அதிகாரிகள் பலருக்கும் இங்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. அவற்றில் குளிர் சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இந்த கட்டிடத் தின் 4ஆவது மாடியில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து ஊழியர்கள் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வேப்பேரி, உயர்நீதி மன்றம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் நிதி மேலாளர் அலுவலகம் முழுவதும் எரிந்து நாசமானது. அங்கு இருந்த கணினி, டேபிள், சேர்கள் தீயில் எரிந்தன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது குளிர்சாதன வசதியை ஆப் செய்யாமல் போனதால் தீபிடித்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தகோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: