சென்னை, பிப்.20-
குமரி மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு பாகுபாடு பார்க்காமல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீண்டெழும் குமரி இயக்கத் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைவர் எம்.தேவசகாயம், உதவித் தலைவர் தாமஸ் பிராங்கோ, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியவுடன் பேரிடர் மேலாண்மை திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பெரும்பாலான மீனவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒக்கிபுயல் தாக்கிய பிறகு 3 நாட்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசு ஸ்தம்பித்து போயிருந்தது.உரிய நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வராததால் கடலோர காவல் படை தேடும் பணியை மேற்கொள்ள முடியாமல்போனது. உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் கொண்டு வரப்பட்ட கடலோர பேரிடர் தடுப்பு திட்டமும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அது தொடர்ந்து செயல்பட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது.

அரசின் கணக்கின்படியே கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்து 3 ஆயிரத்து 677 மீனவர்கள் காணாமல்போனார்கள். படகுகள், வீடுகள், விவசாய நிலங்கள், பயிரிட்ட வாழை, ரப்பர் என 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் 10 விழுக்காடு நிதி கூட வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த நிவாரணம் இன்னும் பெரும்பான்மையான மக்களுக்கு போய் சேரவில்லை. 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துவிட்டனர். இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். ஒரு சில விவசாயிகளும், தொழிலாளர்களும் மரம் விழுந்து, வீடு இடிந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களையும் முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழப்பை பொறுத்தவரை பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். 90 விழுக்காடு குத்தகை விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு முறையான எந்த ஆவணமும் இல்லை. அவர்களையும் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் விவசாயத்தை தொடர்வதற்கு கிராம அதிகாரிகள், பஞ்சாயத்து பணியாளர்கள், சமூக உதவிக் குழுக்களை ஈடுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசு செய்வது போல் நீளம் எவ்வளவு என பார்க்காமல் அனைத்து படகுகளையும் பதிவு செய்ய வேண்டும். கேரள அரசுஅறிவித்துள்ளது போல் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்களுக்கு செயற்கைக்கோள் தொடர்புள்ள தொலைபேசி வழங்க வேண்டும். பல்வேறு பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதுமானதாக இல்லை. உண்மையான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வாழையை மீண்டும் பயிரிட வாழைக்கன்றுகள் வழங்க வேண்டும். கடல் நீர்விவசாய நிலங்களில் புகுந்ததால் மண்வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மண்வளத்தை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்குள்ள குளங்கள் உடைந்து போய் கழிவு நீர் கலந்துள்ளது. எனவே குளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் வேலையும், ரேஷனில் இலவசமாக பொருட்களும் வழங்கவேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படவில்லை. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அமைப்பு முழுவதையும் சீரமைக்க வேண்டும். மீன்பிடிக் கப்பல்களுக் கென்று தனியான ஒரு செயற்கைக் கோளைப் பயன்படுத்த வேண்டும்.

மீன்பிடிக்கப்பல்களில் கருவி இணைக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்லும் விவரங்களை கண்டறிய வேண்டும். செயற்கைக்கோள் தொலை பேசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு உரிமத்துடன் கூடிய, அதி உயர் அலைவரிசை கொண்ட தொலைபேசிகள் வழங்க வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள், கடல் புல் படுக்கை என பல்வேறு இயற்கைவளங்களும் கொண்ட மாவட்டமாகும். சுற்றுச்சூழலை பாதிக்கும் மிகப்பெரிய அடிப்படைக் கட்டுமான திட்டங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த மாவட்டத்திற்கென்ற தனித்துவமான வளங்களைக் கொண்டு சமச்சீரான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தை சுற்றுச்சூழல் முக்கியத்துவம்மிக்க, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இச்சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், விஜயதாரணி, ஆஸ்டின், ஜெகத்கஸ்பர் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.