மதுரை, பிப்.20-
பிரதமர் மோடி மிகப்பெரிய ஊழல் ஆட்சியை நடத்துகிறார். பஞ்சாப் தேசியவங்கியில் நடைபெற்ற ஊழல் பலஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. இதுவரை நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரியது இதுதான்’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திங்களன்று வந்த புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘பஞ்சாப் தேசிய வங்கியில் நடைபெற்ற ஊழலில் அதிகாரிகள் மட்டுமே உடந்தையாக இருக்க முடியாது. இதில் அரசியல்தலையீடும் உள்ளது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சி இப்பிரச்சனையை கிளப்பும்.காங்கிரஸ் கட்சி மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக மக்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். புதுச்சேரியும் தமிழகமும் இத்தீர்ப்பால் பாதிப்பைச் சந்தித்துள்ளன. காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பைமதிக்க வேண்டும். தமிழக ஆட்சியில் பாஜக-வின் தலையீடு உள்ளது என்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு உதாரணம். தமிழக வளர்ச்சியில் பாஜக அக்கறைகாட்டவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களில் தமிழக அரசைதொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. தமிழக அரசும் புதுச்சேரியைப் போன்று ஆளுநர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

Leave A Reply