தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் காவல்துறையினர் உருட்டுக்கட்டையால் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.  நான்கு நாள்களாக நடைபெறும் இந்த மாநில மாநாட்டில்,  கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக நான்காவது நாளான மாநாட்டை முன்னிட்டு, தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியிலிருந்து சங்கரப்பேரி வரை 8 கிலோமீட்டர் தூரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, அந்தக் கூட்டத்துக்கு வந்த காவல்துறையைச் சேர்ந்த இருவர், திடீரென கட்டையைக் கொண்டு பேரணியில் வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில், திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எப்.ஐ மாவட்டச் செயலாளர் விமல், திண்டுக்கல் நகரச் செயலாளர் விஷ்ணுவர்த்தன், மதுரையைச் சேர்ந்த சோலைக்குமார் மற்றும் நான்கு வயது குழந்தை அகிலேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.  இதனால், அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர், மார்க்சிஸ்ட் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து பேரணி தொடர்ந்தது.  மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மாநாட்டின் வெற்றியைப் பொறுக்க முடியாமல் காவல்துறையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி விகடன்
 

Leave a Reply

You must be logged in to post a comment.