“சமஸ்கிருதத்தை விடவும் தமிழ்மொழிதான் மிகவும் தொன்மையானது. அதுமட்டுமின்றி, உச்சரிப்பதற்கும் தமிழ்மொழி மிகவும் அழகானது. ஆனால் எனக்கு வணக்கம் மட்டுமே சொல்லத் தெரியும். அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.”புதுதில்லியில் பிப்.16ஆம் தேதி நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.இந்த செய்தி வெளியானதுமே தமிழகத்தில் உள்ள அவரது கட்சித் தலைவர்கள் ஆளாளுக்கு மோடிபுகழ்பாடத் தொடங்கிவிட்டார்கள். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவுகடந்த பாசம் உண்டு என்றும் தமிழ் குறித்து வட மாநிலங்களைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் தலைவரும் இதுபோல் கூறியதில்லை என்றும் அதன் அடிப்படையில் தமிழின் முதுமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒருபடி மேலே போய் தமிழ்மொழியை பாதுகாக்க பாஜகவால் தான் முடியும் என்று ஒரே போடாய் போட்டுள்ளார்.தமிழின் முதுமையை நிலைநாட்ட பிரதமர் மோடி கூறியதன் அடிப்படையில் தான் முயல வேண்டும் என்கிற நிலையில் தமிழ்மொழி இல்லை என்பதை முதலில் பொன்னார் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்மொழி செம்மொழி என்று ஏற்கெனவே மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால்அதற்குரிய மரியாதையையும் அந்தஸ்தையும் வழங்குவதற்குத் தான் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமில்லை.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகள் என அறிவிக்கவும் அலுவல் மொழியாக ஆக்கவும் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். ஆனால்அதை ஏற்காமல்தான் இந்தி மொழியை நாடு முழுவதும்திணிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது மத்தியஅரசு. இந்தியின் பெயரில் சமஸ்கிருதத்தையும் பிற மொழிகள் பேசும் அனைத்து மாநிலங்களிலும் திணித்திட வேண்டுமென்ற வெறி கொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று ஆர்எஸ்எஸ்- பாஜகபரிவாரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முடிந்தவரை இயன்ற வழிகளில் எல்லாம் அதைச் செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றன.இந்திமொழியை அனைத்து மாநிலங்களும் ஏற்காதவரை இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என்ற ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழியை மதிக்காமல் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் முன்னிறுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறது மத்தியஅரசு. அதற்காக கணிசமான நிதியையும் ஒதுக்கியிருக்கிறது. உண்மை நிலை இப்படியிருக்கும் போது இவர் கூறியதை வைத்துத் தமிழின் முதுமையை எப்படிநிலைநாட்டுவார் பொன்னார்? யாரை ஏமாற்ற இந்தப்பேச்சு?உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பது உலகறிந்த உண்மை. சீனம், எபிரேயம், கிரேக்கம்,லத்தீன், ஹூப்ரு போன்ற மொழிகளின் வரிசையில் இடம் பெற்றிருக்கும் சிறப்புக்குரியது தமிழ். ஆனால் இன்றும் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் புழக்கத்தில் இருக்கும் சீரிளமைத் திறம் கொண்டது தமிழ். இருபத்தியோராம் நூற்றாண்டின் கணினித் தமிழாகவும் இணையத்தில் அதிகமாக புழக்கத்தில் உள்ளதாகவும் திகழ்கிறது தமிழ். எனவே மோடியின் கூற்றை வைத்துத்தான் தமிழின் முதுமையை நிலைநாட்ட வேண்டிய தேவை தமிழுக்கு ஏற்படவில்லை என்பதை பொன்னார் நன்கு உணரட்டும்.தமிழின் பெருமையை உணர்ந்தே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில்தான் மத்திய ஆட்சியாளர்கள் தமிழை ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கு மறுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மனமில்லாத மத்திய பாஜக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே உச்சநீதிமன்றத்தின் கருத்துக் கேட்டு அதற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே உச்சநீதிமன்றம் அந்த மசோதாவுக்கு அனுமதிமறுத்துவிட்டது. நல்லதாய்ப் போய்விட்டது என்று மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது.மோடியாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட, சமஸ்கிருதத்தை விடவும் மூத்த மொழியான, பேச அழகான மொழியான தமிழை நீதிமன்றங்களில் உலவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழைவிட இளைய மொழியான இந்தி மொழி வடமாநிலங்களில் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக இருக்கும் போது தமிழால் இயங்க முடியாதா? அதைத் தடுப்பது எது? மோடி ஆர்எஸ்எஸ்சின் பிரதம சேவகராகத்தான் இருக்கிறார். அவர் இந்தியாவின் – பல மொழிகள் பேசும் நாட்டின்- பிரதமராக இல்லை. அதனால்தான் ஒரு மொழி, ஒரு தேசம் என்கிற ஆர்எஸ்எஸ் – சின் கொள்கையைப் பின்பற்றி மத்திய பாஜக ஆட்சி தமிழை தமிழ்நாட்டில் நீதிமன்ற அலுவல் மொழியாக்க அனுமதிக்கவில்லை. தமிழ் குறித்து வட மாநிலங்களைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் தலைவரும் இதுபோல் கூறியதில்லை என்று பொன்னார் புளகாங்கிதம் அடைகிறார். ஆனால் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும்,குஜராத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி – தமிழின் சிறப்பை உணர்ந்து அதைப் படிக்க விரும்பினார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழிலேயே கையெழுத்துப் போட்டிருக்கிறார். இதையெல்லாம் பொன்னார் அறியவில்லை போலும். அல்லது காந்தியை வடமாநிலத்தைச் சேர்ந்தவராக கருதவில்லையோ? அல்லது தெரிந்தும் பாதி உண்மை பேசும் பாசிசத் தன்மை என்பது இதுதானோ?“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”என்றார் மகாகவி பாரதி. அத்தகைய இனியமொழி பேசுவதற்கு இனியதாகத் தானே இருக்கும். அதனால்தான் மோடி அவர்களும் “உச்சரிப்பதற்கும் தமிழ்மொழி மிகவும் அழகானது” என்று கூறியிருக்கிறார். அத்தகைய அழகான மொழியை நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக்க அவருக்கு தயக்கம் ஏன்? உச்சரிக்க அழகான மொழியான தமிழை நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்களை பேச வைத்து, அமைச்சரான பொன்னாரையும் பதில் சொல்ல வைத்து ரசிக்கலாமே பிரதமர் மோடி. அத்தகைய அரிய வாய்ப்பு அமைச்சர் பொன்னாருக்கும் அவரது தலைவர் மோடிக்கும் வாய்த்திருக்கும் போது இந்தக் காரியத்தை அவர்கள் செய்திடலாமே! காரியம் செய்துதான் பெயர் வாங்க வேண்டுமா? வெறுமனே புகழ்ந்தாலே – வாய்ச் சொல் அருளினாலே பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் பாஜகவினர். கடந்த ஆண்டு கூட ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துவிடும்.

இனி ஜல்லிக்கட்டை மோடிக்கட்டு என்றே சொல்லலாம் என்கிற அளவுக்குப் பேசியவர் தானே பொன்னார். அதனால் அவரது தலைமை மீதான பாசம் பொங்கி வழிகிறது. அதனால் தான் “தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது மோடிக்கு அளவு கடந்த பாசம்உண்டு” என்கிறார்.தமிழ்நாடு மீதான பாசத்தைக் காட்ட மோடிக்கு கடந்த மூனேமுக்கால் ஆண்டில் எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தன. சென்னை பெரு வெள்ளம் முதல் ஒக்கி புயல் வரை – கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பின் போதும் தமிழகத்துக்கு நிதியை கிள்ளிப் போடக்கூட மனம் வரவில்லையே? கேட்டதில் பத்தில் ஒரு பங்கு கூட பணம் ஒதுக்கவில்லையே? தமிழக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை வழங்கவிருந்த நீட் தேர்வு விலக்க மசோதாவை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பியதை – குடியரசுத்தலைவரின் கையெழுத்துப் பெற்றுத்தந்து தமிழ்நாட்டின் மீதான அளவு கடந்த பாசத்தைக் காட்டியிருக்கலாமே? அனிதா எனும் மாணவக் கண்மணிஉயிரை மாய்த்துக் கொள்ளவிடாமல் தடுத்து மருத்துவராகச் செய்திருக்கலாமே? அப்போது எங்கே போனது மோடியின் தமிழகத்தின் மீதான அளவு கடந்த பாசம்!நாலு வார்த்தை புகழ்ந்து பேசினால் நடந்த கொடுமைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள் தமிழர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் பொன்னாரும் அவரது தலைவர் மோடியும். ஒரு படத்தில் வடிவேலு பேசுவது தான் நினைவுக்கு வருகிறது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன், ரொம்ப நல்லவண்டா”. ஆனால் இந்த வசனம் தமிழர்கள் அனைவரும் பேசுகிற வசனமாக இருக்காது பொன்னார் அவர்களே! நிச்சயம் அது வேறு வசனமாகத்தானிருக்கும்.நீங்கள் கூட குமரி மாவட்டத்துக்கு குளச்சல் துறைமுகத்தை கொண்டு வந்தே தீருவேன் என்றுகூறினீர்கள். ஆனால் இதுவரை அதைச் செய்யவேயில்லை. ஆனால் மாவட்டத்துக்கும் இயற்கைக்கும் பாதகமான வெவ்வேறு திட்டங்களைக் கொண்டு வர ஆர்வம் காட்டுகிறீர்கள். மக்கள் நலனுக்காகவும் ஏதாவது செய்யுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே காரியம் செய்வதை விட்டு மாவட்ட, மாநில மக்களின் நலனுக்காகவும் ஏதாவது செய்யுங்கள், தமிழகத்தின் மீது பாசம் வைத்திருப்பதைக் காட்டுங்கள்.

ப.முருகன்

Leave A Reply

%d bloggers like this: