தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22 வது மாநில மாநாட்டு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டு நிகழ்வின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்
இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், பன்முகப் பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்தியா உள்ளது என்பதை இது அங்கீகரிக்கிறது. எனவே தான் இதன் உள்ளீடாகக் கூட்டாட்சி கோட்பாடு வலியுறுத்தப்படுவதுடன் , சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப் பட்டிருக்கிறது.
60 ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் ஆட்சியில், மாநில உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டன. தற்போதைய பாஜக ஆட்சியோ, மாநில உரிமைகள் மீது எல்லை தாண்டி பகிரங்க யுத்தத்தையே  தொடுக்கிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்திற்கு ஏற்ப வலிமையான மையம், பலவீனமான மாநிலங்கள் என்பதே பாஜகவின் தத்துவார்த்த நிலைபாடு.  மேலும் நவீன தாராளமய கொள்கை அடிப்படையில் மத்திய அரசின் நிதி பிரச்சனைகளை மாநில அரசுகளின் மேல் சுமத்துவது, மாநில அரசுகளை கடன் வலையில் சிக்க வைப்பது, அதிலிருந்து மீள்வதற்கு, நவீன தாராளமய கொள்கைகளை பின்பற்றுவதை நிபந்தனை யாக்குவது  என்பது வாடிக்கையாகி விட்டது.
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் குறைக்கப்படுகிறது. நிதி கமிஷன், மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாலும், மத்திய திட்டங்களை மாநில அரசுகள் மீது சுமத்துவதன் மூலம், இந்த அதிகரிப்பு பலனளிக்காமல் செய்யப்படுகிறது. தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாகப் பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களை சென்றடையும் மொத்த நிதி குறைந்து வருகிறது.  குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போன்ற பல மத்திய சட்டங்களை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புக்கு நிதி கொடுக்கப்படுவதில்லை. தேசிய ஊரக உறுதி திட்டத்துக்குப் போதுமான நிதியினை மாநிலங்களுக்கு வழங்காததும், முந்தைய ஆண்டுகளுக்கு தரவேண்டிய நிதி நிலுவையும் காரணமாக இத்திட்ட்த்தை முழுமையாக நிறைவேற்ற முடிவதில்லை.
திட்டக் கமிஷன் கலைப்பில் துவங்கி, உணவு பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பொது விநியோக முறை சீர்குலைவு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி போன்றவை திணிப்பு வரை மாநிலங்களின் உரிமைகள் பலவிதங்களில் வெட்டப்பட்டுள்ளன. விவசாய விளை பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாய விலைக்கு மேல் மாநில அரசுகள் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவு, மாநில அரசு தன் மக்களுக்கு உதவும் அதிகாரத்தை முடக்குவதாகும். விலங்கு விற்பனை சந்தை தொடர்பான விதிகள் அறிவிக்கை (2017) மாநிலங்களின் அதிகார வரம்பில் தலையிடும் நடவடிக்கையே. விலங்கு சந்தைகள் அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில பட்டியலில்தான் உள்ளது.
மாநில நிர்வாகங்களில் ஆளுநர்களின் தலையீடுகள் அதிகரிக்கின்றன. தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஆளுநர் ஆய்வு நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்  கொள்கிறார். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டதும். நிதி நிலை அறிக்கை உரை இந்தியும், ஆங்கிலமும் கலந்த மொழியில் முன்வைக்கப்பட்டதும், மைல் கற்களில் இந்தி கட்டாயமாக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களின் மொழி சமத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தமிழை, தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக ஆக்க மத்திய அரசு மறுக்கிறது. அகில இந்திய தேர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு விட்டது. கீழடி ஆய்வு முடக்கப்பட்டுத் தமிழர் வரலாற்றின் தொன்மையும், செழுமையும் மூடி மறைக்கப்படுகிறது.
மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நிர்ப்பந்தம், இனி உயர்கல்வியில் அனைத்தும் அவ்வழியே என்பதற்கான முன்னோட்டமே. பாடத்திட்டங்களும் மாநிலங்களின் தனித் தன்மைக்கேற்ப இல்லாமல் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாகக் கட்டமைக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை, அதிகாரங்களை மத்திய அரசின் கையில் மையப்படுத்துகிறது. கல்வி  மத்திய பட்டியலில் இருப்பது போன்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.
இத்தகைய போக்கினை தட்டிக்கேட்கும் அரசியல் உறுதி இல்லாத அரசாக அதிமுக அரசு இருக்கிறது.  தம் ஊழல் சாம்ராஜியத்தை  பாதுகாக்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவும், மாநில நலன்களையும், உரிமைகளையும் அடகு வைக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான மாநில அரசுகளால் உள்ளாட்சிகள் வரை அதிகார பரவல் உறுதி செய்யப்படுகிறது. மாநில உரிமைகள் குறித்து வலுவாகக் குரல் எழுப்பும் இயக்கமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.
பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தேச ஒற்றுமையுடன் இணைந்த விசயமாகும். இந்நிலையில் மாநில நலன்களைப் பாதுகாக்க, மாநில உரிமைகளை வலுப்படுத்த வரும் காலத்திலும் உறுதியுடன் போராட சிபிஐ(எம்)ன் 22 வது மாநில மாநாடு தீர்மானிக்கிறது.
முன்மொழிந்தவர் – தோழர். உ.வாசுகி
வழிமொழிந்தவர் – தோழர். ஆர்.ராஜாங்கம் (புதுச்சேரி)
தமிழக மீனவர் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் 
இயற்கை சீற்றங்கள், மற்றும் நவீன தாராளமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இலங்கை கடற்படை தாக்குதல், இதுபோன்ற காரணங்களால், தமிழக மீன்பிடி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்திய கடல் வளத்தை அன்னிய மற்றும் இந்திய கார்பரேட் மீன்பிடி கப்பல் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில்,  மத்திய அரசின் கொள்கைகள் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகிறது. குறிப்பாக தேசிய கடல் மீன்பீடி கொள்கை 2017, நீலபுரட்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால்இ பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்துவிட்டு, இந்திய பெருங்கடலில் அன்னிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி கொட்டிக்கிடக்கும் மீன்வளத்தைச் சுரண்ட வழிவகை செய்யவும்இ மேலும் சாகர் மாலா போன்ற பெரும்திட்டங்களின் பெயரால்  கடலூர்-நாகை கடற்கரைப்பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளால் கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதுடன் கடல் மற்றும் நதிகளின் சுற்றுக்சூழல் அழிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி தமிழகம் மற்றும் கேரளத்தை தாக்கிய ஒக்கி புயலால் குமரி மாவட்ட மீனவர் கிராமங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன.
500க்கும் மேற்பட்ட மீனவர்களின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரண நிதியை கேரள அரசு போல் தழிழகத்திலும் மீனவர்களுக்கு வழங்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மீனவர்களைக்காக்க நவீனத் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதுகாப்புக் கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி, பெண் மீனவர்களுக்கும் சம நிவாரணம் வழங்கிட வேண்டும்.
கடல் மற்றும் கடல்சார் பகுதிகளில் தாது மணல் கொள்ளை கனிமவளக்கொள்ளை இறால் பண்ணைகளை அமைத்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்வது, மாற்று வாழ்வாதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்புத்திட்டத்தை விரிவடைந்த வகையில் நிறைவேற்றுவது.  பாக் நீரிணைப்பகுதியில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்துவது, தமிழக மீனவர்களை பாதிக்க கூடிய இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை கைவிடச் செய்ய மத்திய அரசு ராஜிய ரீதியில் அழுத்தம் தருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடித்தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இதுவரை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கி வந்த நிலையில் உள்நாட்டு நீர்நிலைகளில் தனியார்கள் குத்தகை எடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை நிறைவேற்றியதன் காரணமாக உள்நாட்டு (Inland) மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துள்ளது.
எனவே தமிழக அரசு உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கிட வேண்டும்.
மேலும் கடல் மீனவர்களுக்குரிய அனைத்து சலுகைகளும் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என சிபிஐ(எம்)ன் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
முன்மொழிபவர் – சி.ஆர்.செந்தில்வேல்  (இராமநாதபுரம்)
வழிமொழிபவர் – எஸ்.அந்தோணி (கன்னியாகுமரி)
அங்கன்வாடி உள்ளிட்ட திட்டப்பணியாளர்களை- தொழிலாளர்களாக அங்கீகரித்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
¨ தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் (ஊட்ட சத்து மதிய உணவு (ICDS) தேசிய சுகாதார இயக்கம் (NHM)
¨ தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP)
¨ தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLM) சர்வசிக்ஷ  அபியான் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள்,
¨ திட்டபணியாளர்கள் ஆஷா
¨ தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர்கள்
உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கப்பணிகளில் தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களே ஆவர்.
இவர்கள் லட்சக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற குடும்பங்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், ஊரக உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் பாராட்டதக்க வகையில் அடிப்படை சேவைகளை வழங்கி வருகின்றார்கள்
திட்ட பணியாளர்களில் பெரும்பாலானோரும், பயனாளிகளில் பெரும்பாலானோரும், சமூகத்தில் ஒரங்கட்டப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  பணியாளர்களில் பலர் 10 முதல் 35 ஆண்டுகள் பணியாற்றி வந்தாலும், இவர்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. கடுமையான உழைப்புச்சுரண்டலுக்கு ஆட்படும் இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து உரிமைகளும்  தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இவர்களை சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் விருந்தினர்கள் எனவும் அதிலும் மேலாக “திட்ட பணியாளர்கள்” என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு ”ஊதியம்” என்ற பெயரில் ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு வருடத்திற்கு ஒருமுறை என சிறிய தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, அரசு திட்டப்பணியாளர்கள் அனைவரும் ”தொழிலாளர்கள்” என அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மத்திய – மாநில அரசுகள் உறுதிபடுத்த முன் வர வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்தி  கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர் –  ஏ.குமார்
வழிமொழிந்தவர் –   டெய்சி
சிறுபான்மையினர் நலன் குறித்த தீர்மானம்
மதவழி சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நீதிபதி ராஜேந்திரசச்சார் ஆணையம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து, அவர்களது வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் அளித்தது. அதைத்தொடர்ந்து சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா குழு பரிந்துரை செய்தது. இந்த இரண்டு பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அப்பரிந்துரைகள் மீது மத்திய அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை, வழிப்பாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. மத்தியில் வகுப்புவாத பாஜக அரசு வந்த பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறைகளால் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றர். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் எந்தவித விசாரணையுமின்றி 10 முதல் 20 ஆண்டுகள் வரை  சிறையில் வாடும் அவலநிலையுள்ளது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்துக்குட்பட்டவர்களாக கருதி அவர்களுக்கு பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மற்றும் உரிமைகள் வழங்கிட பரிந்துரைத்தும், அந்த பரிந்துரைகளும் ஏற்கப்படாமல் உள்ளன. இதனால் தலித் கிறிஸ்தவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு அதன்படியான துணைத் திட்டங்கள் வழங்கப்பட்டு சிறுபான்மை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வழிவகை செய்ய மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. வகுப்புவாத சக்திகளின் ஆட்சேபனை அல்லது எதிர்ப்பை காரணம் காட்டி சிறுபான்மை மக்களின் நியாயமான வழிபாட்டு உரிமைக்கு குந்தகமாக அரசு நிர்வாகமும், காவல்துறையும் செயல்படும் நிலைமை உள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதைப்போல் பல ஆண்டுகளாக விசாரணையின்றி  சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நிவாரணமும், உத்தரவாதமும் அளித்திட  வேண்டும்.  மேலும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை, வாழ்வாதார உரிமையைப் பாதுகாத்திடவும், வகுப்பு  வெறிசக்திகளின் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் தமிழக அரசை சிபிஐ (எம்)ன் 22வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர் –  எஸ்.ஜி. ரமேஷ்பாபு (கடலூர்)
வழிமொழிந்தவர் –   அகமது உசைன் (குமரி)

Leave a Reply

You must be logged in to post a comment.