சிம்லா,
மோடி மாணவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பியபோது தலித் மாணவர்களை குதிரை கட்டும் இடத்தில் உட்கார வைத்து தீண்டாமையை கடைபிடித்ததாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வீட்டில், பிரதமர் மோடியின் “பரிஷா பர் சர்சா” என்ற தேர்வை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப, குள்ளு கிராம பஞ்சாயத்துக் குழுவினர் ஏற்பாடு செய்தனர். அந்த, அந்நிகழ்ச்சியை காண வந்த மாணவர்களுள் தலித் மாணவர்களை மட்டும் ஆசிரியர் ஒருவர் தடுத்து, தீண்டாமையை கடைபிடிக்கும் நோக்கில் குதிரைகள் கட்டிப்போடும் இடத்தில் உட்கார வைத்தது மட்டுமல்லாமல், நிகழ்ச்சியின் இடையில் எழுந்து செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து, அம்மாணவர்கள் தனது நோட்டுப்புத்தகத்தில் புகார் எழுதி, அதனை அப்பகுதி துணை ஆணையாளரிடம் கொடுத்துள்ளனர். குதிரைகளைக்கட்டிப்போடும் இடத்தில் உட்காரவைத்தது மட்டுமல்லாமல், மதிய உணவு உண்ணும்பொழுது, தலித் மாணவர்களை தனியாக உட்காரச்சொல்வதாகவும், தலைமை ஆசிரியர்  இன்றும் தீண்டாமையை பின்பற்றுவதாகவும் அப்புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, உள்ளூர் அமைப்பான  ‘அனுசுதித் ஜாதி கல்யாண் சங்க்’ அத்தலைமை ஆசிரியர் மற்றும் இது தொடர்பானவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை அடுத்து, தலைமை ஆசிரியர் ராஜன் பர்த்வாஜ், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்றும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். ஆனால், அதனை அந்த அமைப்பினர் ஏற்கவில்லை.

மேலும், இச்சம்பவம் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் பர்த்வாஜ் தெரிவித்தார். ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் உண்மையாக இருந்தால், க்ரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் துணை ஆணையாளர் யூனஸ் தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர், மாவட்ட திட்ட அலுவலர் முதலியவர்கள் கொண்ட குழு, இன்று (திங்கட்கிழமை) அப்பள்ளியை பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: