பாட்னா,
பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வு அறைக்கு ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிகஅளவு மாணவர்கள் காப்பியடிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், 1,000 மாணவர்கள் பிடிபட்டனர். அதுபோலவே போலி தேர்வு கண்காணிப்பாளர்கள் 24 பேரும் சிக்கினர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பள்ளி தேர்வுகள் வாரிய தலைவர் ஆனந்த் கிஷோர் கூறியதாவது:
‘‘இந்த ஆண்டு பிஹார் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 17.70 லட்சம் மாணவ்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஷு மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது. செருப்பு மட்டுமே அணிந்து தேர்வு அறைக்குள் வரலாம். 25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர். மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனக்கூறினார்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு 42 வயது என்பது பின்னர் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply