விஜயவாடா, பிப்.19-
பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் மக்கள்விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான இதர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட முடிவெடுத்துள்ளன. மத்திய பாஜக அரசுக்க எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகள் தவிர இதர கட்சிகள் அனைத்தும் இணைந்த வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதிக்கட்சி, லோக் சத்தா கட்சி, ஜன சேனா கட்சி, ஆம் ஆத்மி கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் நவதாரம் ஆகிய கட்சிகள் இவற்றில் பங்கேற்றன. இக்கூட்டத்தில் நாடாளுமன்றம் மீண்டும் மார்ச் 5 அன்று கூடும்போது மத்திய பாஜக
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதென்று தீர்மானித்துள்ளன. ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தை, ஆந்திரப்பிரதேசமாகவும், தெலங்கானாவாகவும் தனித்தனியே பிரிக்கும் சமயத்தில் ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசால் உத்தரவாதம்  கொடுக்கப்பட்டிருந்தது. அதனை இதுவரை அது அமல்படுத்தாதிருக்கிறது. இதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் விதத்தில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்திட அவை தீர்மானித்திருக்கின்றன. இக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடையே பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் கே.பார்த்தசாரதி, தெலுங்கு தேசம் தலைவரும் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு, மக்களை ஏமாற்றி இத்தனை ஆண்டுகாலமும் ஆந்திராவிற்கு அநீதி இழைத்துவிட்டார் என்ற கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பி.மது, மத்திய பாஜகவின் ஆந்திர மாநிலத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்க சந்திரபாபு நாயுடுவும் துணை போய்க்கொண்டிருக்கிறார் என்ற குற்றம் சாட்டினார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்குப் பதிலாக சில சிறப்பு நிவாரணைங்களை மத்திய அரசு அளிக்க முன்வந்தபோது அதனை சந்திரபாபு உடனடியாக ஏற்றுக்கொண்டதன்  மூலம் அநீதி இழைத்துவிட்டார்
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: