புதுதில்லி, பிப்.19-

கார்ப்பரேட் ஜாம்பவான்கள், உயர்மட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தில் வலுவாக உள்ள அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து சுயேச்சையான மற்றும் முறையான புலன்விசாரணை தேவை என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலுவாகக் கோரியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அசோக் தாவலே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கோரியிருப்பதாவது:

கார்ப்பரேட் ஜாம்பவான்கள், உயர்மட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தில் வலுவாக உள்ள அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து சுயேச்சையான மற்றும் முறையான புலன்விசாரணை தேவை. நாட்டின் வரலாற்றிவ்ல நடைபெற்றுள்ள வங்கி ஊழல்களிலேயே இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இது ஒரு  மிகப்பெரும் ஊழலாகும்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நடைபெற்றுள்ள இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டு, தண்டித்து, சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு குறித்தும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மிகவும் கூருணயர்ச்சிமிக்க இந்தப் பிரச்சனை பிரதமர் அலுவலகத்திற்குக் கொண்டுவந்தபின் அங்கே அது நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது, அதன் அறநெறி பிறழ்வையே காட்டுகிறது. பிரதமர் அலுவலகத்திற்குக் கீழ் இயங்கிடும் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இதில் எப்படி நேர்மையான மற்றும் சுயேச்சையான விசாரணை நடத்திடும் என்பது புரியவில்லை. ஏனெனில் இந்த ஊழவில்  பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய அனைத்தும்   பின்னிப்பிணைந்திருக்கின்றன. எனவே இது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் உட்பட அனைத்து அரசமைப்புச்சட்ட நிறுவனங்களுக்கும் ஆழ்ந்த கவலையை அளிக்கும் விஷயமாகும்.

இலட்சக்கணக்கான விவசாயிகள் கடன்வலையில் சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் தத்தளித்து, தற்கொலை செய்துகொண்டிருக்கும் அதேசமயத்தில், இவ்வாறு பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது நாட்டிலுள்ள நேர்மையான குடிமக்கள் அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். வங்கிகள் பயிக்கடன்களை விவசாயிகளுக்கு அளிக்க மறுக்கின்றன. காரணம் கேட்டால் அவர்களிடம் ஒத்திசைவான காப்புப்பத்திரம் (collateral security) இல்லை என்று பதில்கூறுகின்றன. ஆனால் அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளுக்க பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சுய கையொப்பமிட்ட புரிந்துணர்வுக்கடிதத்தின் பேரில் அள்ளிக்கொடுக்கின்றன.

நாட்டின் தாராளமய, தனியார்மய, உலகமயக்கொள்கைகளை அமல்படுத்தத்தொடங்கிய 1991ஆம் ஆண்டிலிருந்தே வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு, உருப்படியான சொத்துகள் எதுவும் இல்லாதபோதிலும், மிகப்பெரிய அளவில் கடன்கள் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டன. பொதுவாக, அவர்களிடம் காப்புத்தொகை 110 சதவீதம் இருந்தால்தான் வங்கிகள் உத்தரவாத (கியாரண்டி) சான்றிதழ்கள் வழங்கிடும். ஆனால், 2011க்குப்பின் பஞ்சாப் நேஷனல் வங்கி இத்தகைய சான்றிதழ்களை எவ்வித காப்புத்தொகையும் இல்லாதநிலையிலும் கடன் வாங்குபவர் மற்றும் கொடுப்பவருக்கிடையிலான புரிந்துணர்வுக் கடிதத்தின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்டிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. வங்கிகள் தங்களுடைய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்ச்சி, கார்ப்பரேட்டுகளுக்கு உதவிட  இவ்வாறு முன்வந்திருக்கின்றன. உயர்மட்ட அதிகாரமட்டத்திலிருந்துவந்த நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிகள் கடன்கள் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். இது நாட்டின் வங்கி  அமைப்புக்கு மிகப்பெரிய சாபமாக மாறியிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் 2011ஆம் ஆண்டிலிருந்தே துவங்கிவிட்டதாக சாட்சியங்கள் காட்டுகின்றன. இவ்வாறு இந்த ஊழல் ஐமுகூ மற்றும் தேஜகூ அரசாங்கங்களின் கீழ் நடந்துள்ளன. நரேந்திரமோடி பிரதமரானபின்னர், ஊழல் பேர்வழிகள் பிரதமர் அலுவலகத்தின் நேரடி ஆதரவுடன் செயல்படத் துவங்கி யிருக்கின்றனர். இந்த வங்கி ஊழல் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு 2015ஆம் ஆண்டிலும் பின்னர் 2016ஆம் ஆண்டிலும் தெரிவிக்கப்பட்டிருந்தும், நரேந்திர மோடி கயவர்களை வெளிக்கொணர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. மாறாக 2017இல் இக்குற்றச்செயலைப் பெரிய அளவில் நடைபெற அனுமதித்திருக்கிறார்.

இத்தகைய ஊழல்கள் நடைபெறும்போது, கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளைப் பலிகடாவாக மாற்றுவதன்மூலம், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை விவாதிக்க உயர் அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் தவிர்த்திட முயற்சிக்கின்றனர். இப்போது அரசாங்கம் எப்ஆர்டிஐ சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து, பெரும் கார்ப்பரேட்டுகளிடம் அளித்த கடன்களை அவர்களிடமிருந்து திரும்பப்பெறுவதற்குப் பதிலாக, சாமானிய மக்களிடம் இருந்து பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.