செங்கல்பட்டு,
சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த போரூரில் வசித்த தஷ்வந்த், கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம், 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றார். சிறுமி உடலை மறைத்து வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து தானும்  தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் தஷ்வந்தின் நடத்தையில் சந்தேகமடைந்து காவல்துறையினனர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தஷ்வந்த் கொலை செய்ததும், சிறுமி உடலை மறைக்க சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த , அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்தது.
சிறுமியின் கொலைக்குப் பின்னர் அவமானம் அடைந்த தஷ்வந்தின் பெற்றோர் தங்கள் வீட்டை, குன்றத்தூருக்கு மாற்றியிருந்தனர். இந்நிலையில் தஷ்வந்த் தனது தாயை கொலை செய்து, அவரது நகைகள் மற்றும், அங்கிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மும்பைக்கு தப்பிச் சென்றார்.
மும்பையில் தனிப்படை காவல் துறையினர் தஷ்வந்தை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தப்பிச்சென்ற தஷ்வந்தை மீண்டும் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் தாயை கொலை செய்த குற்றத்தின் கீழ் தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற தஷ்வந்த் மீதான, சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணையும் முடிந்துள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இதுவரை 35 சாட்சிகளிடம் நடைபெற்ற விசாரணை முடிவுற்றது. இந்நிலையில் இன்று ஹாசினி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதால் நீதி மன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சிறுமி ஹாசினி கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கினார். தஷ்வந்த் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி வேல் முருகன் தஷ்யந்துக்ககு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: