ஆதியோகியால் அதிர்ந்த இயற்கை…..
ஈசா ஆசாமியின் ஆசையால் அதிர்ந்தது காடு

அமைதி தேடி வந்தவர்களின் ஆனந்த நடனத்தில் அதிர்ந்து போனது காடு…

இரை தேடப் போன தாய்ப்பறவை பேரதிர்வில் பயந்து கூடு திரும்பாததால் பரிதவிக்கின்றன பச்சிளம் குஞ்சுகள்…

வேட்டை முடிந்து திரும்பும் முன் எழுந்த பெரும் கூச்சலால் பாறை இடுக்கில் மறைத்து வைத்திருந்த இன்னும் கண் திறவாக் குட்டிகளைக் காணாமல்
உறுமி அழுகிறது தாய்ச்சிறுத்தை…

வலசைப்பாதைகளை மறித்த கட்டடங்களால்
வழியிழந்த யானைக் குடும்பமொன்று
ஆனந்த நடனத்தின் அலறல் ஒலியால்
பேருடல் சுமந்து பிளிறி ஓடின….

நேற்றுப்பிறந்த மான் குட்டி இரைதேடிப் போன தாயில்லாமல் புதர்மறைவில்
தவித்துக் கொண்டிருக்கிரது…

அழிவாளருக்கு சேவகம் செய்யும்
அதிகாரக் கரங்களால் தடுக்கப் பட்டனர்
காலங்காலமாய் மலையேறும்
கடவுளின் பிள்ளைகள்..

தூங்கும் குழந்தை மருளும் என மின்விளக்கை ஏற்றத் தயங்கியவர்கள்..
உற்றார்க்கு ஆகாதென
உரக்கப்பேச விரும்பாதவர்கள்..
நாய் குட்டிக்காக பட்டாசைத் தவிர்ப்பவர்கள்.. வசீகர வார்த்தைகளில் வீழ்ந்து கூச்சமின்றிக் கூடிக் கூச்சலிட்டனர்…

இரைச்சல் காடானது அந்த ஈசன் மலை…

வெளிச்ச காடானது எம் வெள்ளிங்கிரி மலை
கலங்கி நின்றன கானக உயிர்கள்…

அந்த இரவில்
வேறு மலைக்கு வெளியேறினார் வெள்ளிங்கிரி ஆண்டவர்..

Thiyaga Rajan

Leave A Reply

%d bloggers like this: