இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஏ.கே. பத்மநாபன், மாநிலச் செயலாளர், ஜி. ராமகிருஷ்ணன், கட்சியின் முதுபெரும் தோழரும், சுதந்திரப்போராட்ட வீரருமான என். சங்கரய்யா மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு தமிழகம் முழுவதிலிமிருந்து 648 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இன்றைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
இந்தி திணிப்பை கைவிடுக – தாய்மொழி வளர்ச்சியை உறுதிபடுத்துக
மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவை ஒற்றைத் தேசியம் என்கிற  சட்டகத்தில் அடைக்க  முயலும் மத்திய இந்துத்துவ அரசின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள காலம் இது.
மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவை முன் வைத்து இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியை மைய அரசு வேகப்படுத்தியுள்ளது. அலுவல் மொழி என்பதை தேசிய மொழி என்பதாகத் திரித்து முன்வைக்கிறது.ஆங்கிலத்தின் இடத்தை படிப்படியாக அகற்றி இந்தியை மட்டும்  நிலைநிறுத்தும் வேலையை மோடி அரசு தீவிரப்படுத்துகிறது.
இந்திய  மக்கள் தொகையில் இந்தி பேசாத மக்களே பெரும்பான்மையினர். இந்தியைக் காட்டிலும் காலத்தால் பழமையான, செறிவு மிக்க இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழிகள் பல உண்டு. இவற்றை மத்திய ஆட்சியாளர்கள் ஒரு போதும் கணக்கில் கொண்டதே இல்லை.
பாஜக அரசு, ஒரு இனம், ஒரு தேசம், ஒரு மொழி என்கிற முழக்கத்துடன் இந்தியையும், அதன் திரைமறைவில் சமஸ்கிருதத்தையும், கல்வி, நீதி, நிர்வாகம் என  அனைத்து துறைகளிலும் திணிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள இந்தி மொழி தொடர்பான ஆணை, அப்பட்டமான மொழித் திணிப்பே ஆகும்.
இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிக் களம் கண்ட பாரம்பரியமிக்க தமிழக மக்கள் இன்று தீவிரமடைந்துள்ள இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழ வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மைய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் தமிழை தீர்ப்பு மொழியாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1958ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதும் தமிழகத்தில் இன்று வரை தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக ஆக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: தோழர்.சு.வெங்கடேசன்
வழிமொழிந்தவர்: தோழர்.எம்.ஜெயசீலன் (திருச்சி புறநகர்)
கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை விரைவுபடுத்துக
தொன்மையும் இளமையும் மிக்க தமிழ் மொழியின் சிறப்புக்களோடு தமிழ் சமூகத்தின் தொன்மை மிகு கலாச்சாரக் கூறுகளும் வரலாற்று அடையாளங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்துத்துவ பண்பாட்டைத் திணிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைக்கொண்டுள்ள மத்திய அரசு, ஹரப்பா நாகரிகத்துக்கு இணையான ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை  வெளிக்கொணர மறுக்கிறது. 2005ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் 12 ஆண்டுகளாகியும் வெளியிடப்படாமல் உள்ளது..
கீழடியில் நடத்தப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாய்வில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஓர் மதச்சார்பற்ற நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கிலிருந்தும் இந்திய வரலாற்றை மறு வரைவு செய்வதற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளதாக உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.அகண்ட பாரதம், ஆரிய வர்த்தம் என்கிற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை உடைத்து நொறுக்குகின்ற வலுவான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வைத் தொடர அனுமதி மறுத்து மூடிவிட்டது. உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஆய்வறிஞரை கட்டாய இடமாற்றம்  செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கலை இலக்கிய அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பியும் இயக்கங்கள் நடத்தியும் கூட எதையும் கேட்க மத்திய அரசு தயாராக இல்லை.நிறுத்தப்பட்டுள்ள கீழடி அகழ்வாய்வுப் பணியை மத்திய தொல்லியல் துறை உடனடியாக துவக்க வேண்டும் .
கீழடியின் தொல்லியல் மேடு பரவிக்கிடக்கும் 110 ஏக்கர் தனியார் நிலத்தை உரிய இழப்பீடு வழங்கி அரசு கையகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க இன்று வரை எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்க வில்லை. இதற்கான முயற்சி உடனடியாக துவக்கப்பட வேண்டும்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
தமிழக தொன்மைக்கு பெரும் சான்றாக திகழும் ஆதிச்சநல்லூர் கீழடி உள்ளிட்ட இடங்களில் விரிவான அகழ்வாய்வு செய்யவும், கள அருங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும், மாநில அரசும் இதற்கான அழுத்தத்தை தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாடு வலியுறுத்துகிறது..
முன்மொழிந்தவர்: தோழர். கே.ஜி.பாஸ்கரன் (நெல்லை)
வழிமொழிந்தவர்: தோழர். மு.கந்தசாமி (சிவகங்கை)
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள  வலியுறுத்தல்
மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் விவசாயிகள் விரோத கொள்கையின் விளைவாக நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக விவசாயிகளும் இதிலிருந்து தப்ப முடியவில்லை.
தமிழகத்தில் விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது தீவிரமடைந்துள்ளது. இதனால் சிறு-குறு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் விவசாயத்தை விட்டு வேறு பணிகளுக்கு விரட்டப்பட்டு வருகின்றனர்.  விவசாயிகள்  தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் தொடர்கிறது. கடன் கிடைக்காமை, பாசனம் உத்தரவாதமின்மை, லாபகரமான விலை கிடைக்காதது, இயற்கை இடர்பாடுகள்  போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். இத்தகைய நிலையில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
வேளாண்மை விளைப்பொருட்களுக்கு சுவாமிநாதன்குழு பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக விலை தீர்மானிக்கப்படுவதில்லை. அரசு அறிவித்த விலையும் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலைமை இருக்கிறது. 2016-17ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இன்னமும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு சாகுபடி பணிகளுக்கு பெரும்பாலான விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுக்காமல் அலைக்கழிககப்படுகின்றனர். விவசாயத்திற்கு மின் இணைப்புக்கோரி சுமார் எட்டு லட்சம் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறார்கள். வரிசை அடிப்படையில் மின் இணைப்பு வழங்காமல் சுயநிதி திட்டம், தக்கல் முறை என்று பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக அவர்களின் ஒப்புதல் பெறப்படாமலேயே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகுந்த அலட்சியத்தோடு அரசுகள் நடந்து கொள்கின்றன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல், மணிலா, பருத்தி போன்ற வேளாண் விளை பொருட்களுக்கு அரசு தீர்மானித்த குறைந்தபட்ச விலையை விட குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்குவதும், அதற்குரிய பணத்தையும் உடனே தராமல் இழுத்தடிக்கும் நிலை இருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு வெட்டிய கரும்புக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக தரவேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் பாக்கியை பெற்றத் தராமல் தமிழக அரசு தனது கடமையை தட்டிக்கழித்து வருகிறது.
பருவமழை குறைந்ததன் காரணமாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட பல மாவட்டங்கள் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக அரசு போதுமான தண்ணீர் தராத காரணத்தால் சுமார் எட்டு லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிக் கொண்டுள்ளது.  இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஷ் எடுக்க முயற்சிப்பதுடன் மத்திய அரசு இப்பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது வன்மையான கண்டத்திற்குரியது.  போதுமான மழை பெய்தாலும் அதை சேமித்து வைக்கும் நிலையில் நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் வளத்தை பெருக்க எந்த முன் முயற்சியும் இல்லை. இத்தகைய நிலையிலிருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க, மேம்படுத்த கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

 1. வேளாண் விளை நிலங்கள் குறிப்பாக நஞ்சை நிலங்கள் வேறு தேவைகளுக்காக மாற்றப்படுவது முற்றாக தடுக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் விவசாயிகளின் அனுமதி பெற்று சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையபகப்படுத்தும் போது நிலம் கையப்படுத்துதல் சட்டம் 2013ன்படி சந்தை மதிப்பில் 4 மடங்கு  இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
 2. தமிழகத்திலுள்ள மேட்டூர், வைகை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
 3. கடன் கோரும் அனைத்து சிறு – குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.
 4. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.
 5. மாநில அரசு அறிவித்த விலைப்படி தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பாக்கித் தொகை முழுவதையும் பெற்றுத்தர அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 6. காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகிப் போன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- இழப்பீடு வழங்க வேண்டும். ஒக்கி புயலால் அழிந்து போன ரப்பர், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
 7. பருவமழை குறைந்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
 8. விவசாயத்திற்கு மின் இணைப்புக் கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலவரையறை தீர்மானித்து வரிசை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
 9. விவசாயிகளுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்காமல் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கக் கூடாது. அது குறித்து முடிவெடுக்கும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
 10. வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு தீர்மானித்த விலை, உடனடியாக பணம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தவும் அங்கு நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் அரசு தலையிட வேண்டும்.
 11. நெல்லுக்கு குவிண்டால் 1க்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் 1க்கு ரூ.4000 மற்றும் அனைத்து வேளாண் விளைப்பொருட்களுக்கும் அரசு கட்டுப்படியான விலை அறிவிக்க வேண்டும்.
 12. காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலியம் மண்டலமாக அறிவித்திருப்பதை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

முன்மொழிந்தவர்:    ஆர். சச்சிதானந்தம் (திண்டுக்கல்)
வழிமொழிந்தவர்    சாமி நடராஜன் (தஞ்சை)
 
 
 
 

Leave a Reply

You must be logged in to post a comment.