டெஹ்ரான்:
ஈரான் நாட்டில், விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், 66 பேர் பலியாகியுள்ளனர்.ஏசெமன் விமான நிறுவனத்தின் ஹகூசு 72-500 விமானம், ஈரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுநர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுநர் என மொத்தம் 66 பேர் பயணித்துள்ளனர்.

இந்த விமானம், இஸ்பஹான் மாகாணத்தில் செமிரொம் நகரத்துக்கு அருகே சென்போது சக்ரோஸ் மலைகளில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும், மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரான குளிவந்த் கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அந்நாடு மீது சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஈரான் தனது விமானங்களை பராமரிப்பதற்கு போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply