மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை, 12 பேர் கொண்ட குழுவினர் இன்று இரண்டாம் கட்டமாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே கடைகள் தீப்பிடித்ததில் வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது.இதையடுத்துப் பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைப்பதற்காக, பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற முதன்மைப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட உயர்மட்டச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மண்டபம் இடிந்த பகுதியில் ஏற்கெனவே ஒருமுறை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாகக் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை, அறநிலையத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட 12 பேரும் தீவிபத்தால் மண்டபம் இடிந்த பகுதியில் இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வைத் தொடர்ந்து, மேற்கூரை, கல்தூண், சிற்பம் ஆகியவற்றின் உறுதித்தன்மை குறித்து, சிறப்புக் குழுவினர் 4 வாரங்களில் இந்துசமய அறநிலையத்துறையிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.