புதுதில்லி, பிப்.18-

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் துவங்கப்பட்டுள்ள “ராம் ராஜ் ரத யாத்திரை” கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் “ராம் ராஜ் ரத யாத்திரை” துவங்கப்பட்டுள்ளதானது கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ரத யாத்திரையை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளரால் பைசாபாத் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்,  பாஜக மேயர் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் கொடியசைத்துத் துவக்கி வைத்துள்ளார்.

புராணக் கதையான இராமாயணத்தில் ராமன் எந்தப் பாதையில் இலங்கைக்குச் சென்றானோ அந்தப் பாதையிலேயே இந்த யாத்திரையும் இருக்கப் போகிறதாம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தபோதிலும், அயோத்தியில் தாவாவுக்கு உரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான உறுதிமொழியை மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே தங்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரல் என்றும் அந்த சமயத்தில் அவர்கள்  பிரகடனம் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நாட்டில் ராம ராஜ்ஜியத்தை மீளவும் நிறுவிட வேண்டும் என்றும், பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணத்தின் போதனைகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக, ‘தேசிய இந்து தினம்’ அனுஷ்டிக்கப்படுவதற்காக,  வியாழக்கிழமையன்று வார விடுமுறை அளித்திட வேண்டும் என்றும் அந்நிகழ்ச்சிநிரலில் அவர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.

யாத்திரையின் பாதைகள், பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரம் ஆகியவற்றின் வழியாக வந்தபின்னர், கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நடைபெறக்கூடிய காலகட்டத்தில் சுமார் பதினைந்து நாட்கள் நடத்த இருக்கிறார்கள். பின்னர், அது கேரளம் வழியாக தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தை வந்து அடைகிறது.

இந்த யாத்திரை மதவெறித்தீயை விசிறிவிட வேண்டும் என்ற இழிநோக்கத்தோடும், ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்காக மதவெறி இந்துத்துவா வாக்கு வங்கி அரசியலை வலுப்படுத்துவதற்காகவும்தான் நடத்தப்படுகிறது.

நாட்டில் வகுப்புக்கலவரத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பதற்றத்தையும், வன்முறையையும், கலக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் உசுப்பிவிடுக்கூடிய ஆபத்துக்கள் இந்த ரத யாத்திரையால் ஏற்படும்.

மத நல்லிணக்கத்தை உத்தரவாதப்படுத்திடவும், எக்காரணம் கொண்டு அதற்குக் குந்தகம் விளையாத வகையிலும், மக்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத நிலையிலும் சட்டம் – ஒழுங்கு கருவிகள் அனைத்தையும் வலுப்படுத்திட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ரத யாத்திரைக்குப்பின்னே ஒளிந்திருக்கக்கூடிய நயவஞ்சக சூழ்ச்சிக்ளைத் தோலுரித்துக்காட்ட வேண்டும் என்று அனைத்து மதச்சார்பற்ற மற்றும் அமைதியை நேசிக்கும்  சக்திகளையும் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.