சிவகங்கை, பிப்.18-
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு, நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன. சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் வந்த கும்பலால்கத்தியை காட்டி மிரட்டி கடத்தப்பட்டார். பின்னர் அந்தக் கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடிபகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் தாயாரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சசிகலா, மாவட்டச் செயலாளர் சண்முகபிரியா, மாவட்ட துணைச் செயலாளர் தமயந்தி, மாவட்ட துணைத் தலைவர்மணியம்மா, காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசெயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் மதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.பி.முருகேசன், கே.போஸ், கே.வேங்கையா, வாலிபர் சங்க நிர்வாகிகள் தங்கராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து விட்டு வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகூறுகையில், ‘எனக்குப் படிக்க ரொம்ப ஆசையா இருக்கு, ஆனா எங்கம்மா தனியா கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தான் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்கிறேன்’ என்றார். சிறுமியின் தாயார் கூறுகையில், ‘இனி இந்த இடத்தில் இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து. படுபாதக செயலை செய்த 5 பேரில் இன்னும் 2 பேர் கைது செய்யப்படவில்லை. அவர்களால் எங்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் அவர்கள் மீது
ஏராளமான வழக்கு நிலுவையில் உள்ளன என்றார்.

சிறுமியையும் அவரது தாயாரையும் சந்தித்த தலைவர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தக்கப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு உடனடியாகமின் இணைப்பு, குடிநீர் வசதி,கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். படிப்பைப் பாதியில் நிறுத்திய சிறுமியின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அச்சிறுமிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தினமும் சுமார் 3 கி.மீ காட்டு வழியே சென்று படித்து வரும் 3 குழந்தைகளுக்கும் விடுதிவசதி ஏற்படுத்தி தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.