புதுதில்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் எங்கள் மீது அவதூறை அள்ளிவீசுகிறது என்று ஜேஎன்யு ஆசிரியர்கள் சங்கம் ஆழ்ந்த கவலை மற்றும் கலக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஜேஎன்யு நிர்வாகம் தங்கள் மீது அவதூறை அள்ளி வீசுகிறது மற்றும் இது எங்கள் மத்தியில் ‘ஆழ்ந்த கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்திட வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் நிர்வாகத்தைக் கோரி வருகின்றனர். ஆனால் இவை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திட நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஜேஎன்யு நிர்வாகம், பல்கலைக் கழகத்தின் சட்டத்தையும்,  செயல்முறைகளையும், நெறிமுறைகளையும் மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இதன் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமட்டுமல்ல,  சட்டவிரோதமானவைகளுமாகும்.

ஜேஎன்யு நிர்வாகம், தொடர்ந்து ஜேஎன்யு ஆசிரியர் சங்கத்தின் மீது அவதூறை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. இவை தொடர்பாக துணை வேந்தருடனும், நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திட வேண்டும் என்று கோரினால் பேச மறுக்கிறது.

மாணவர்கள் வருகையைக் கட்டாயப்படுத்துவது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றறிக்கைகளையும் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பல்கலைக் கழகத்தில் இதுவரை ஜனநாயக செயல்முறைகளின் மூலம் கல்வியாளர்களின் மேற்கொண்டுவந்த முடிவுகளையே மீளவும் அமல்படுத்திட முன்வரவேண்டும்.   ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் அகடமிக் கவுன்சில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி, வரும் பிப்ரவரி 23 அன்று கூட்டப்பட்டு, ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும்.

இதனை வலியுறுத்துவதற்காகவும், இது தொடர்பாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவும்,  அந்த சமயத்தில் பல்கலைக் கழகத்தில் தற்போதுள்ள அவலமான நிலையை ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகவும் வரும் 19ஆம் தேதி அன்று பல்கலைக் கழகத்தில் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெறும். அதில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: