அகர்தலா:
திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, எவ்வித அசம்பாவிதங்ளும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்தது.
வாக்குப் பதிவு முடிவடைந்த மாலை 4 மணி நிலவரப்படி 74 வாக்குகள் பதிவாகி இருந்தன. எனினும் ஏராளமானோர் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடைப்பெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், இவர்களுக்காக 3 ஆயிரத்து 214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடைப்பெற்றது. இதில், 180 மையங்களில் சோதனை முயற்சியாக வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான  வசதி செய்யப்பட்டிருந்தது.
வாக்குப் பதிவின் ஆரம்பத்தில் 12 மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவற்றுக்குப் பதிலாக உடனடியாக மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
சாரிலம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமேந்திர நாராயண் தேபர்மா மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைப்பெற்றது.
23 பெண் வேட்பாளர்கள் உட்பட 292 பேர் இதில் களம் கண்டனர்.இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த மாலை 4 மணி நிலவரப்படி 74 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013-ஆம் ஆண்டு பதிவான வாக்குகளை விட 17 சதவிகிதம் குறைவாகும்.வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த பின்னரும் ஏராளமானோர் வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்களும் வாக்களித்த பின்னரே, வாக்குப்பதிவு சதவிகிதம் முழுமையாக தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 3-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாரிலம் தொகுதிக்கு மார்ச் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.