சின்னாளபட்டி, பிப்.18-
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் கட்டகாமன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர், திண்டுக்கல்லில் உள்ளஅரசு உதவி பெறும் கல்லூரியான எம்விஎம் மகளிர் கல்லூரியில் தற்காலிககௌரவ விரிவுரையாளராக உள்ளார்.இவரை கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்கல்லூரியில் பணிபுரியும் துறைத் தலைவர் நாகநந்தினி என்பவர் சாதியை சொல்லித் திட்டி அடித்துத் துன்புறுத்திய பின்னர், கடந்த7.2.2018 அன்று பணிநீக்கம் செய்தார்.

இதைக் கண்டித்தும், செம்பட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் முன்னால் இருந்த அம்பேத்கர் படத்தைக் கிழித்த நபர்களை கைது செய்து, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரியும் செம்பட்டியில் எஸ்சி/எஸ்டி பணியாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மணிமுருகன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணி மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ராஜேஸ் வரி, அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட முருகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறும் போது, கடந்த 2016 ஆம் ஆண்டு அன்றுதகுதி அடிப்படையில் கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த அன்றிலிருந்து இன்று வரை துறைத் தலைவர் நாகநந்தினி என்பவர் என்னை சாதியை சொல்லித் திட்டினார். கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் என்னை அவரது அறைக்கு அழைத்து,

நீ தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவள் தானே என்று சாதியை சொல்லித் திட்டிஎன்னை அடித்தும் விட்டார். ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ பணம் கொடுத்தா? வேலைக் குச் சேர்ந்தாய் என்று சொல்லி மேலும் துன்புறுத்தினார். நான் இது பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தில்லி, சென்னை முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாநில உயர்க்கல்வி இயக்குநர் மற்றும் பல அதிகாரிகளிடம் புகார் கொடுத் தேன். இதனால் அவர்களுக்கு கடிதம் வந்தது. அதை உடனே என்னிடம் காண்பித்து இதெல்லாம் தவறான தகவல் என்று என்னிடம் எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். இதன் அடிப்படையில், கடந்த 7.2.2018 அன்று என்னைப் பணி நீக்கம் செய்ததாக வாய்மொழி உத்தரவில் கூறி என்னிடம் அதற்கான ஆணை எதுவும் வழங்காமல் என்னுடைய இடத்திற்கு வேறு ஒருவரை பணத்தை வாங்கிக் கொண்டு நியமித்து விட்டார்கள். நான் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். என்னை அடித்துத் துன்புறுத்திய துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணி கூறும்போது, முருகேஸ்வரியை அடித்துத் துன்புறுத்திய துறைத் தலைவர் மேல் நடவடிக்கை எடுக்கத்தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. இந்தப் போக்கு இன்னமும் நீடித்தால் அனைத்து மத்திய, மாநில அரசின் அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் மக்கள் கூட்டமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அம்பேத்கர் படத்தை கிழித்தவர்களை கண்டறிந்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.