கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக – கேரள எல்லையோரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு என்னும் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடும், கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

மலைக்காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையை சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சிறந்த கல்வியினை கொடுப்பதோடு அவர்களை விளையாட்டு, அறிவியல் ஆக்கம் என அனைத்து வகையிலும் மேம்படுத்தி பெருநகரப் பகுதியில் பல்வேறு வசதிகளோடு இயங்கும் பெரிய தனியார் பள்ளி மாணவ, மாணவிகளோடு போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு இந்த அரசுப்பள்ளியின் செயல்பாடு அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் நூறு சதவிகதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது பழங்குடியின மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது மேட்டுப்பாளையம், காரமடை போன்ற நகர பகுதியில் இருந்தும் கூட பலரும் இப்பள்ளியில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டி வருகின்றனர். பொது தேர்வுகளை சந்திக்கவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முடிந்த பின் சத்தான சிற்றுண்டி வழங்கி மாலை நான்கு முதல் ஆறு மணிவரை இரண்டு மணிநேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் இப்பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், தினசரி அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு தவறாமல் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலம் அழைப்பு விடுத்து மாணவர்களை படிக்க எழுப்பிவிடுமாறு பணிப்பதோடு, அவர்களோடு இன்று என்ன படிக்க வேண்டும் என சிறு கலந்துரையாடலும் நடத்துகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த ஊக்கமே சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களில் இருந்தும் கூட மாணவர்களை பள்ளிக்கு வர தூண்டுகிறது எனலாம். எப்போதும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து சிரமத்தை பொருட்படுத்தாமல் பில்லூர் அணையின் நீர்த்தேக்கத்தை பரிசல்கள் மூலம் கடந்தும் இப்பள்ளிக்கு பழங்குடியின மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தினசரி கல்வி கற்க வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜப்பான் – ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்லவதற்கு இப்பள்ளியில் பயிலும் ஒரு பழங்குடியின மாணவியும், இங்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை ஒருவரும் தேர்வாகியுள்ளது இந்த அரசுப்பள்ளியின் மற்றுமொரு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஜப்பான் – ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இருந்து அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிருந்தும் 96 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தமிழகத்தில் இருந்து ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி எம்.சவிதா மற்றும் இப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியை ஆர்.மகேஸ்வரி ஆகியோர் தேர்வாகி கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை என்ற பெருமையையும் இதன் மூலம் மகேஸ்வரி பெற்றுள்ளார். அடர்ந்த வனத்தின் நடுவே போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத இப்பகுதி மலைக்கிராம பழங்குடியின மக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்தும், நாற்பது கிலோமீட்டர் பேருந்துகளில் பயணித்தும் கோவை போன்ற நகரப்பகுதிக்கு செல்வதே மிக, மிக அரிதானது என்ற நிலையில், தங்களது கிராமத்தில் இருந்து ஒரு சிறுமி மத்திய அரசின் செலவில் விமானத்தில் பறந்து ஜப்பான் செல்ல உள்ளது இப்பகுதி மலைவாழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவி சவிதாவிடம் பேசியபோது, நான் தமிழக -கேரள எல்லையை ஒட்டியுள்ள காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தில் இருந்து தினமும் இருபது கிலோமீட்டர் பயணித்து வெள்ளியங்காடு அரசு பள்ளிக்கு கல்வி கற்க வருகிறேன். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்றேன். குறிப்பாக அறிவியல் பாடத்தில் நான் முழு மதிப்பெண்கள் பெற்றதன் காரணமாக தற்போது அறிவியல் சார்ந்த கல்வி சுற்றுலாவிற்காக ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளது அளவு கடந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. என்னை விட எனது பள்ளி ஆசிரியர்களே மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நான் ஜப்பான் நாட்டிற்கு செல்லவுள்ளது எங்களது மலைக்கிராமத்தில் மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள அனைத்து மலைக்கிராம மக்களுக்கும் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முழுமையான காரணம் எனக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய எனது பெற்றோரும்தான். எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு பிற பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பெரும் ஊக்கமாகஅமையும் என்றார்.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ள ஒரே ஆசிரியையான மகேஸ்வரியிடம் பேசியபோது, பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே ஆர்வமுடன் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெள்ளி உள்ளிட்ட அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் சரியாக திட்டமிட்டும் ஒருங்கிணைந்தும் பாடங்களை கற்றுத்தருகிறோம். பிறர் கவனத்திற்கு வராத மலைக்கிராமத்தில் இயங்கும் இந்த அரசுப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியையான என்னை மத்திய மாநில கல்வித்துறையினர் ஜப்பான் செல்ல தேர்வு செய்துள்ளது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

-இரா.சரவணபாபு

Leave a Reply

You must be logged in to post a comment.